கோவையே நிமிர்ந்து நிற்குதே.. எடப்பாடி மிஸ் பண்ணதை கையில் எடுத்த ஸ்டாலின்.. ஏக குஷியில் மக்கள்
கோயம்புத்தூர்; கோவையில் நொய்யல் ஆறு 1,200 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது. இந்த திட்டத்தை அதிமுக ஆட்சியில் அறிவித்து பணிகள் தொடங்காத நிலையில் திமுக தற்போது புதிதாக திட்டங்களில் சில மாற்றங்களை செய்து சீரமைப்பு பணிகளை தொடங்குவதாக அறிவித்து உள்ளது.
இதற்காக விரைவில் நிதி ஒதுக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. இம்முறை மத்திய அரசு 990 கோடியை வழங்கும், மீதமுள்ளவை தமிழ்நாடு அரசிடம் இருந்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு நீர் நிலைகள் சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன. சென்னையிலும் ஏரிகள், ஆறுகள் சரி செய்யும் பணிகள் தொடங்க உள்ளன.

அடையாறு ஆற்றை சுத்தம் செய்யும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. இந்த நிலையில்தான் கோவையில் நொய்யல் ஆறு 1,200 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது. அதிமுக ஆட்சியில் 7,000 ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடியாகவும், 11,000 ஏக்கர் மறைமுகமாகவும் பயன்பெறும் நொய்யல் ஆற்றின் விரிவாக்கம், சீரமைப்பு மற்றும் நவீனமயமாக்கல் திட்டத்தை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
ஆனால் சீரமைப்பு பணிகள் முழுமையாக செய்யப்படவில்லை. பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.369 கோடியில் தொடங்கப்பட்டுள்ள பல்வேறு திட்டங்களை அவர் தொடங்கி வைத்த போது இந்த திட்டத்தையும் தொடங்கி வைத்தார். இதில் நொய்யலை சரி செய்ய மட்டும் 230 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால் பணிகள் முழுமையாக முடியவில்லை.
நொய்யல் ஆற்றங்கரையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், 18 அணைக்கட்டுகளை சீரமைத்தல், நீளமான ஆற்றை தூர்வாருதல், அதன் கரையை பலப்படுத்துதல் மற்றும் தடுப்பணைகள் கட்டுதல் ஆகிய பணிகள் ரூ.230 கோடியில் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இத்திட்டம் 24 மாதங்களில் முடிக்கப்படும் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். ஆனால் பணிகள் சரியாக நடக்கவில்லை. இன்னும் நொய்யல் ஆறு முழுமையாக சீரமைக்கப்படவில்லை.
ஸ்டாலின் அதிரடி: இந்த நிலையில்தான் நொய்யல் ஆற்றை மொத்தமாக மாற்றும் விதமாக அதை சீரமைக்கும் பணிகளை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஏற்கனவே சென்னையில் ஓடும் கூவம் மற்றும் அடையாற்றை சீரமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டு, 8 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. அத்திட்டத்திற்காக இதுவரை ரூ.790 கோடி செலவழிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. திட்டத்திற்கான மொத்த ஒதுக்கீட்டில் 54 விழுக்காட்டுக்கும் கூடுதலான நிதி செலவிடப்பட்டு விட்ட நிலையில், அதற்கு இணையான முன்னேற்றம் கண்களுக்கு தென்படவில்லை.
விரைவில் இதை சுத்தப்படுத்தும் பணிகள் தீவிரம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் சென்னையின் அடையாளம் மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரு ஆறுகளின் கரைகளில் வாழ்ந்த மக்களை அப்புறப்படுத்தி வேறு இடங்களில் குடியமர்த்துவதற்காக ரூ.290.13 கோடி, ஆறுகளில் கழிவுநீரைக் கொட்டும் குழாய்களை அடைப்பதற்காக ரூ.129.83 கோடி, சுற்றுச்சுவர் மற்றும் வேலிகளை அமைப்பதற்காக ரூ.122.99 கோடி, மரம் வளர்ப்பு மற்றும் அழகுபடுத்துதல் பணிக்காக ரூ.20.75 கோடி செலவிடப்பட்டிருப்பதாக தமிழக அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் இன்னும் இங்கே பணிகள் முழுமையாக நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications