4 மண்டலங்களிலும் இருந்தும் தமாகா போட்டி.. எடப்பாடி பழனிசாமி நெருக்கும் ஜிகே வாசன்.. என்ன நடந்தது?
கோவை: தமிழ்நாட்டின் 4 மண்டலங்களில் இருந்தும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் ஒலிக்கும் வகையில் தேர்தல் வியூகம் அமைக்கப்பட்டு வருவதாக அக்கட்சியின் தலைவர் ஜிகே வாசன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே தனிச் சின்னத்தில் தான் தமாகா போட்டியிடும் என்று கூறிய ஜிகே வாசன், இம்முறை கூடுதல் தொகுதிகளை பெற அழுத்தம் கொடுத்து வருவது தெரிய வந்துள்ளது.
சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர்கள் தேர்வு மும்முரமாக நடந்து வருகிறது. என்டிஏ கூட்டணி இணக்கமாக இருப்பதற்கு தமாகா தலைவர் ஜிகே வாசன் முக்கியக் காரணமாக அமைந்துள்ளார். ஏனென்றால் அமித்ஷா மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையிலான கருத்துக்கள் ஜிகே வாசன் மூலமாகவே பரிமாற்றம் செய்யப்பட்டது.

இதனால் ஜிகே வாசனுக்கு இம்முறை கூடுதலாக சில தொகுதிகளை ஒதுக்க அழுத்தம் கொடுத்து வருகிறார். தமாகாவுக்கு சட்டசபையில் ஒரு உறுப்பினர் கூட இல்லாத சூழலில், இம்முறை சட்டசபையில் இடம்பெற வேண்டும் என்று தீவிரமாக இருக்கின்றனர். அதேபோல் பாஜகவிடம் ஜிகே வாசன் ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறார். இதற்கும் பாஜக சம்மதம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.
கூட்டணிக்கு பாஜக தலைமை இல்லையென்றாலும், கூட்டணியில் இருக்கும் கட்சிகளின் தேவைகளையும் பாஜக நிறைவேற்றி வருவது பேசுபொருளாகி இருக்கிறது. இதன் காரணமாகவே அதிமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் நேரடியாக பியூஷ் கோயலை சந்தித்து கூட்டணியை உறுதி செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜிகே வாசன் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் பயணித்து வருகிறார்.
அந்த வகையில் கோவையில் தமாகா நிர்வாகிகளுடன் ஜிகே வாசன் ஆலோசனை நடத்தினார். இதன்பின் ஜிகே வாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், என்டிஏ கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. தென் மாநிலங்களில் தமிழ்நாட்டில் தான் சட்டம் ஒழுங்கு பாதிப்பு அதிகமாக உள்ளது. திமுக ஆட்சியால் இதனை கட்டுப்படுத்த முடியவில்லை. என்டிஏ கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும்.
அப்போது இன்னும் வலிமை அடைவோம். அதன்பின் கட்சிகளுக்கான தொகுதி எண்ணிக்கை, தொகுதி, வேட்பாளர்கள் அறிவிப்பு ஆகியவை நடக்கும். அதேபோல் சட்டசபைத் தேர்தலில் 4 மண்டலங்களில் இருந்தும் தமாகாவின் குரல் ஒலிக்க வேண்டும். அதற்கேற்ப வியூகங்கள் அமைத்து வருகிறோம். இந்த முறை சொந்த சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications