விஜய் காஸ்ட்யூமில் வாக்களித்த அண்ணாமலை.. பதறியடித்து சொன்ன விளக்கம்
கோவை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்று நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். தமிழகத்தில் இந்தமுறை 4 முனை போட்டி நிலவுகிறது. திமுக, அதிமுக, நாம் தமிழர், தவெக கட்சிகள் போட்டியிட்டுள்ளனர். கோவையில் வாக்களித்த அண்ணாமலை, விஜய் ஸ்டைலில் காஸ்ட்யூம் அணிந்திருந்தார். இதற்கு அவர் பதறியடித்து ஒரு விளக்கமும் கொடுத்துள்ளார்.
பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் வாக்களித்தார். விஜய்யை போல அண்ணாமலையும் வெள்ளை சட்டை சந்தன கலர் பேன்ட் அணிந்து வாக்களித்தார். தவெகவுக்கு ஆதரவளிக்கும் வகையில் இன்று அந்தக் கட்சியினர் விஜய்யை போலவே வெள்ளை சட்டை, சந்தன பேன்ட் அணிய திட்டமிட்டனர். அண்ணாமலையும் அதே காஸ்ட்யூமில் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அண்ணாமலை வாக்களிப்பு
வாக்கு செலுத்திய பிறகு அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், "தமிழக மக்கள் அனைவரும் தவறாமல் ஜனநாயக கடமையை செய்ய வேண்டும். வாக்குச்சாவடிகளில் அனைத்து வசதிகளும், சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யாரும் வாக்களிக்காமல் வீட்டில் இருந்துவிடாதீர்கள். தமிழ்நாடு அமைதியான மாநிலம்.
இங்கு அதிக வன்முறைகள் இருக்காது. கடந்த 3 நாட்களாக பல்வேறு பகுதிகளில் பணம், நகைகள் பட்டுவாடா செய்கிறார்கள். கோயில்களிலும் அதிக பணப்பட்டுவாடா நடக்கின்றன. சென்னையில் இருந்து தென் தமிழகத்திற்கு செல்லக்கூடிய பேருந்து வசதிகள் குறைவாக உள்ளன. கோவையில் இருந்து வெளியூர் செல்லும் பேருந்து வசதிகளும் குறைவாக உள்ளது என்று வாக்காளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
பட்டுவாடா புகார்
தேர்தல் ஆணையம் இன்னும் இந்த வசதிகளை சிறப்பாக செய்திருக்கலாம். பல்வேறு பகுதிகளில் பணம் பட்டுவாடா தைரியமாக நடக்கிறது வாக்காளர்களுக்கு அணிகலன்களை கொடுக்கிறார்கள். சாதாரண மக்கள் 50,000 ரூபாய்க்கு மேல் எடுத்துச் சென்றால் தேர்தல் ஆணையத்திடம் மாட்டிக் கொள்ள வேண்டியுள்ளது. பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் தவறிவிட்டது.
கோவை தெற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் போராட்டம் நடத்தியுள்ளார். அதையெல்லாம் வாக்காளர்களும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். எஸ்ஐஆர் பணி மிக நேர்மையாக தான் நடந்துள்ளது. இந்த தேர்தல் வழக்கமானதை காட்டிலும் அடுத்த கட்டத்திற்கு சென்று விட்டது. பணப்பட்டுவாடா மற்றும் நகைகளை தைரியமாக கொடுப்பதை நான் பார்த்ததில்லை.
விஜய் காஸ்ட்யூம்
தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக பல்வேறு தவறுகளை செய்கிறார்கள் அதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். நான் எப்போதுமே வந்தாலும் சந்த பேன்ட் வெள்ளை சட்டை அணிந்து தான் வெளியில் வருவேன். இதே ஆடையை தான் ஜெகன்மோகன் ரெட்டி விஜய் ஆகியோர் அணிகிறார்கள். நான் காவல் துறையில் இருந்து வெளியில் வந்ததிலிருந்து இந்த உடையை தான் அணிகிறேன்.
என்னை எந்தப் பக்கமும் சேர்த்து விடாதீர்கள். கோவையில் கடந்த மூன்று தினங்களாக தமிழகத்தில் விரும்பத் தகாத செயல்கள் நடைபெற்று உள்ளது திமுக அதனை செய்துள்ளது. அம்மன் அர்ஜுனன் கூறிய கருத்துக்களுக்கு நான் உடன்படுகிறேன். அனைவரும் முறைப்படி வாக்கு செலுத்துவார்கள் என்று நம்புகிறேன். இந்த தேர்தலில் ஜனநாயகம் தான் வெற்றி பெறும்.
அதிகாரிகள் செயல்பாடு
பணம் எப்போதும் வெற்றி பெறாது. மக்கள் சரியாக வாக்களித்தால் நல்லவர்கள் வெற்றி பெறுவார்கள். என்னதான் தேர்தல் ஆணையமாக இருந்தாலும் அதில் உள்ள கீழ்மட்ட அதிகாரிகள் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் தான். தேர்தல் ஆணையம் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை சரியாக செய்ய தவறிவிட்டது என்பது தான் என்னுடைய கருத்து
தேர்தல் நடைமுறை வருவதற்கு முன்பே செய்ய வேண்டியது எல்லாம் செய்து விட்டார்கள் தேர்தல் ஆணையம் அதனை கண்காணித்திருக்க வேண்டும். புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வாக்காளர்கள் மனசாட்சிக்கு உட்பட்டு வாக்களிப்பார்கள் என்று நம்புகிறேன்" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications