Get Out Amit Shah:கோவையில் அமித்ஷாவுக்கு கறுப்பு கொடி-254 பெரியாரிஸ்டுகள் கைது-காங்கிரஸும் போராட்டம்
கோவை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தமிழ்நாடு வருகையைக் கண்டித்து கோவை மாநகரில் பல இடங்களில் பெரியார் தொண்டர்கள் கறுப்பு கொடி காட்டி போராட்டம் நடத்தினர். இதனையடுத்து மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு கறுப்பு கொடி காட்டி போராட்டம் நடத்திய 254 பெரியார் தொண்டர்களை போலீசார் கைது செய்தனர்.
கோவையில் நடைபெறும் மகா சிவராத்திரி விழா மற்றும் பாஜக மாவட்ட அலுவலகங்கள் திறப்பு விழா நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று கோவை வருகை தந்தார்.

தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை தர மறுப்பது, மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தி மொழியை திணிப்பது உள்ளிட்ட மத்திய பாஜக அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கோவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கறுப்பு கொடி காட்டும் போராட்டத்தை பெரியார் தொண்டர்கள் நேற்று நடத்தினர்.
கோவை பீளமேடு பகுதியில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் கழகம், ஆதித் தமிழர் பேரவை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, புரட்சிகர இளைஞர் முன்னணி ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். இந்தப் போராட்டத்துக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கோவை. ராமகிருட்டிணன் தலைமை வகித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய கோவை ராமகிருட்டிணன், மாணவர்களுக்கு கல்வி நிதியை மத்திய பாஜக அரசு தர மறுக்கிறது; இந்தி மொழியை தமிழ்நாட்டில் திணிக்கிறது; இதன் மூலம் தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது மத்தியில் ஆளும் பாஜக அரசு என்றார். இதனைத் தொடர்ந்து அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக பீளமேடு பகுதியில் 170 பெரியார் தொண்டர்களை போலீசார் கைது செய்தனர்.

திராவிடர் விடுதலை கழகம்
இதேபோல கோவை பீளமேடு ஹோப் கல்லூரி பகுதியில் திராவிடர் விடுதலை கழகத்தினரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக கறுப்புக் கொடி காட்டும் போராட்டத்தை நடத்தினர். இதனையடுத்து அப்பகுதியில் 84 பெரியார் இயக்க தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். கோவையில் நேற்று இரு இடங்களிலும் மொத்தம் 254 பெரியார் இயக்க தொண்டர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இதனால் கோவையில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

காங்கிரஸ் போராட்டம்
மேலும் மத்திய அரசின் புதியக் கல்விக்கொள்கையால் தமிழ்நாட்டின் மாணவர்களுக்கு ஆபத்து என்று அதை ஏற்கவில்லை என்பதால் தமிழ்நாட்டிற்கு கல்விக்கு ஒதுக்கிய நிதி ரூபாய் 2152 கோடியை விடுவிக்காததைக் கண்டித்தும், இந்திய நாட்டின் சட்டசாசனத்தை உருவாக்கிய அண்ணல் அம்பேத்கர், முன்னாள் பிரதமர், இரும்பு பெண்மணி அன்னை இந்திரா காந்தி அவர்களை அவமரியாதை செய்ததை கண்டித்தும் கோயம்புத்தூர், காந்தி பூங்காவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு கறுப்பு கொடி காட்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
— Ku Ramakirutinan (@ramakiruti97767) February 25, 2025


Click it and Unblock the Notifications
