7 வயது மகனின் உயிரைப் பறித்த காய்ச்சல்.. பெற்றோர் எடுத்த துயர முடிவு.. சோகத்தில் மூழ்கிய கோவை
கோவை: கோவை மாவட்டம், வேடம்பட்டி பகுதியில் 7 வயது மகன் வைரஸ் காய்ச்சல் தாக்கி உயிரிழந்த நிலையில், மகன் உயிரிழந்த துக்கம் தாளாமல் தாய், தந்தை எடுத்த விபரீத முடிவால் மாவட்டமே அதிர்ந்து போயுள்ளது.
குழந்தைகள் மீது ஒவ்வொரு பெற்றோருமே தங்களது உயிரை வைத்து வளர்க்கின்றனர். அந்தக்கால பெற்றோருக்கும், இந்த காலத்தில் உள்ள பெற்றோருக்கும் ஏகப்பட்ட வேறுபாடுகள் உள்ளன. பாசம் ஒன்றுதான் என்றாலும் வளர்ப்பு முறை என்பது முற்றிலும் மாறிப் போயுள்ளது.

கடந்த காலங்களில் அப்பாவின் முன்பு நின்று பேசுவதற்கே பயப்பட்டு, அம்மாவை தூது அனுப்பிய காலம் எல்லாம் மலையேறிப் போய்விட்டது. இப்போதுள்ள குழந்தைகள் தங்களுக்கு எந்தவொரு தேவையாக இருந்தாலும், பிரச்னையாக இருந்தாலும் அதனை நேரடியாக பெற்றோர்களிடம் மிகச் சாதாரணமாக கூறும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்த தலைமுறை சுத்தமாக சரியில்லை. குழந்தைகளுக்கு மிகவும் செல்லம் கொடுக்கின்றனர் என்று ஒருபுறம் பெரியவர்கள் புலம்பினாலும், மாறி வரும் சூழலுக்கேற்ப ஆண், பெண் பேதமின்றி பல வீடுகளில் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை தாய், தந்தை இருவருமே எடுத்துக் கொள்கின்றனர். இந்த அதீத பாசமே ஒருகட்டத்தில் சில விபரீத முடிவுகளுக்கு பெற்றோர்களை கொண்டு போய்விடுகிறது.
அந்த வகையில், கோவை மாவட்டம், வேடம்பட்டி பகுதியில் 7 வயது மகன் வைரஸ் காய்ச்சல் தாக்கி உயிரிழந்த நிலையில், மகன் உயிரிழந்த துக்கம் தாளாமல் தாய், தந்தை எடுத்த விபரீத முடிவு பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகாசி பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி அவரது மனைவி வக்தசலா. இவர்கள் இருவரும் கோவை,வேடம்பட்டி பகுதியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 2 ஆம் தேதி கோவை, காந்திபுரம் பகுதியில் உள்ள அம்பிகா லாட்ஜில் அறை எடுத்து தங்கியுள்ளனர். நேற்று அறையை காலி செய்ய ஹோட்டல் ஊழியர் கதவை தட்டி பார்த்தும் கதவு திறக்கவில்லை.
இதையடுத்து, அந்த ஊழியர் மாற்று சாவியைக் கொண்டு அறையை திறந்து பார்த்துள்ளார். அப்போது அவர்கள் இருவரும் வாயில் நுரை தள்ளிய நிலையில் உயிரிழந்து கிடப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து காட்டூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் இருவரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து உயிரிழந்த பழனிச்சாமியின் அண்ணன் முருகேசனிடம் தகவல் தெரிவித்தனர். பின்னர், காவல் துறை மேற்கொண்ட விசாரணையில் அவர்களுக்கு 7 வயதில் ஒரு மகன் இருந்ததாகவும், வைரஸ் காய்ச்சல் வந்து இறந்து போனதால் இருவரும் மனமுடைந்து இருந்ததும் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த கோவை, காட்டூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications