20 வருடப் பிரச்சினை; ஒரே வாரத்தில் சரி செய்த முதல்வர் ஸ்டாலின்!
கோவை: 20 ஆண்டுகளுக்கு மேலாக மின்சார வசதியே இல்லாமல் ஒரு கிராமம் இருந்திருக்கிறது. எங்கே என்கிறீர்களா? நம் தமிழ்நாட்டில்தான். அதுவும் வளர்ந்த நகரமான கோவைக்கு அருகே.
கோவையிலிருந்து 20 கி.மீட்டர் தொலைவில் இருக்கிறது எட்டிமடை பேரூராட்சி. அந்தப் பகுதியில் 500க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட மக்கள் வசித்துவந்துள்ளனர். அவர்கள் இதுவரை மின்சார வசதியே இல்லாமல்தான் இருந்துள்ளனர்.

இந்தக் குறையைத் தீர்க்கச் சொல்லி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மனு போட்டுள்ளனர் இந்த மக்கள். ஒரே வாரத்தில் அனைத்து வீட்டிலும் மின் விளக்கு எரிந்திருக்கிறது.
20 வருடக் குறையை ஒரே வாரத்தில் மாற்றி உள்ளார் ஸ்டாலின். என்ன நடந்தது? எப்படி நடந்தது?
எட்டிமடை கிராமத்தைச் சேர்ந்த ஜோதி மணி, "எனக்குக் கல்யாணமாகி 19 வருடங்கள் ஆகிவிட்டன. இத்தனை வருடங்களாக கரண்ட் இல்லாமல்தான் நாங்கள் வாழ்ந்துவந்தோம்.

இந்த ஆட்சி வந்ததால்தான் தப்பித்தோம். ஒரு பைசா செலவு இல்லாமல் மின்சார இணைப்பைக் கொடுத்துள்ளார்கள். நாங்கள் மனு கொடுத்த ஒரே மாதத்தில் கரண்ட் கனெக்ஷன் கொடுத்துவிட்டார்கள்.
அதிகாரிகளே வீடு தேடி வந்து குறைகளைக் கேட்டார்கள். ஊருக்கு என்னவோ ஒரே வாரத்தில் கரண்ட் கனெக்ஷன் வந்துவிட்டது. ஆனால், உடனடியாக வீட்டுக்கு மின்சார வசதியை ஏற்படுத்த எங்களிடம் பணம் இல்லை.
வீட்டுக்கு வயரிங் செய்தோம். பல்ப், ஃபேன் எல்லாம் வாங்கி வயரிங் செய்தோம். அதன்பின்னர் அதிகாரிகளிடம் சொன்னோம். பிறகு எங்கள் வீட்டுக்கு இணைப்பு கொடுத்தார்கள்.

"நாங்கள் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு பொதுமக்கள் எங்களிடம் கோரிக்கை வைத்தனர். அதில் அதிகமான பேர் வீட்டுமனைப் பட்டா கேட்டு மனு கோரிக்கை வைத்தனர்.
அப்புறம் மின் இணைப்புக் கேட்டு கோரிக்கை வைத்திருந்தனர். அவர்களின் குறைகளைப் பேரூராட்சி தலைவரிடம் சொன்னேன். இஒ அதிகாரியிடம் சொன்னோம்.
இந்தக் கிராமத்திற்கு இத்தனை ஆண்டுகளாக மின் இணைப்பு வழங்கப்படாததை அறிந்து, உடனடியாக நடவடிக்கை எடுத்தார்கள். மின்னல் வேகத்தில் ஊருக்கு மின் இணைப்பு வசதிகளைச் செய்து தந்தார்கள். அதைப் போன்று வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன. பொதுமக்களுக்குச் சின்ன அலைச்சல் கூட இல்லை. வீடு தேடிவந்து செய்து தந்தார்கள்.

இவ்வளவு வேகமாகச் செய்து தந்த அதிகாரிகளுக்கும் முதல்வர் ஸ்டாலின் ஐயாவுக்கும் எனது சார்பாகவும் என் கிராம மக்கள் சார்பாகவும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்கிறார் எட்டிமடை பேரூராட்சி 5வது வார்டு கவுன்சிலர் கலையரசி.
மேலும் அவர், "இத்தனை வருடங்களாக எந்தப் பலனும் எங்கள் மக்களுக்குக் கிடைக்கவில்லை. ஆனால், இன்று ஸ்டாலின் ஐயா ஆட்சியில் வீடு தேடி வந்து கொடுத்தார்கள். அதில் எங்களுக்கு ஒரு பெருமை. யாரும் மதிக்காத நம்மை இந்த ஆட்சியில் இவ்வளவு மதிக்கிறார்களே என்ற பெருமை" என்கிறார் குரல் தழுதழுக்க.

மொத்தமாக 24 குடும்பங்களுக்கு இலவச பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. அதில் இதுவரை 20 வீடுகளுக்கு மின் இணைப்புகள் முழுமையாக வழங்கப்பட்டுவிட்டன.
இத்தனை ஆண்டுகாலமாக இந்தக் கிராமத்தில் உள்ள பிள்ளைகள் மின்வசதி இல்லாமல் மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில்தான் படித்து வந்தனர். இன்றைக்குப் பழைய மாதிரி இல்லை. பிள்ளைகள் அனைவரும் ஆன்லைன் கிளாசில் படிக்கும் காலம்.
அப்படி இருக்கும் பட்சத்தில், இந்தப் பிள்ளைகள் எப்படி அந்த மாதிரியான வாய்ப்புக்களைப் பெறமுடியும்? அதை உணர்ந்துதான் அரசு இந்த விசயத்தில் மின்னல் வேகத்தில் செயல்பட்டுள்ளது என்கிறார் இதே கிராமத்தில் பிறந்து வளர்ந்த இளைஞர் வெங்கடேசன்.

இதில் வியப்பு என்ன தெரியுமா? நாங்கள் வெற்றி பெற்ற மூன்றே மாதங்களில் இந்த சாதனையைச் செய்துள்ளோம்" என்கிறார் கவுன்சிலர் கலையரசி.
"இந்த எட்டிமடை கிராமத்தில் கிட்டத்தட்ட 70 வீடுகள் உள்ளன. அனைவரும் கூலி வேலை செய்துவருபவர்கள். முன்னதாக 40 வீடுகளுக்கு மின் இணைப்பு தந்தோம். மீதமுள்ள 30 குடும்பங்களுக்கு இப்போது மின் இணைப்பை வழங்கி இருக்கிறோம்.
இவர்கள் யாரும் படிப்பறிவு இல்லாதவர்கள். ஆகவே, அவர்களால் ஆன்லைனில் விண்ணப்பம் செய்யத் தெரியவில்லை. அவர்கள் எங்களை அணுகியதும், நாங்களே ஆன்லைன் அப்ளிகேஷனை விண்ணப்பித்து மின் இணைப்பைப் பெற்றுத் தந்தோம்" என்கிறார் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் செயற்பொறியாளராக பணியாற்றி வரும் சுரேஷ்.

பெரும்பாலும் எல்லோரும் ஏழை எளிய மக்கள். அவர்கள் அதிகமாக மின்சாரம் செலவழிக்க மாட்டார்கள். 100 யூனிட் உள்ளாகவே செலவாகும். ஆகவே இவர்கள் யாரும் மின்சார கட்டணம் கட்டவேண்டிய தேவையே ஏற்படாது என்கிறார் இந்த அதிகாரி.
"இந்தக் கிராமத்தில் 500 ஆதிதிராவிட இன மக்கள் வசிக்கிறார்கள். இவ்வளவு காலம் மின் இணைப்பு இல்லாமல்தான் வாழ்ந்துவந்துள்ளனர். இதுவரை இந்த வட்டத்தில் திமுக வென்றதில்லை. முதல்முறையாக இப்போதுதான் வென்றுள்ளோம்.
இப்போதுதான் இந்த மக்களின் குறை நம்மிடம் வந்தது. ஆட்சியில் இல்லை என்பதால் அவர்கள் யாரும் நம்மிடம் முறையிடவில்லை. பழைய ஆட்சியாளர்களிடம் முறையிட்டு எந்தப் பலனும் இல்லை என்று அவர்கள் வருத்தப்பட்டுச் சொன்னார்கள். உடனடியாக இம்மக்களின் குறையை அதிகாரிகள் கவனத்திற்குக் கொண்டு சென்றோம்.

அனைத்து தரப்பு மக்களுக்கும் சமமான வளர்ச்சியைச் செய்து தர வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் பேசி வருகிறார். அதை உணர்ந்துதான் உடனடியாக ஆக்ஷன் எடுக்கப்பட்டுள்ளது. இதை முதலமைச்சருக்கு மனுவாக எழுதித் தெரிவித்தோம். அவர் உடனடியாக ஆணையைப் பிறப்பித்தார். அதிகாரிகளும் அதே வேகத்தில் செய்து கொடுத்துவிட்டனர்" திமுக செயலாளர் ஆனந்த் குமார்
எட்டிமடைக்கு வந்தது மின்சார விளக்கல்ல; விடியல்!












Click it and Unblock the Notifications