சட்டை இன்றி.. அங்கவஸ்திரத்தோடு அண்ணாமலை.. வந்த வேகத்தில் கோவையில் வேலையை ஆரம்பிச்சிட்டாரே!
கோவை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை களமிறங்கி இருப்பதால் கோவை லோக்சபா தொகுதி 'ஸ்டார்' தொகுதி ஆகியுள்ளது. டெல்லியில் இருந்து வந்ததுமே வேலையை ஆரம்பித்துள்ளார் அண்ணாமலை.
லோக்சபா தேர்தல் தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளன. பாஜக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 20 சீட்களில் நேரடியாக களமிறங்குகிறது. பாஜகவில் அண்ணாமலை, எல்.முருகன், தமிழிசை சௌந்தரராஜன், நயினார் நாகேந்திரன், பொன் ராதாகிருஷ்ணன், ராதிகா சரத்குமார் என ஹெவி வெய்ட்கள் இந்த முறை வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளனர்.

கோவை வேட்பாளர்கள்: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, கோவை லோக்சபா தொகுதி வேட்பாளராக நிற்கிறார். திமுகவில் முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமார், அதிமுகவில் ஐடி விங் தலைவர் சிங்கை ராமச்சந்திரன் ஆகியோர் அண்ணாமலைக்கு எதிராக களமிறங்குகின்றனர். வேட்பாளர் பட்டியல் அறிவிப்பின்போது டெல்லியில் இருந்த அண்ணாமலை, நேற்று மாலை கோவை திரும்பினார். கோவை வேட்பாளராக வந்த அண்ணாமலைக்கு பாஜக தொண்டர்கள் பெரும் வரவேற்பு அளித்தனர்.
கோவை தொகுதியை பொறுத்தவரை இந்த முறையும், திமுக கூட்டணியில் சிபிஎம் தீவிரமாக முயற்சி செய்தது. மக்கள் நீதி மய்யமும் ரேஸில் இருந்தது. இருவரும் போட்டி போட்டுக் கொண்டிருந்த நிலையில், பாஜக சார்பில் அண்ணாமலை போட்டியிடுவதாக தகவல் வெளியானதும் திமுகவே நேரடியாக கோவையில் போட்டியிட்டு பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்ற முடிவை எடுத்தது.

அதிமுக vs திமுக vs பாஜக: அதன்படியே, கோவை முன்னாள் மேயர் முனைவர் கணபதி ராஜ்குமாரை வேட்பாளராக அறிவித்தது திமுக. கணபதி ராஜ்குமார், அதிமுகவில் இருந்து சில ஆண்டுகளுக்கு முன்பு திமுகவுக்கு வந்தவர். அமைதியானவர், அலட்டல் அரசியலில் ஆர்வம் அற்றவர். எந்த சர்ச்சையிலும் சிக்காத க்ளீன் இமேஜை கொண்டவர். படித்தவர். ஏற்கெனவே கோவை மேயராக இருந்ததால் மக்களிடமும் பரிட்சயமானவர். அந்த அடிப்படையில் கணபதி ராஜ்குமாரை இறக்கியது திமுக.
அதிமுக ஐடி விங் தலைவர் சிங்கை ராமச்சந்திரன் கோவை வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். மறைந்த முன்னாள் எம்எல்ஏ சிங்கை கோவிந்தராஜின் மகன் சிங்கை ராமச்சந்திரன். சிங்காநல்லூர் தொகுதி மக்களிடமும், கட்சியிலும் அவர்கள் குடும்பத்துக்கு தனி செல்வாக்கு உள்ளது. இந்நிலையில் தான் எஸ்பி வேலுமணியின் ஆதரவோடு சிங்கை ராமச்சந்திரன் களமிறக்கப்பட்டுள்ளார்.

கோவையில் அனல்: அண்ணாமலை நேரடியாக களமிறங்கி உள்ளதால் கோவை தேர்தல் களத்தில் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே வேட்பாளர் அறிவிப்புக்கு முன்பே பிரதமர் மோடி கோவை வந்து ரோட் ஷோ நடத்தினார். இந்நிலையில், வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு கோவையில் அண்ணாமலை தேர்தல் ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார். இன்று கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்து, தேர்தல் வேலைகளை தீவிரப்படுத்தியுள்ளார் அண்ணாமலை.
கோவை சித்தாப்புதூர் பகுதியில் பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோவிலில் அண்ணாமலை சாமி தரிசனம் செய்தார். இந்த ஐயப்பன் கோவில் இரண்டாம் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. ஐயப்பன் கோவிலில் பின்பற்றப்படும் உடையுடன் வந்து சாமி தரிசனம் செய்த அண்ணாமலை விளக்கேற்றி வழிப்பட்டார். மேலும் அங்குள்ள பசுவிற்கு கீரைகளை வழங்கி வணங்கினார்.

அய்யப்பன் கோவிலில் அண்ணாமலை: இது தொடர்பான படங்களை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, "இன்று காலை, இரண்டாம் சபரிமலை என்று அழைக்கப்படும், புகழ்பெற்ற சித்தாப்புதூர் ஐயப்ப சுவாமி திருக்கோவிலுக்குச் சென்று வழிபட்டு வணங்கினோம். ஶ்ரீசக்கரத்தின் மீது, தவக்கோலத்தில் அழகுற அமர்ந்திருக்கும் ஐயப்ப சுவாமி, அனைவர் வாழ்விலும் அன்பையும், மகிழ்ச்சியையும், சமாதானத்தையும் அருளட்டும் என்று வேண்டிக் கொண்டோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, நேற்று கோவை வந்ததுமே பேசிய அண்ணாமலை, "டெல்லி அரசியலில் இருக்க எனக்கு விருப்பம் இல்லை. தமிழக அரசியலில் தான் தொடர்ந்து இருப்பேன். பிரதமர் மோடி போட்டியிட உத்தரவிட்டுள்ளதால் நான் போட்டியிடுகிறேன். என் சண்டை, அறிவாலயத்தோடு, கோபாலபுரத்தோடு மட்டும் தான். எதிரில் நிற்கும் வேட்பாளர் பெயரைக் கூட சொல்ல மாட்டேன்.
ஓட்டுக்கு ஒரு ரூபாய் கூட நாங்கள் தர மாட்டோம். மக்களை நம்பி, கோவையில் மாற்றம் ஆரம்பமாக வேண்டும் என நம்பி வந்துள்ளோம். தமிழக முதல்வரே இங்கு வந்து உட்கார்ந்தாலும் பாஐக வெற்றி பெறும். கோவையை இந்தியாவின் மேப்பில் அல்ல, இன்டர்நேஷனல் மேப்பில் பதிய வைக்கப் போகிறோம்." எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications