கோவையில் ஒரே நாளில் 10 வீடுகளில் கொள்ளை! சுட்டு பிடிக்கப்பட்ட 3 பேரில் ஒருவர் உயிரிழப்பு
கோவை: கோவை மாவட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் கொள்ளையடித்துவிட்டு தப்பியோடிய 3 பேரை போலீஸார் சுட்டுப்பிடித்த நிலையில் அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் 14 மாடிகள் கொண்ட இந்த கட்டடத்தில் அரசு அலுவலகங்களில் பணியாற்றும் 1800 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.
தினமும் குடியிருப்பு வளாகத்தில் தள்ளுவண்டியில் காய்கறிகள், பழங்கள், ஜவுளித் துணிகள், பாத்திரம் விற்பவர்கள் வந்து செல்வார்கள். இந்த குடியிருப்புக்கு காவலாளி நியமிக்கப்பட்டிருந்தாலும் வருவோர் வியாபாரிகள் என்பதால் அவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
நேற்று முன் தினம் மதியம் 12 க்கு 3 பேர் ஆட்டோவில் வந்து துணி, பாத்திரம் விற்பவதாக கூறினர். ஆட்டோவை டிரைவர் வளாகத்தில் நிறுத்திவிட அந்த 3 பேரும் அடுக்கு மாடி குடியிருப்பின் மாடிகளில் ஏறினர். அதிகாரிகள், ஊழியர்கள் அரசு பணிக்காக அலுவலகங்களுக்குச் சென்றுவிட்டால், பல வீடுகள் பூட்டப்பட்டிருந்தன.
இந்த நிலையில் நில அளவைத் துறையில் வருவாய்த் துறை அதிகாரியாக உள்ள ஒருவரின் வீட்டை நோட்டமிட்ட 3 பேரும், அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அறையில் இருந்த பீரோவை திறந்து பணம், நகையை திருடினர். அதே பிளாக்கில் உள்ள மேலும் 2 அதிகாரிகள் வீடுகளின் பூட்டை திருடியுள்ளனர்.
இவ்வாறு 10-க்கும் மேற்பட்ட பூட்டை உடைத்து 42 பவுன் நகைகள், ரூ 3 லட்சம் ரொக்கம், அரை கிலோ வெள்ளி பொருட்களை திருடிவிட்டு எதுவும் தெரியாதது போல் ஆட்டோவில் சென்றுவிட்டனர். மாலையில் அந்த வீடுகளுக்கு சொந்தக்காரர்கள் வந்து பார்க்கும் போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கவுண்டம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் விசாரணைக்காக சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் இருந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து போலீஸார் கொள்ளையர்களை தேடினர்.
இந்த நிலையில் அவர்கள் வந்த ஆட்டோவின் பதிவு எண்ணை வைத்து ஆட்டோ உரிமையாளரின் செல்போன் எண்ணை போலீஸார் வாங்கினர். அப்போதுதான் கோவைப்புதூர் குளத்துபாளையம் பகுதியில் ஒரு வீட்டில் கொள்ளையர்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து நேற்று காலை அந்த வீட்டை சுற்றி வளைத்த தலைமைக் காவலர் பார்த்திபன் என்பவரை அந்த 3 பேரும் கத்தியால் குத்திவிட்டு தப்ப முயன்றனர். அப்போது அவர்களை போலீஸார் காலில் சுட்டனர். இதனால் அவர்களுக்கு காலில் காயம் ஏற்பட்டது.
உடனடியாக அவர்கள் மூவரையும் கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அனுமதிக்கப்பட்டனர். அப்போது விசாரணையில் அவர்கள் ஆசிப் (48), இர்பான் (45), கல்லு என்கிற கலீல் (60) ஆகிய 3 பேர் என்பது தெரியவந்தது. இவர்கள் மூவரும் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது போலீஸார் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
அவர்களிடம் இருந்து 42 சவரன் நகை மற்றும் ரூ. 3 லட்சம் பணத்தை போலீஸார் மீட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆசிப் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். இவர் உத்தரப்பிரதேச மாநிலம் ஜில்லாகாசிபூர் பகுதியை சேர்ந்தவர்.












Click it and Unblock the Notifications