அப்படியே ஜல்லிக்கட்டு போராட்டம் மாதிரி.. நாடு முழுக்க இருந்து குவியும் உணவுகள்.. பரபரக்கும் டெல்லி
டெல்லி: நீட் வினாத்தாள் கசிவை கண்டித்து கரப்பான் பூச்சி கட்சியினர் நடத்தி வரும் போராட்டத்திற்கு நாளுக்கு நாள் ஆதரவு அதிகரித்து வருகிறது. பல்வேறு தரப்பில் இருந்தும் மாணவர்கள் போராட்ட களத்திற்கு திரண்டு வருகிறார்கள். நேரில் வர முடியாதவர்களும் கூட தங்களால் முடிந்த வழிகளில் ஆதரவு தெரிவிக்கிறார்கள். பலரும் போராட்ட களத்தில் இருக்கும் மாணவர்களுக்கு ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து ஆதரவு தெரிவித்தனர்.
மாணவர் போராட்டத்திற்கு நாடு முழுக்க ஆதரவு அதிகரித்து வருகிறது. நேரடியாக களத்திற்கு வர முடியாத பலரும் கூட போராட்ட களத்தில் இருக்கும் மாணவர்களுக்கு உணவுகளை ஆர்டர் செய்வது போன்ற தங்கள் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள. இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது.

உணவு டெலிவரி
அதில் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களுக்கு ஆன்லைனில் டெலிவரி தளங்கள் மூலம் தொடர்ந்து உணவு வந்து கொண்டே இருக்கிறது. இணையத்தில் முன்பின் அறிமுகமில்லாத பலர் ஆன்லைனில் பணம் செலுத்தி, போராட்டக்காரர்களுக்கு உணவு அனுப்பியுள்ளனர். ஸ்விக்கி, ஜொமேட்டோ உள்ளிட்ட உணவு டெலிவரி செயலிகள் மூலம் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு பலரும் உணவு அனுப்பினர்.
அதில் குறிப்பாக ஒரு சம்பவம் சமூக வலைதளங்களில் அதிக கவனம் பெற்றுள்ளது. நேற்றிரவு கனமழை பெய்து கொண்டிருந்த போதிலும் ரயின் கோட் அணிந்திருந்த, ஜொமேட்டோ டெலிவரி ஊழியர் ஒருவர், உணவை போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு கொண்டு வந்து வழங்கினார். அந்த உணவை மும்பையை சேர்ந்த ஒருவர் ஆர்டர் செய்திருந்தாராம். அதாவது டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்காக முன்பின் தெரியாத ஒருவர் மும்பையில் இருந்தபடி உணவை ஆர்டர் செய்திருக்கிறார்.
வீடியோ
ஜொமேட்டோ டெலிவரி ஊழியரின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் அவர், "அனுஜ் ராவத் என்ற நபர் மும்பை, மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர். ஜந்தர் மந்தரில் பசியுடன் இருக்கும் யாருக்காவது இந்த உணவை வழங்குங்கள் என்று அவர் கூறினார். அதற்கான பணத்தை ஏற்கனவே ஆன்லைனில் செலுத்திவிட்டார்" என்று அந்த டெலிவரி ஊழியர் கூறுகிறார்.
இதையடுத்து வீடியோ எடுத்த போராட்டக்காரர்கள் உணவை ஆர்டர் செய்த அனுஜ் ராவத்துக்கும், மழையிலும் உணவை கொண்டு வந்த ஜொமேட்டோ டெலிவரி ஊழியருக்கும் நன்றி தெரிவித்தனர். அங்கிருந்த பெண் டெலிவரி ஊழியருக்கு நன்றி சொல்ல .. சுற்றியிருந்தவர்கள் கைதட்டி டெலிவரி ஊழியரை பாராட்டினர்.
குவியும் உணவுகள்
மும்பையை சேர்ந்த அனுஜ் ராவத் மட்டுமல்லாமல், பலரும் இதுபோல மாணவர்களுக்கு உணவு அனுப்பினர். அதிகாலை 2.15 மணியளவில்.. மெக்டொனால்ட்ஸ் உள்ளிட்ட உணவகங்களில் இருந்து பல உணவுகள் போராட்ட களத்திற்கு வந்து கொண்டே இருந்தது. இது தொடர்பாக போராட்ட களத்தில் இருக்கும் ஒரு நபர், "ஜொமேட்டோ, ஸ்விக்கி மூலம் உணவு வந்து கொண்டே இருக்கிறது.. இங்கு போராட்டத்தில் இருக்கும் மாணவர்களுக்கு எந்த சிரமமும் ஏற்படக் கூடாது என்பதற்காக மக்கள் தொடர்ந்து உதவி செய்து வருகின்றனர்" என்று கூறினார்.
This is the India we refuse to lose 🥹❤️
— Siddharth (@SidKeVichaar) July 21, 2026
People sitting miles away are ordering food through Zomato and Swiggy, asking delivery partners to feed hungry protesters at Jantar Mantar
That is the Idea of India 🇮🇳 pic.twitter.com/xu49GJNmJM
இதேபோல் இன்ஸ்டாகிராமில் வெளியான மற்றொரு வீடியோவில், போராட்டக்காரர்களுக்கு இலவசமாக டீ மற்றும் டிபன் கூட வழங்கி வருகிறார்கள். இதற்கு முன்பும், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு பிளிங்கிட், இன்ஸ்டாமார்ட் உள்ளிட்ட தளங்கள் மூலம் சிற்றுண்டி மற்றும் டீ, காபி அனுப்பப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
போராட்டம்
டெல்லி போராட்ட களத்தில் நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வருகிறது. முன்னதாக நேற்று பிற்பகலில் ஜந்தர் மந்தரில் அமைக்கப்பட்டிருந்த முக்கிய போராட்ட மேடையை போலீசார் அகற்றினர். அதன்பின் போராட்டக்காரர்களை அப்பகுதியில் இருந்து வெளியேற்றினர். இதற்காக தடியடியும் கூட நடத்தப்பட்டது. நாள் முழுவதும் நீடித்த இந்த தடியடியில் பலர் காயமடைந்தனர். சிலருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்த நிலையில் மருத்துவ உதவி வழங்கப்பட்டது.
இருப்பினும், நேற்றிரவு மீண்டும் போராட்ட களத்திற்கு திரும்பிய மாணவர்கள் தற்காலிக மேடை அமைத்து மீண்டும் போராட்டத்தை தொடங்கினர். மழை கொட்டிய போதிலும் மாணவர்கள் அங்கிருந்து நகரவில்லை. இன்றும் கூட மாணவர்கள் போராட்டம் தொடர்ந்தே வருவது குறிப்பிட்டதக்கது.


Click it and Unblock the Notifications
