மூன்று சம்பவம்.. மூன்று உயிரிழப்பு.. கோவையைப் புரட்டிப்போட்ட சாலை விபத்துகள்
கோவை: தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக, கோவை வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் சாலை விபத்துகளில் கோவை முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் வெவ்வேறு விபத்துகளில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் தொழில்துறையில் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. ஐடி துறையில் அடுத்தடுத்து சிறப்பான வளர்ச்சியில் பயணித்துக் கொண்டிருக்கிறது. உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. கோவை விமான நிலைய விரிவாக்கம், அவிநாசி சாலை மேம்பாலம், ரயில் நிலையம் புனரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன.

நகரத்தின் முக்கிய பிரச்னையாக போக்குவரத்து நெரிசல் உருவாகி வருகிறது. அவிநாசி சாலை, திருச்சி சாலை, சத்தி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, உக்கடம் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் பிரச்னைகள் இருக்கத்தான் செய்கின்றன.
அதிலும் பண்டிகை நாட்களில் போக்குவரத்து நெரிசல் மிகவும் அதிகமாக இருக்கும். காவல்துறை யூடர்ன், ரவுண்டானா என பல்வேறு முறைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. இருப்பினும் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீர்வு இல்லை என்று மக்கள் கூறுகின்றனர்.
இதனால் தமிழ்நாட்டில் சென்னையை விட, விபத்து அதிகம் நடைபெறும் பகுதியாக கோவை உள்ளது. கடந்தாண்டு மட்டுமே சாலை விபத்துகளில் சுமார் 1,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தாண்டும் விபத்துகள் அதிகளவு நடைபெற்று கொண்டிருக்கின்றன.
ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை தொடர் விடுமுறையால் கோவை இன்னும் பரபரப்புடன் காணப்படுகிறது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில், மூன்று வெவ்வேறு விபத்துகளில் மூன்று பேர் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
கோவை புளியகுளம் பகுதியைச் சேர்ந்தவர் மருதாசலம் (வயது 55). இவர் நேற்று காலை சௌரிபாளையம் சாலையில் தனது நண்பர் மணி என்பவருடன் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு அதி வேகமாக வந்த ஒரு செப்டிக் டேங்க் லாரி, சாலையோரம் நின்று கொண்டிருந்த கார் மீது மோதி பின்னர் சாலையோரம் நடந்து வந்து கொண்டிருந்த மருதாசலம் மற்றும் அவர் நண்பர் மீதும் மோதியது.
இதில் செப்டிக் டேங்க் லாரியின் சக்கரம், மருதாசலத்தின் தலையில் ஏறி இறங்கியது. இதில் மருதாசலம் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். செப்டிக் டேங்க் லாரியை இயக்கிய பிரவீன் என்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில் பிரவீன் மதுபோதையில் வாகனம் இயக்கியது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
அதேபோல மீனா எஸ்டேட் பகுதியை சார்ந்த செல்வராஜ் (வயது 74). இவர் தன் நண்பருடன் பைக்கில் வெளியில் சென்றுவிட்டு, வீடு திரும்பி கொண்டிருந்தார். ராமநாதபுரம் சிக்னலில் இருந்து செல்லும் போது, அரசுப்பேருந்து ஒன்று பின்னால் வந்து செல்வராஜ் பைக் மீது மோதியது.
இதில் செல்வராஜ் கீழே விழுந்தார். அரசுப் பேருந்தின் சக்கரம், செல்வராஜின் தலை மீது, ஏறி இறங்கியதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவத்தில் புளியகுளம் பகுதியைச் சேர்ந்த தினேஷ் (வயது 24) என்ற இளைஞர், பைக்கில் செல்லும்போது, அங்கு வேகமாக வந்த மினிடோர் மோதி விபத்து ஏற்படுத்தியது. இதில் பலத்த காயமடைந்த தினேஷ், கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் வழியிலேயே உயிரிழந்துவிட்டார்.
இதுகுறித்து போக்குவரத்து போலீஸ் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மூன்று விபத்துகளுமே அதிவேகமாக வாகனத்தை இயக்கியதால் ஏற்பட்டது தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications