கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை வருமா வராதா? திமுக எம்.பி கேள்விக்கு மத்திய அரசு சொன்ன பதில்!
கோவை: கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் திட்டம் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் திமுக எம்.பி. பி.வில்சன் எழுப்பிய கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் பதில் அளித்துள்ளார்.
தமிழகத்தில் மதுரைக்கு அடுத்ததாக கோவையில் மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவமனையை நிறுவ வேண்டும் என தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற 15வது சுகாதாரத்துறை மாநாட்டில் கலந்து கொண்ட தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மத்திய அரசின் நிதி பங்களிப்பில் கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வரவேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.

இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், திமுகவைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க சாத்தியக் கூறுகளை மத்திய அரசு ஆராய்ந்துள்ளதா? என எழுத்துப் பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி கட்டுமான பணிகள் எப்போது தொடங்கும்? கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கவேண்டும் என்ற கோரிக்கை மீதான மத்திய அரசின் நிலை என்ன? மருத்துவ கல்வியின் தேவை அதிகரித்திருப்பதை கருத்தில் கொண்டு ஒன்றிய அரசு புதிய கல்லூரிகள் தொடங்குவதற்கு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என திமுக எம்.பி வில்சன் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்துள்ள மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை இணையமைச்சர் அமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ், "தற்போது வரை தமிழகத்தில் மதுரை உள்பட நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்களில் 22 எய்ம்ஸ் மருத்துவமனைகளை கட்ட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பிரதான் மந்திரி ஸ்வஸ்திய சுரக்ஷா யோஜனா (PMSSY) திட்ட நிலவரப்படி தற்போது கோவையில் எய்ம்ஸ் கட்ட எந்த வித திட்ட முன்மொழிவும் இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மதுரை மட்டுமன்றி தென் மாவட்ட மக்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது மதுரை எய்ம்ஸ். இந்த மருத்துவமனைக்கு நிர்வாக அலுவலகம் துவங்கப்பட்டு கட்டுமான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் (AIIMS Madurai) கட்டுமான பணிகள் நிறைவுற்று வருகின்ற 2027ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மக்களின் பயன்பாட்டிற்கு வரும் என ஆர்.டி.ஐ தகவல் மூலம் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
