கோவையில் பரபரப்பு.. பூத் மாறி சென்ற பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன்! என்ன நடந்தது - பரபர தகவல்
கோவை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கோவையில் பாஜக தேசிய மகளிரணி தலைவியும் கோவை தெற்கு தொகுதி சட்டசபை உறுப்பினருமான வானதி ஸ்ரீனிவாசன் வாக்களித்தார்.
Recommended Video
தமிழக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கிப் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு இன்று ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது.
இதைத் தொடர்ந்து வரும் பிப்ரவரி 22இல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ள நிலையில், மார்ச் 4இல் மேயர், நகர்மன்ற தலைவர்களைத் தேர்வு செய்யும் மறைமுகத் தேர்தல் நடைபெறுகிறது.

வாக்குப்பதிவு
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். தமிழகத்தில் சில இடங்களில் ஏற்பட்ட சிறு பிரச்சினைகளைத் தவிர பெரும்பாலான இடங்களில் அமைதியான முறையிலேயே வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. முதல்வர் ஸ்டாலின், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் காலையிலேயே தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.

கோவை
கோவை மாவட்டத்தைப் பொருத்தவரை கோவை மாநகராட்சி, 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கோவையில் மொத்தம் 811 நகர்ப்புற உள்ளாட்சி பதவி இடங்கள் உள்ள நிலையில், அதில் 9 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து கோவையில் இன்று 802 இடங்களுக்குத் தேர்தல் நடக்கிறது.

வானதி சீனிவாசன்
பாஜக தேசிய மகளிரணி தலைவியும் கோவை தெற்கு தொகுதி சட்டசபை உறுப்பினருமான வானதி ஸ்ரீனிவாசன் இன்று காலை கோவை டாடாபாத் பகுதியில் உள்ள காமராஜர் மெட்ரிக் பள்ளியில் அமைந்துள்ள 837ஆம் வாக்குச்சாவடிக்குச் சென்றார். அப்போது வாக்காளர் பட்டியலைச் சோதனை செய்த தேர்தல் அதிகாரிகள், அங்கு அவருக்கு வாக்கு இல்லை எனத் தெரிவித்தனர். இதையடுத்து தேர்தல் ஆணையத்தின் தளத்தில் செக் செய்த போதும் 837ஆம் வாக்குச்சாவடியே காட்டியது. இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.

வாக்குச்சாவடி மாற்றம்
இதையடுத்து தேர்தல் அதிகாரிகள் மீண்டும் செக் செய்த போது, வானதி சீனிவாசனுக்கு அதே பகுதியில் உள்ள சிஎம்எஸ் பள்ளியில் அமைந்துள்ள 825ஆவது வாக்குச்சாவடியில் வாக்கு இருப்பதாகத் தெரிவித்தார். இதையடுத்து சிஎம்எஸ் பள்ளிக்குச் சென்று வானதி சீனிவாசன் வாக்களித்துவிட்டுப் புறப்பட்டுச் சென்றார். வாக்களித்த பின்னர் அவர் தனது ட்விட்டரில், "வாக்கு, நமது கடமை - உரிமை. தவறாமல் வாக்களிப்போம் நேர்மைக்கு வாக்களிப்போம்" என்று பதிவிட்டுள்ளார்.

முறையான ஏற்பாடுகள் இல்லை
வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கோவை மாநகராட்சியில் வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், மக்கள் எளிதாக வாக்களிக்கத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. நான் முதலில் வாக்களிக்கச் சென்ற பள்ளியில் எனக்கு ஓட்டு இல்லை. வேறு பள்ளியில் எனது வாக்குச்சாவடி மாற்றப்பட்டு இருந்தது. இதையடுத்து அங்குச் சென்று வாக்களித்துள்ளேன். தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் கவனம் செலுத்தவில்லை" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications