"அனைத்து பெண்களுக்கும் மகளிர் உரிமை தொகை.. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் தருவோம்!" எஸ்.பி.வேலுமணி பரபர
கோவை: தமிழ்நாட்டில் வழங்கப்பட்டு வரும் மகளிர் உரிமை தொகை என்பது அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அனைத்து மகளிருக்கும் வழங்கப்படும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.
கடந்த சட்டசபைத் தேர்தல் சமயத்தில் திமுக பல்வேறு வாக்குறுதிகளைக் கொடுத்தது. அதில் முக்கியமான வாக்குறுதி என்றால் மகளிருக்கு மாதாமாதம் ரூ. 1000 உரிமை தொகை வழங்குவதாக அளித்த வாக்குறுதி. இதற்குப் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பும் கிடைத்தது.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பலருக்கும் இந்தத் திட்டத்தின் மீதே எதிர்பார்ப்பு இருந்தது. கடந்தாண்டு தகுதி வாய்ந்த அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.1000 உரிமை தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே இது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
அதிமுக போராட்டம்: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசைக் கண்டித்து மாநிலம் தழுவிய போராட்டத்தை நடத்த வேண்டும் என்று அதிமுக தலைவர்களுக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். திமுக அரசை மட்டுமின்றி பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுப்படுத்த தவறிய மத்திய பாஜக அரசைக் கண்டித்தும் இந்த போராட்டங்களை நடத்த எடப்பாடி உத்தரவிட்டிருந்தார்.
வேலி தாண்டிய வெள்ளாடு.. தம்பி அண்ணாமலை, தமிழகத்தில் பாஜக பருப்பு வேகாது".. கோவையில் பொங்கிய விந்தியா
எஸ்.பி. வேலுமணி: அதன்படி கோவையில் தொண்டாமுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட செல்வபுரத்தில் கோவை புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சரும் தொண்டாமுத்தூர் எம்எல்ஏவுமான எஸ்.பி. வேலுமணி கலந்து கொண்டார். அதில் பேசிய எஸ்.பி.வேலுமணி, "பிரச்சாரத்தின் போது பெண்களுக்கும் உரிமை தொகை கொடுக்கப் போவதாகச் சொன்னார்கள். ஆனால், ஆட்சிக்கு வந்ததும் அப்படி எந்தவொரு திட்டத்தையும் அவர்கள் அறிவிக்கவே இல்லை.
அனைவருக்கும் உரிமை தொகை: அதன் பிறகு எடப்பாடி பழனிசாமி இது குறித்து சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அதன் பின்னரே உரிமை தொகை குறித்து அறிவித்தார்கள். இப்போதும் கூட அனைத்து பெண்களுக்கும் உரிமை தொகை கிடைக்கவில்லை. பாதிப் பேருக்கு தான உரிமை தொகையைக் கொடுத்துள்ளார். ஆனால், கவலை வேண்டாம் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வந்ததும் நிச்சயம் அனைத்து பெண்களுக்கும் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும். ஏற்கனவே உரிமை தொகை பெறுவோருக்கும் கிடைக்கும். பெறாதவர்களுக்கும் கிடைக்கும்.
மேலும், திமுக கூட்டத்திற்கு வரவில்லை என்றால் பணத்தை நிறுத்துவிடுவார்கள் என்றெல்லாம் மகளிர் உரிமைத் தொகை பெறும் பெண்களிடம் திமுகவினர் போய் சொல்வதாகக் கேள்விப்பட்டேன். அவர்கள் என்ன சொந்த பத்தையை எடுத்துத் தருகிறார்கள். அது அரசின் பணம். உங்களுக்குச் சேர வேண்டிய பணம் தான்.
நிறுத்த முடியாது: மின்சார கட்டணம், சொத்து வரி என்று நீங்கள் செலுத்தும் பணத்தைத் தான் உரிமை தொகையாகத் தருகிறார்கள். எனவே, கூட்டத்திற்கு வரவில்லை என்பதால் எல்லாம் அந்த உரிமையைத் தொகையைத் தடுத்துவிட முடியாது. அப்படியே நிறுத்த முயன்றாலும் அதை நாங்கள் விட மாட்டோம்" என்று அவர் தெரிவித்தார். மேலும் அடுத்து வரும் தேர்தலில் பொதுமக்கள் திமுகவுக்கும் வாக்களிக்கக் கூடாது பாஜகவுக்கும் வாக்களிக்கக் கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.












Click it and Unblock the Notifications