இது வேற லெவல்! காய்கறிகளுடன் கல்யாண பத்திரிகை! மகிழ்ச்சியில் சொந்தங்கள்! கோவையே அசரடித்த தம்பதி
கோவை: தற்போது பல காய்கறிகளின் விலை என்பது உயர்ந்து காணப்படுகிறது. குறிப்பாக தக்காளியின் விலை உச்சம் தொட்டுள்ளது. இத்தகைய சூழலில் தான் கோவையை சேர்ந்த தம்பதி தங்களின் மகளின் திருமண வரவேற்புக்கு வரும்படி உறவினர்களுக்கு கல்யாண பத்திரிகையோடு காய்கறிகளை வழங்கி வரும் வீடியோ வெளியாகி அசரவைத்துள்ளது.
ஆண், பெண் யாராக இருந்தாலும் சரி.. அவர்களின் வாழ்வின் மறக்க முடியாத ஒரு நிகழ்வாக திருமணம் உள்ளது. இந்த திருமணத்தை ஒவ்வொருவரும் தங்களின் பொருளாதார வசதிக்கு ஏற்ப செய்து கொள்கின்றனர். வசதி படைத்தவர்கள் ஆடம்பரமாக அதிக நிதி செலவில் பிரமாண்டமாக திருமணம் செய்கின்றனர்.

மாறாக ஏழை, நடுத்தர மக்கள் தங்களின் வசதிக்கேற்ப மண்டபங்கள், கோவில்களில் திருமணங்களை செய்து கொள்கின்றனர். இருப்பினும் அவசர காதல் திருமணத்தை தவிர ஏழை முதல் பெரும் பணக்காரர்கள் வரையிலான அனைத்து திருமணங்களிலும் இடம்பெறுவது பத்திரிகை.
திருமணத்தை முடிவு செய்த பிறகு ரத்த சொந்த உறவுகளை பெயருடன் மணமகன், மணமகள் பெயர்களுடன் பத்திரிகை அச்சடிப்பது உறவினர்களின் வீடுகளுக்கு சென்று வழங்கி திருமணத்தை அழைப்பது காலம்காலமாக வழக்கத்தில் உள்ளது. இந்நிலையில் கோவையை சேர்ந்த தம்பதி தங்களின் மகள் திருமண வரவேற்புக்கு பத்திரிகை அச்சடித்துள்ளனர்.

இந்த பத்திரிகையை உறவினர்களின் வீடுகளுக்கு சென்று அந்த தம்பதி வழங்கும்போது காய்கறிகளையும் சேர்த்து வழங்கி வருகின்றனர். தற்போது காய்கறிகளின் விலைகள் உச்சம் தொட்டுள்ள நிலையில் உறவினர்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் அவர்கள் இந்த செயலை முன்னெடுத்துள்ளனர்.
அதாவது கோவை கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், பங்களா மேடு பகுதியை சேர்ந்தவர் பாபு. இவரது மனைவி குணசுந்தரி. இந்த தம்பதியின் மகள் கீர்த்தனா தேவி. இவருக்கு 20ஆம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்காக பாபு-குணசுந்தரி தம்பதி தங்களின் உறவினர்களுக்கு பத்திரிகை வைத்து அழைத்து வருகின்றனர்.

இந்த வேளையில் அவர்கள் தக்காளி, வெங்காயம், முருங்கைக்காய் உள்பட வேறு சில காய்கறிகளுடன் பத்திரிகையை தாம்பூலத்தில் வைத்து உறவினர்களுக்கு வழங்கி வருகின்றனர். இதுதொடர்பான வீடியோ தற்போது வெளியாகி அனைவரையும் அசர வைத்துள்ளது. ஏனென்றால் தற்போதைய சூழலில் பெரும்பாலான காய்கறிகளின் விலை என்பது உச்சம் தொட்டுள்ளது.
இன்றை நிலவரப்படி தக்காளி விலை கிலோ ரூ.100க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பீன்ஸ் ரூ.90, சின்ன வெங்காயம் ரூ.80, இஞ்சி கிலோ ரூ.210, பூண்டு ரூ.200, பட்டாணி ரூ.200, ஊட்டி கேரட் கிலோ ரூ.60க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் உறவினர்களுக்கு காய்கறி வழங்கினால் அவர்கள் மகிழ்ச்சியடைவார்கள் என்பதால் பாபு-குணசுந்தரி தம்பதி இந்த முடிவை எடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications