மருதமலை முருகன் கோயிலில்.. நான்கு சக்கர வாகனங்களுக்கு கட்டாய இ-பாஸ்.. பாஜகவினர் எதிர்ப்பு
கோவை: கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நான்கு சக்கர வாகனத்தில் வருபவர்களுக்கு கட்டாய இ-பாஸ் எனும் ஆன்லைன் புக்கிங் கொண்டு வர அறங்காவலர் குழு முடிவு செய்துள்ளது. இதில் ஆட்சேபனைகள் இருந்தால் தெரிவிக்கலாம் என்று கோயில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ள நிலையில் பாஜகவினர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
கோவையின் நகர் பகுதியில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் சரிவில் அமைந்துள்ளது மருதமலை. இப்பகுதியில் மருத மரங்கள் நிறைந்து காணப்படுவதால் மருதமலை என்று அழைக்கப்படுகிறது. மருதமலை மேல் அமைந்துள்ள முருகப்பெருமானின் கோயில் அந்த காலத்தில் கொங்கு வேட்டுவ மன்னர்களால் பராமரிக்கப்பட்டு வந்தது. மருதமலை முருகன் கோயில் தற்போது தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை பராமரித்து வருகிறது.

மருதமலை முருகன் கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகிறார்கள். விஷேச நாட்களிலும், விடுமுறை நாட்களிலும் இங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதும். மருதமலையில் அமைந்துள்ள முருகன் கோவிலை சுற்றிலும் அடர்ந்த வனப்பகுதியாகும். 1200 ஆண்டுகள் பழமைவாய்ந்த இத்திருக்கோயில் முருகப்பெருமானின் ஏழாம் படை வீடாகக் கருதப்படுகிறது. பேரூர் புராணம், திருப்புகழ் மற்றும் காஞ்சிப் புராணங்களில் மருதமலை சிறப்பித்து கூறப்பட்டுள்ளது. மருதமலை சுப்பிரமணிய சுவாமி மருதாசலபதி, மருதப்பன், மருதமலையான் என பல பெயர்களால் போற்றப்படுகிறார்.
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.போதிய இடவசதி இல்லாத காரணத்தால் அடிவாரத்தில் அதனை முறைப்படுத்தும் விதமாக ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
காலை 6:00 மணி முதல் மதியம் 1 மணி வரை 150 நான்கு சக்கர வாகனங்களையும், மதியம் 1 மணி முதல் 6 மணி வரை 150 நான்கு சக்கர வாகனங்களை மட்டும் அனுமதிக்கலாம் என அறங்காவலர் குழு தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. இதுகுறித்து ஆட்சேபனை எதுவும் இருந்தால் தெரிவிக்க வேண்டும் என மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் அறங்காவலர் குழுவின் தீர்மானத்திற்கு கோவை மாவட்ட பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்த கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளி மாநில பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பக்தர்களின் வசதியை மேம்படுத்தாமல் இதுபோன்ற பக்தர்கள் செல்லும் போது தடை விதித்து, கட்டாய இ-பாஸ் வேண்டும் என்றும் அறிவித்துள்ளனர்.
இதனால், சாமியை நேரில் சென்று தரிசனம் செய்து தங்கள் குறைகளை கூறி அதனை சரி செய்து நிறைவேற்றி தர வேண்டும் என எண்ணி செல்லும் பக்தர்களை அலட்சியப்படுத்தும் விதமாகவும், கடவுள் நம்பிக்கையை சீர்குலைக்கும் விதமாகவும் தொடர்ந்து தமிழக அரசும், இந்து சமய அறநிலைத்துறை ஊழியர்களும் செயல்படுகின்றனர் என பா.ஜ.க மாவட்ட தலைவர் ரமேஷ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மருதமலை மலைப் பாதையில் நான்கு சக்கர வாகனங்களுக்கு நாளை தடை: நாளை விடுமுறை தினம் என்பதால் அதிக அளவிலான பக்தர்கள் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வருகை புரிவார்கள என்பதால் செப்டம்பர் 29 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மருதமலை மலைப் பாதையில் நான்கு சக்கர வாகனங்களில் செல்ல பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
பக்தர்கள் இருசக்கர வாகனங்கள் மூலமாகவும், படிகள் வழியாகவும், கோயில் பேருந்துகள் மூலமாகவும் சென்று சுவாமியை தரிசனம் செய்யலாம் என்று கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.











Click it and Unblock the Notifications