வாடகை வீட்டுதாரர்களுக்கு நிம்மதி! ஒருவர் பெயரில் அதிக மின் இணைப்பு? தமிழக மின்சார வாரியம் சொல்வதென்ன
கோவை: ஒரே வீட்டிற்கு பல்வேறு இணைப்புகள் பெற்றிருந்தால், விதிமுறைகளின்படி அவை ஒருங்கிணைக்கும் வகையில் மின்வாரிய பணியாளர்கள் கள ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன், வாடகைதாரர்கள், அப்பார்ட்மென்ட்வாசிகளுக்கு நிம்மதி தகவல் ஒன்றும் வெளியாகியிருக்கிறது.
நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை, அனைத்து வீட்டு மின் நுகர்வோர்களுக்கும் 100 யூனிட் வரை விலையில்லா மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படுகிறது.. குடிசை இணைப்புகளுக்கும் தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது..

இலவச மின்சாரம்: ஆனால், இந்த 100 யூனிட் மின்சாரத்தை பெறுவதற்காக, மின் கட்டணத்தை குறைக்கும் நோக்கில் பலர் ஒரே வீடுகளுக்கு பல்வேறு இணைப்புகளை பெற்றிருப்பது, மின்வாரியத்துக்கு சமீபத்தில் தெரியவந்தது.
இதனால், ஏற்படும் மின் இழப்பை தடுக்கும் வகையில், புதிய கட்டணம் கணக்கீட்டு முறை கடந்த ஜூலை மாதம் முதல் அமல்படுத்தப்பட்டது. அத்துடன், ஒரே வளாகத்தில் பல்வேறு இணைப்புகள் இருப்பின் ஒருங்கிணைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
மின் இணைப்புகள்: அதாவது, ஒருவரின் பெயரில், ஒரே வளாகத்தில் ஒன்றிற்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் இருந்தால், அவைகளை ஒன்றாக இணைக்கப்படுவதாக கூறி, அத்தகைய மின் இணைப்புகளை கணக்கெடுக்கும் பணிகளையும் மின்வாரியம் தொடங்கியிருக்கிறது.
அதன்படி, ஒரு வீடு அல்லது வர்த்தக நிறுவனத்தில் 2 மின் இணைப்புகள் இருந்தால் அதை ஒரே மின் இணைப்பாக ஒருங்கிணைத்து அதில் ஒன்றில் மட்டும் 100 யூனிட் இலவசமாக கழித்து மின் கட்டணம் கணக்கீடு செய்யும் நடைமுறை சென்னையில் அமல்படுத்தப்பட்டுள்ளதுடன், தென் மாவட்டங்களிலும் இதனை அமல்படுத்த முடிவாகியிருப்பதாகவும், இதற்காக வர்த்தக நிறுவனங்களை கணக்கெடுக்கும் பணி ரகசியமாக நடப்பதாகவும் கடந்த மாதம் தகவல் வெளியாகியிருந்தது.
தற்போது கோவை மண்டலத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் பெற்றுள்ளவர்களின் விபரங்கள் தொகுக்கப்பட்டு மின் அலுவலர்கள் கள ஆய்வு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.
வாடகை வீட்டுதாரர்கள்: எனினும், இந்த அறிவிப்பில் போதிய தெளிவு இன்மையால் பொதுமக்கள் தரப்பில் அதிருப்தி கிளம்பியது. குறிப்பாக, வாடகை வீடுகளில் குடியிருப்பவர்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்படுவார்களோ? அப்பார்ட்மென்ட்வாசிகள் என்ன செய்வார்கள்? போன்ற சந்தேகங்களும் எழுந்தன.
இப்படிப்பட்ட சூழலில்தான், இதனை மின்வாரியம் தெளிவுபடுத்தியிருக்கிறது. வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள், அடுக்குமாடி குடியிருப்பு என யாருக்குமே இதனால் எவ்வித பாதிப்பும் இல்லை என்றும், விதிமுறை மீறி மின் இணைப்பு பெற்று இருப்பவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என்றும் அதிகாரிகள் விளக்கம் தந்துள்ளனர்.
கள ஆய்வுகள்: இதுகுறித்து, கோவை மண்டல தலைமை பொறியாளர் குப்புராணி சொல்லும்போது, "புதிய மின்கணக்கீடு நடைமுறை உரிய களஆய்வுகள் மேற்கொண்டே உறுதிசெய்யப்படும். வாடகை வீடுகளில் இருப்பவர்கள் அச்சப்பட தேவையில்லை.
ஒரு சிலர் ஒரே வீட்டிற்கு வெளிபுறமாகவும், உட்புறமாகவும் மாடி அமைத்துக்கொண்டு 7 இணைப்புகள் வரை பெற்றிருக்கிறார்கள்.. அவர்களின் இணைப்புகள் மட்டுமே ஒருங்கிணைக்கப்படுகிறது. வாடகைக்கு குடியிருப்போர் அதற்கான வாடகை ஒப்பந்தம், ரேஷன் கார்டு, போன்ற அரசு அங்கீகரித்த சான்றுகளை காண்பித்து தனி இணைப்பாகவே தொடரலாம். அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கும் எந்தவிதமான சிக்கல்களும் இல்லை.
சிக்கல், குழப்பம்: மின்சார கட்டணத்தை குறைக்கவும், 100 யூனிட் இலவச மின்சாரம் கூடுதலாக பெறும் நோக்கிலும் ஒரு குடும்பத்திற்கே , ஒரு அலுவலகத்திற்கே 2 அல்லது 3 இணைப்பு பெற்றவை மட்டுமே இணைக்கப்படுகிறது. மற்றபடி, இதில், சிக்கல்கள், குழப்பங்கள் எதுவுமே இல்லை. எனினும், இதுகுறித்து யாருக்காவது குழப்பங்கள், சந்தேகங்கள் இருந்தால், சம்மந்தப்பட்ட பகுதி மின்வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்து தீர்வை எளிதாக பெறலாம்" என்றார். அதிகாரியின் இந்த விளக்கமானது வாடகை வீட்டுதாரர்களுக்கு நிம்மதியை தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications