தலைக்கு மேல் கத்தி.. கூலாக ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்த செந்தில் பாலாஜி.. என்ன நடக்குது?
கோவை: செந்தில் பாலாஜி, அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யக்கூடும் என தகவல்கள் பரபரத்து வரும் நிலையில் அவர் இன்று கோவையில் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்து போட்டியை ரசித்து வருகிறார்.
கோவை மாவட்ட தமிழர் பண்பாட்டு ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் செட்டிபாளையம் பகுதியில் இன்று நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 800 காளைகளும், 500 வீரர்களும் களமிறங்க உள்ளனர்.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் முதலிடம் பிடிக்கும் மாடுபிடி வீரருக்கு கார் பரிசாக வழங்க உள்ளார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின். பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்குவதற்காக இன்று கோவை வருகிறார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.
மசோதா தாக்கலில் மாற்றம்
அமைச்சர் பதவியில் செந்தில் பாலாஜி நீடித்திருப்பது தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவுள்ள நிலையில், சட்டப்பேரவையில் நேற்று அவருக்கு பதிலாக மசோதாவை அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்தது சலசலப்பை ஏற்படுத்தியது. அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதற்கான ராஜினாமா கடிதத்தை செந்தில் பாலாஜி கொடுத்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் உயிரி மருத்துவ கழிவுகளை கொட்டினால் விசாரணை இல்லாமல் சிறை தண்டனை விதிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிமுகம் செய்ய இருப்பதாக பேரவை நிகழ்வுகள் பட்டியலில் கூறப்பட்டிருந்தது. ஆனால், திடீரென அதில் மாற்றம் செய்யப்பட்டு, மசோதாவை சட்டத் துறை அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்தார். பேரவையில் செந்தில் பாலாஜி இருந்தும்கூட, மசோதாவை அவர் தாக்கல் செய்யாததால், சலசலப்பு ஏற்பட்டது.
பின்னணி என்ன?
சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் மசோதாக்கள் அனைத்தும் பேரவை நிறைவு நாளில் ஆய்வுக்கு எடுக்கப்பட்டு, நிறைவேற்றப்படும். மசோதாக்களை தாக்கல் செய்த அமைச்சர்கள் அன்றைய தினம் அவையில் இருக்க வேண்டும். அந்த வகையில், சட்டப்பேரவை கூட்டம் வரும் 29 ஆம் தேதி நிறைவடைய உள்ளது.
ஆனால், செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கு அதற்கு முன்பாக உச்ச நீதிமன்றத்தில் நாளை (ஏப்ரல் 28) விசாரணைக்கு வர உள்ளது. அதற்குள் அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதன் காரணமாகவே அவருக்கு பதிலாக அமைச்சர் ரகுபதி அந்த மசோதாவை தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது.
சுப்ரீம் கோர்ட்டில் நாளை
செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டிய அமலாக்கத்துறை, கடந்த 2023 ஜூன் 14 ல் அவரை கைது செய்தது. உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியதை தொடர்ந்து, 471 நாட்கள் சென்னை புழல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜி, 2025 செப்டம்பர் 26ல் விடுதலையானார். பின்னர் அமைச்சராகப் பதவியேற்றார்.
செந்தில் பாலாஜிக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு, உச்ச நீதிமன்றத்தில் கடந்த 23 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், "ஜாமீன் வேண்டுமா, அமைச்சர் பதவி வேண்டுமா என்பதை செந்தில் பாலாஜி ஏப்ரல் 28 ஆம் தேதிக்குள் முடிவு செய்து பதில் அளிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டனர்.
இன்று மாலை ராஜினாமா?
இதனால், அமைச்சர் பதவியில் செந்தில் பாலாஜி நீடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில் தான் அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்ய உள்ளதாகவும், இதற்கான கடிதத்தை அவர் ஏற்கனவே முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கிவிட்டதாகவும் தகவல்கள் பரபரத்து வருகின்றன. இதற்கிடையில் தான் இன்று ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்துள்ளார் செந்தில் பாலாஜி.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் முதலிடம் பிடிக்கும் மாடுபிடி வீரருக்கு கார் பரிசாக வழங்க உள்ளார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின். பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்குவதற்காக இன்று கோவை வருகிறார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கோவையில் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் முடிந்தபிறகு செந்தில் பாலாஜியின் ராஜினாமா அறிவிப்பு வெளியாகக்கூடும் என்றும் தகவல்கள் பரபரக்கின்றன.












Click it and Unblock the Notifications