பலூன் பறக்கவிடக் கூடாதுன்னு சட்டத்துல சொல்லியிருக்கா? போலீஸோடு மல்லுக்கட்டிய அதிமுக நிர்வாகிகள்!
கோவை: மதுரையில் வரும் 20ஆம் தேதி அதிமுக மாநாடு நடைபெறும் நிலையில், பொள்ளாச்சியில் அதற்கான ராட்சத விளம்பர பலூன்களை பறக்கவிடச் சென்ற அதிமுகவினரை போலீஸார் தடுத்து நிறுத்தியதால் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பலூன் பறக்கவிடக் கூடாதுன்னு சட்டத்துல சொல்லியிருக்கா? எழுதிக்கொடுங்க நாங்க போகிறோம் என அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் எகிறியதால் அந்த இடமே பரபரப்பாகி விட்டது. அங்கிருந்த பெண் எஸ்.ஐ.யிடம் எழுதிக்கொடுங்க தாயே நாங்க போறோம், நீங்க வம்பு பண்ணனும்னு முடிவு பண்ணீடீங்க, நாங்களும் அதற்கு தயாராக வேண்டியது தான் என பொள்ளாச்சி ஜெயராமன் சொன்னார்.

சார் நாங்க அந்த வார்த்தையையே சொல்லவில்லை. நீங்க தான் தேவையில்லாமல் பேசுறீங்க என பெண் எஸ்.ஐ. சொல்ல வாக்குவாதம் மேலும் முற்றியது. அங்கிருந்த காவலர்கள் இருவரையும் சமாதானம் செய்து வைத்தனர். இதேபோல் தான் 2 நாட்களுக்கு முன்னர் மதுரை திருமங்கலத்தில் அதிமுகவினர் நடத்தவிருந்த இருசக்கர வாகன பேரணிக்கு டி.எஸ்.பி.அனுமதி மறுத்ததுடன் வழக்குப்பதியப்படும் என எச்சரித்தார்.
இதனால் அங்கும் அவருக்கும் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி.உதயகுமாருக்கும் இடையே வாக்குவாதம் எழும் சூழல் உருவானது. இதனிடையே இந்த விவகாரம் எடப்பாடி பழனிசாமியின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவரிடமிருந்து ஒரு கண்டன அறிக்கை வெளியாகலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அதிமுக மாநாடுக்கு இன்னும் 4 நாட்கள் மட்டுமே முழுமையாக உள்ளதால் அதற்கான விளம்பரப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தச் சூழலில் பல இடங்களில் பொள்ளாச்சியை போலவே அதிமுக நிர்வாகிகளுக்கும், காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications