நெருப்பில் கை வைத்துவிட்ட பாஜக! அன்னபூர்ணா ஓனர் யார் தெரியுமா? கொங்கு சொல்லும் கணக்கு!

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் மன்னிப்பு கேட்ட (அல்லது கேட்க வைக்கப்பட்ட) விவகாரம், அரசியல் பிரச்னையாக வெடிக்க தொடங்கியுள்ளது. ஜோதிமணி முதல் ராகுல் காந்தி வரை நிர்மலா சீதாராமனின் நடவடிக்கைக்கு சரமாரியாக கண்டனங்கள் தெரிவித்துள்ளனர். கொங்கு மண்டலத்தின் மிக முக்கிய விஐபிகளில் ஒருவரும், தொழிலதிபருமான அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசனுக்கே இந்த நிலைமையா என்ற கேள்விகள் கொங்கு மண்டலத்தில் எதிரொலிக்கின்றன. தொழில்முனைவோரிடையே ஏற்ப்பட்டுள்ள இந்த அதிர்ச்சி கலந்த பீதி மனநிலை கொங்கு அரசியலில் பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

கோவை அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன், நிர்மலா சீதாராமன் முன்னிலையிில் ஜிஎஸ்டி வரி குறித்து தர்க்க ரீதியாக பல கேள்விகளை முன் வைத்தார். "இனிப்புக்கு ஒரு ஜிஎஸ்டி, காரத்துக்கு ஒரு ஜிஎஸ்டி, பன்னில் கிரீம் வைத்தால் ஒரு ஜிஎஸ்டி இருக்கிறது. இதனால் கடை நடத்த முடியவில்லை. கம்ப்யூட்டரே திணறுகிறது." என்று கூறியிருந்தார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் முரட்டு வைரலானது.

nirmala sitharaman gst coimbatore vanathi srinivasan

இதற்கு பதிலளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "அவர் ஜனரஞ்சமாக பேசினார். அதில் தவறில்லை. ஜிஎஸ்டிக்கு எதிராக இருப்போருக்கு இது சாதகமாகியுள்ளது. ஊறுகாய் மாமியை இப்படி பேசிவிட்டார் என்றெல்லாம் சொல்கிறார்கள். அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை." என்று கூறியிருந்தார். இந்த செய்தியாளர் சந்திப்பை பார்க்கும்போது, நிர்மலா இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதுபோல தான் தெரிந்தது.

தப்பு செய்த பாஜக: ஆனால் செய்தியாளர் சந்திப்பு முடிந்த சில மணிநேரத்தில் பாஜக ஐடி விங் சார்பில் ஒரு வீடியோ வெளியிடப்பட்டது. அதில் அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன், நிர்மலா சீதாராமனிடம் எழுந்து நின்று கை கூப்பி, "தயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள்" என்று கூறினார். இதையடுத்து இந்த விவகாரம் மீண்டும் விவாத பொருளானது. தங்களின் தொழில்துறையில் உள்ள பிரச்னையை எடுத்துக்கூறிய வயதில் மூத்தவரை, இப்படித்தான் மிரட்டி மன்னிப்பு கேட்கவைத்து வீடியோ எடுப்பீர்களா என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின.

கலந்தாலோசனை கூட்டம்தானே: அதுவரை சமூகவலைதளங்களில் பேசு பொருளாக இருந்த இந்த பிரச்னை, தற்போது கொங்கு கள அரசியலில் தாக்கத்தை ஏற்படத்த தொடங்கிவிட்டது. பொதுவாகவே கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்துக்கு தொழில்துறை தான் தூண். அதிலும் அன்னபூர்ணா ஹோட்டல் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள கோவையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக திகழ்கிறது. கலந்தாலோசனை என சொல்லிவிட்டு, அதில் ஆலோசனை சொன்ன மூத்த தொழிலதிபருக்கே இந்த நிலையா என தொழில்துறையினர் கொந்தளிக்கின்றனர்.

சமூக ஓட்டு கணக்கு: கோவையில் கவுண்டர், நாயுடு ஆகிய இரண்டு சமுதாயம் தான் பவர் பாலிடிக்ஸ். கோவையின் பிஎஸ்ஜி, கேஜி, அன்னபூர்ணா, பிரிக்கால் உள்ளிட்ட பல பெரு நிறுவனங்களின் உரிமையாளர்கள் நாயுடு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் தான். அதில் ஒரு முக்கியமான தலைவருக்கு மரியாதை குறைவான விவகாரத்தை அவர்கள் லேசாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்றே தெரிகிறது. வானதி சீனிவாசன் சொல்வதை போல, அன்னபூர்ணா சீனிவாசனே நேரடியாக வந்து மன்னிப்பு கேட்டிருக்கலாம். ஆனால், அதை பாஜக வீடியோவாக வெளியிட்டதை , அவர்களின் சொந்தக் கட்சியினரே பலரும் விரும்பவில்லை. இது தேர்தல் அரசியலிலும் பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும்.

பாஜக வளர்ச்சி: அதிமுக தமிழ்நாட்டில் வலுவான அரசியலை முன்னெடுக்க அவர்களின் கொங்கு சென்டிமென்ட் ஒரு காரணம். அதை உணர்ந்து பாஜக கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக கொங்கு மண்டலத்தில் கவனம் செலுத்தி வருகிறது. 1998 கோவை குண்டு வெடிப்பு சம்பவம் தான் பாஜகவுக்கு திருப்புமுனை. அந்த சம்பவத்துக்கு பிறகு, அங்கு இஸ்லாமிய எதிர்ப்பு என்ற அரசியலை கெட்டியாக பிடித்து 1998, 1999 நாடாளுமன்ற தேர்தல்களில் அடுத்தடுத்து பாஜகவின் சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார்.

பாஜக ஜாதி கணக்கு: அதன் பிறகு கோவை, திருப்பூரில் தங்களுக்கான வாக்கு வங்கியை கட்டமைக்க தொடங்கினார்கள். இருப்பினும் தேர்தல் அரசியலில் பெரியளவுக்கு வெற்றி கிடைக்கவில்லை என்றாலும், தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளை விட பாஜக தங்களுக்கான வாக்கு வங்கியை மேம்படுத்த நுணுக்கமான அரசியலை கையில் எடுத்தார்கள். கொங்கு மண்டலத்தில் பிரதானமாக உள்ள அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த எல்.முருகன் மற்றும் கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த அண்ணாமலையை மாநிலத் தலைவர்களாக நியமித்தது.

பாஜக செல்வாக்கு: 2021 சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற 4 தொகுதிகளில், 2 (கோவை தெற்கு, மொடக்குறிச்சி) கொங்கு மண்டலத்துக்குட்பட்டது. கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக கொங்கில் அதிக கவனம் செலுத்தியது. பிரதமர் நரேந்திர மோடி, அதிகமுறை விசிட் அடித்தது கொங்கு மண்டலத்துக்கு தான். "நாங்கள் கொங்கு பகுதிக்கு கூடுதல் கவனம் செலுத்துவோம்." என்று மோடியே காரமடையில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஓப்பனாக பேசினார்.

அண்ணாமலை வியூகம்: கோவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட மாநிலத் தலைவர் அண்ணாமலை, கவுண்டர் மற்றும் நாயுடு சமுதாய வாக்குகளை கவர தீவிரமாக காய் நகர்த்தினார். தொழில் அதிபர்களுடன் ரகசிய சந்திப்புகளை நடத்தினார்.தொழில் அதிபர்களில் பலரும் பாஜகவுக்கு நிதி உதவி செய்து, அண்ணாமலைக்கு ஆதரவு தெரிவித்தனர். தேர்தல் முடிவில் அண்ணாமலை சுமார் 4.5 லட்சம் வாக்குகளை பெற்றார். அதிலும் நாயுடு சமுதாயத்தினர் பெரும்பாலும் அண்ணாமலைக்கு தான் வாக்களித்ததாக பரவலாக பேசப்பட்டது.

டேமேஜ் கன்ட்ரோல்: தற்போது அதே சமுதாயத்தைச் சேர்ந்த மூத்த தலைவரை பாஜகவினர் அவமதித்திருப்பதை தொழில்துறையும், அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் கௌரவ பிரச்னையாகவே பார்க்கிறார்கள். இது பாஜகவுக்கு தேர்தல் அரசியலில் பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்பதை பாஜகவினரே உணர்ந்துள்ளனர். "தலைவர் வெளிநாட்டில் இருக்கும் நேரம் இது. இதை வீடியோவாக வெளியிட்டு தர்மசங்கடப்படுத்த வேண்டாம்." என அண்ணாமலை ஆதரவாளர்கள் கூறினர். அதன் தொடர்ச்சியாக லண்டனில் இருந்து அண்ணாமலையே அறிக்கை வெளியிட்டுள்ளார்

அதில், "தனிப்பட்ட முறையில் நடந்த சந்திப்பை வீடியோவாக வெளியிட்டதற்கு தமிழக பாஜக சார்பில் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னபூர்ணா சீனிவாசன், தமிழக தொழில்துறையின் முக்கியமான தூண்." என்று கூறியுள்ளார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில், கோவையில் வலுவாக உள்ள அதிமுகவை விட அதிக வாக்குகளை அண்ணாமலை வாங்கியிருந்தார்.

20 வருடங்கள் பின்னால் போன பாஜக: தங்களின் 20 ஆண்டு கால முயற்சியில் படிப்படியாக முன்னேற்றம் கிடைத்த நிலையில், இந்த சம்பவம் பாஜகவை 20 ஆண்டு பின்னோக்கி அழைத்து சென்றுவிட்டதாகவே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். நடப்பதெல்லாம் அதிமுகவுக்கு சாதகமாக சென்று கொண்டிருக்கிறது என்ற கருத்தும் வேகமாக பரவுகிறது.

எடப்பாடிக்கு அதிருஷ்டம்: ஒரு பக்கம் விசிக நட்புக் கரம் நீட்டி எடப்பாடியை பெருமூச்சு விட வைத்தது என்றால், நிர்மலா சீனிவாசன் செய்த வேலை, எடப்பாடியை, நிமிர்ந்து உட்கார வைத்துவிட்டது என்றே சொல்லலாம். பிரியும் ஓட்டுக்கள் அதிமுகவுக்கா, திமுகவுக்கா என்று கணக்கு பார்க்க வேண்டியதுதான் இனி இருக்கும் வேலை. ஆனால் பாஜக இப்படியே விட்டுவிடுமா, சமாதான முயற்சிகளுக்காக எந்த எல்லைக்கு போகும்.. பொறுத்திருந்து பார்ப்போம்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+