"பீஃப் விற்றால் அவ்வளவுதான்!" தள்ளுவண்டி கடை நடத்தியவரை மிரட்டிய.. பாஜக நிர்வாகி மீது பாய்ந்த வழக்கு
கோவை: கோவை உடையம்பாளையம் பகுதியில் தள்ளுவண்டியில் மாட்டிறைச்சி பிரியாணி விற்று வந்த தம்பதிக்கு அப்பகுதியைச் சேர்ந்த பாஜக நிர்வாகி மிரட்டல் விடுத்திருந்தார். இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பிய நிலையில், சம்பந்தப்பட்ட அந்த பாஜக நிர்வாகி மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்து முக்கிய நகரமாகக் கோவை இருக்கிறது. இதனால் வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும் கூட பலர் கோவைக்கு வேலைக்காக வருகிறார்கள்.

இப்படி பலதரப்பட்ட மக்களுக்கும் கோவைக்கு வசித்து வரும் நிலையில், அங்கு உடையம்பாளையத்தில் தள்ளுவண்டியில் பீஃப் பிரியாணி விற்ற தம்பதி மிரட்டப்பட்ட சம்பவம் பரபரப்பைக் கிளப்பியது.
பீஃப் பிரியாணி கடை:
அதாவது கோவை உடையம்பாளையத்தில் ரவி - அபிதா தம்பதியினர் தள்ளுவண்டிக் கடை ஒன்றை நடத்தி வருகிறார்கள். அங்குள்ள மூன்று சந்திப்பு பகுதியில் தள்ளுவண்டியை அமைத்து இவர்கள் மாட்டிறைச்சி உணவு கடையை நடத்தி வருகிறார்கள். அக்கம் பக்கத்தைச் சேர்ந்த பலரும் இந்த கடையில் இருந்து பீஃப் பிரியாணி வாங்கி சென்றுள்ளனர்.
இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த கடைக்கு வந்த பாஜக நிர்வாகி ஒருவர் மாட்டிறைச்சியை விற்பனை செய்யக்கூடாது என்றும் அந்த தள்ளுவண்டிக் கடையை நடத்தவே கூடாது என்றும் மிரட்டியுள்ளார். 10 பேருடன் வந்து கடையை அடித்து உடைத்துவிடுவேன் என்றும் பீஃப் கடை போடக்கூடாது என அவர் மிரட்டியுள்ளார்.
மிரட்டல்:
மாட்டிறைச்சி விற்கக்கூடாது என்று ஊர் கட்டுப்பாடு இருப்பதாகச் சொல்லி மிரட்டிய அந்த பாஜக நிர்வாகி, வேண்டுமானால் சைவ உணவுகளை விற்றுக் கொள்ளுங்கள் என்றும் கூறியதாகத் தெரிகிறது. பாஜக நிர்வாகி மிரட்டல் கொடுத்த வீடியோவை அங்கிருந்தர் வீடியோவாக எடுத்துப் பதிவிடவே அது சமூக வலைத்தளங்களில் டிரெண்டானது. பலரும் இந்தச் செயலுக்குக் கண்டனம் தெரிவித்தனர். மேலும், சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு:
இது தொடர்பாகக் கடை உரிமையாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். போலீஸ் விசாரணையில் மிரட்டல் விடுத்த நபர் பாஜக ஓபிசி அணி மாநகர செயலாளர் சுப்பிரமணி என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர் மீது இரு பிரிவினருக்கு இடையே வன்முறையைத் தூண்டுவது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஆதங்கம்:
முன்னதாக கடை நடத்தி வந்த ரவி - அபிதா தம்பதி கூறுகையில், "அந்த நபர் முதலில் கிறிஸ்துமஸ் நாளன்று வந்து மிரட்டினார்.. ஆனால், அப்போது அதை நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்தச் சூழலில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்து உடனடியாக கடையை காலி செய்ய வேண்டும் என்றும் இல்லையென்றால் கடையை உடைத்துவிடுவேன் என்றும் மிரட்டினார். இதனால் கடையில் சாப்பிட்டுக் கொண்டு இருந்தோர் பயந்து போனார்கள்.
வேண்டுமானால் இட்லி, தோசைக் கடை போட்டுக்கொள்ளுங்கள்.. பீஃப் கடை மட்டும் போடக் கூடாது என்று மிரட்டினார். எங்களுக்குத் தெரிந்த வேலையைத் தானே எங்களால் செய்ய முடியும். பக்கத்திலேயே சிக்கன் ரைஸ், மீன் கடைகள் உள்ளன. ஆனால், அதை எல்லாம் எதுவும் சொல்லாமல் எங்களிடம் மட்டும் வந்து மிரட்டுகிறார். பீஃப் என்பது தெரிந்தே எங்கள் கடைக்கு வந்து மக்கள் சாப்பிடுகிறார்கள்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications