கோவை ஆர்எஸ்புரத்தில் உள்ள பிரபல ஓட்டலில் பிரியாணியில் பல்லியை போட்ட கும்பல்.. சிக்கியது எப்படி
கோவை: (Coimbatore briyani shops) கோவையில் பிரபலமான ஓட்டல்களில் சாப்பிட்டு விட்டு காசு கொடுக்காமல் செல்வதற்காகவும், சில நேரங்களில் பணம் பறிக்கும் நோக்கத்துடன், பூச்சி இருந்தது, பல்லி இருந்து என்று கூறுகிறார்கள் சிலர். சிலர் இன்ஸ்டாவில் பேமஸ் ஆக வேண்டும் என்பதற்காக ஓட்டல் சாப்பாட்டில் குறை சொல்லி வீடியோவும் போடுவார்கள்..கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஓட்டலில் சாப்பிட சென்றபோது பிரியாணியில் பல்லியை போட்டதாக எழுந்த புகாரில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை, கோவை போன்ற பெரிய நகரங்களில் உள்ள உணவகங்களை குறிவைத்து பணம் பறிக்கும் நோக்கத்துடன் சிலர், பூச்சி பல்லி போன்றவற்றை உணவில் போடுகிறார்கள். அப்படி உணவில் பூச்சிகளை போடுபவர்கள் சிசிடிவி கேமரா காட்சிகளால் சிக்குகிறார்கள். அப்படி மிரட்டி சிக்கியவர்களை போலீசார் கைது செய்துள்ளது. அந்த வகையில் கோவை ஆர்எஸ்புரம் ஓட்டலில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.

கோவை ஆர்எஸ்புரம்
கோவை ஆர்.எஸ்.புரத்தில் ஒரு தனியார் ஓட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஓட்டலுக்கு கடந்த மாதத்தில் ஒரு நாள் 5 பேர் சென்றனர். பின்னர் அவர்கள் அங்கு அமர்ந்து சாப்பிடுவதற்காக பிரியாணி வாங்கியிருக்கிறார்கள். அப்போது அவர்களுக்கு கடை ஊழியர் குழம்பு ஊற்றியபோது அதில் பல்லி கிடந்ததாக ஓட்டல் ஊழியர்களிடம் அவர்கள் குற்றம்சாட்டினார்கள். இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அங்கு சென்று விசாரணை நடத்தினர். இதனால் அப்போது பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பிரியாணியில் பல்லி
இந்த நிலையில் தங்கள் கடைக்கு வந்த நபர்கள் பிரியாணியில் வேண்டும் என்றே பல்லியை போட்டு பொய்யான புகார் தெரிவித்ததாகவும், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரியாணி கடை நடத்தி வருபவர்கள் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவணகுமாரை சந்தித்து புகார் அளித்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி ஆர்.எஸ்.புரம் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.
ஓட்டலில் சாப்பிட சென்றவர்கள்
இதைதொடர்ந்து ஓட்டலுக்கு சாப்பிட வந்த நடராஜன் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் அங்கு சாப்பிட வந்த நபர்கள் பல்லியை கொண்டு வந்து பிரியாணியில் போட்டு, பிரச்சனை செய்ததுடன், பொய்யான புகாரை கொடுத்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை போலீசார் தேடி வந்தார்கள்.
இரண்டு பேர் கைது
இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள குமாரபாளையத்தை சேர்ந்த 29 வயதாகும் அண்ணாதுரை , கோவை ரத்தினபுரியை சேர்ந்த 43 வயதாகும் சரவண ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து இந்த வழக்கில் நடராஜன் முன்ஜாமீன் வாங்கி விட்டார். எனவே மீதமுள்ள 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தை கோவை ஓட்டல் உரிமையாளர்கள் வரவேற்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications