இந்தியாவிலேயே மோசமான எம்பி ஆ.ராசாதான்.. கோவையில் கொந்தளித்த அண்ணாமலை.. பிரமித்த மோடி
கோவை: இந்தியாவிலேயே மோசமான லோக்சபா உறுப்பினர் என்றால் அது திமுகவின் ஆ.ராசாதான் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
கோவையில் மேட்டுப்பாளையத்தில் நடந்த பாஜக பொதுக் கூட்டத்தில் நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன், கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை ஆகியோரை ஆதரித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசுகையில், திமுகவில் வாரிசு அரசியல்தான் ஓங்கி இருக்கிறது.

கருணாநிதியின் மகள் கனிமொழி, தங்கபாண்டியனின் மகள் தமிழச்சி, முரசொலி மாறனின் மகன் தயாநிதி மாறன், ஆற்காடு வீராசாமியின் மகன் கலாநிதி வீராசாமி, துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த், கே.என். நேருவின் மகன் அருண் நேரு, பொன்முடியின் மகன் சிகாமணி... வாரிசுகள்தான் எம்பியாக இருக்கிறார்கள். இதுதான் ஜனநாயகமா? , ஜனநாயகத்தை பற்றி திமுகவினர் எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம்.
திமுகவின் அப்பாக்கள் அமைச்சர்கள், மகன்கள் எம்பிக்கள், எம்எல்ஏக்கள், அவர்களுக்கு பிரச்சாரம் செய்வது முதல்வரின் மகன் உதயநிதி. 2ஜி அலைக்கற்றை மோசடியில் திகார் சிறை சென்றவர் ஆ.ராசா. அதன் பிறகு அடுத்த வாரமே கனிமொழியும் சிறையில் அடைக்கப்பட்டார்.
திமுக கூட்டணி வைத்த காங்கிரஸ் அரசாங்கத்தாலேயே இவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதிலும் இந்தியாவில் உள்ள நாடாளுமன்ற எம்பிக்களில் மிக மோசமான எம்பி ஆ.ராசாதான். பிரதமர் மோடியை தரக்குறைவாக பேசிய ஆ.ராசா, நீலகிரியில் டெபாசிட் வாங்கக் கூடாது.
தமிழகத்தில் பிறக்காத மறத் தமிழன் பிரதமர் மோடி. ஆனால் தமிழின் பெருமையை கும்மிடிப்பூண்டியை தாண்ட விடாமல் தடுத்தது திமுகதான். அடுத்த 7 நாட்களை முழுமையாக அர்ப்பணியுங்கள். கார்யகர்த்தாக்கள் இன்னும் ஒரு வாரம் வரை சாப்பிடாமல் உறங்காமல் கடுமையாக உழைத்தால்தான் பிரதமர் மோடி 3-ஆவது முறையாக இந்தியாவின் பிரதமராக முடியும்.
பிரதமர் மோடி 3ஆவது முறையாக பிரதமராக வர வேண்டும் என்பது அவருடைய குடும்ப நலனிற்காகவா? அவருடைய சுயநலத்திற்காகவா? அவருடைய உற்றார் உறவினரின் நலனிற்காகவா? என்றால் இல்லை. மோடி இந்த நாட்டுக்கு செய்ய வேண்டிய விஷயங்கள் இன்னும் நிறைய இருக்கின்றன.
எனவே பிரதமர் மோடி பிரதமராக வர வேண்டும் என்றால் கடுமையாக உழைக்க வேண்டும். பிரதமர் மோடி தமிழக மக்களுக்காக சுற்றி சுற்றி சுழன்று உழைக்கிறார். கடுமையான உழைப்பாளி என்பதால் ஓய்வின்றி நாடு முழுவதும் பிரதமர் மோடி மக்களை சந்தித்து வருகிறார். 400 தொகுதிகளில் பாஜக வெல்ல வேண்டும் என தமிழக மக்கள் மோடியை ஆசிர்வதிக்க வேண்டும்.
திமுக என்ற கூட்டத்திற்கு தலைவரான ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருவது பிடிக்கவில்லை. தமிழர்களிடம் அடைக்கலம் தேடி பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். உலகம் போற்றும் உத்தமர் பிரதமர் மோடி. நாட்டில் செயல்படாத அரசுக்கு தங்கப்பதக்கம் கொடுக்க வேண்டும் என்றால் அது திமுக அரசுக்குதான் கொடுக்க வேண்டும்.
திமுகவினர் ஓட்டுக்கு பணம் கொடுத்தால் அது போதைப் பொருள் விற்பனையில் இருந்து வந்த பணம் என்பதை மறந்துவிடாதீர்கள். உங்கள் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும். நம் மீது உள்ள பாசத்தால் பிரதமர் மோடி வேடந்தாங்கல் பறவை போல் நம்மை பார்க்க வந்துள்ளார். கோபாலபுரத்தில் பெருச்சாளி போல் ஒளிந்திருக்கவில்லை. இவ்வாறு அண்ணாமலை பேசினார்.












Click it and Unblock the Notifications