போலீஸுக்கு மிரட்டல் விடுத்த கோவை திமுக நிர்வாகி.. 7 பேர் மீது வழக்குப் பதிவு
கோவை: கோவை, டவுன்ஹால் பகுதியில் திமுக, அதிமுகவினரிடையே பேனர் வைப்பதில் ஏற்பட்ட தகராறில் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியபோது, திமுக மாநகர் மாவட்ட துணை செயலாளர் கோட்டை அப்பாஸ் போலீஸாரிடம் ஒருமையில் திட்டி மிரட்டிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியது. இந்நிலையில், கோட்டை அப்பாஸ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மீது உக்கடம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி 4 தேர்தல்களில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து 2026 சட்டமன்ற தேர்தலையும் சந்திக்கவுள்ளது. அதிமுக - பாஜக தேசிய ஜனநாயக கூட்டணி இணைந்து திமுகவுக்கு எதிராக போட்டியிடுகிறார்கள். தவிர விஜய் தலைமையிலான தவெக, சீமானின் நாம் தமிழர் கட்சிகளும் களமிறங்கியுள்ளனர்.

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் அரசியல் கட்சிகள் இப்போதிருந்தே பிரசாரத்தை தொடங்கிவிட்டனர். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவை மாவட்டத்தில் அண்மையில் பல்வேறு முக்கியப் பகுதிகளில் தேர்தல் பிரசார சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இதற்காக அதிமுக நிர்வாகிகள் சார்பில், கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.
டவுன்ஹால் பகுதியிலும் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். ஏற்கனவே திமுக சார்பில் டவுன்ஹால் பகுதியில் பேனர் வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே அதிமுகவினர், திமுகவினர் பேனரை மறைத்தபடி தங்கள் பேனரை வைத்ததாக திமுகவினர் புகார் கூறினர். ஒருகட்டத்தில் அதிமுகவினர் வைத்த பேனரை, திமுகவினர் அகற்றியுள்ளனர். இதனால் இரண்டு கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இரண்டு தரப்பினரிடமும் சமாதானம் பேச முயற்சி செய்துள்ளனர். அப்போது, கட்சிக்காரர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த கோவை திமுக மாநகர் மாவட்ட துணை செயலாளர் கோட்டை அப்பாஸ் அப்பகுதிக்கு வந்துள்ளார். காவல்துறையினரிடம் கடும் கோபத்தில் ஒருமையில் பேசியுள்ளார்.
அவர் பேசுகையில், திமுககாரன்னா என்ன பைத்தியக்காரனா. நீ என்ன ரவுடியா. உன் சட்டையை கழற்றாமல் விடமாட்டேன். மரியாதையா பேசிக்கோ என்று ஒருமையில் கண்டித்துள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாகப் பரவியது. இந்த விவகாரம் தொடர்பாக திமுக மாவட்ட துணைச் செயலாளர் கோட்டை அப்பாஸ், அப்பாஸ் (வார்டு செயலாளர்), பதுரூதின் (பகுதி செயலாளர்), மசூது (இளைஞர் அணி) உள்ளிட்ட 7 க்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள் மீது உக்கடம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications