‘உசுரே நீ தானே..’ மாறிய கோவை களம்.. செந்தில் பாலாஜி வழக்கால் அந்தர் பல்டியடித்த "ஆதரவாளர்கள்"
கோவை: அரசியல் என்றால் ஏற்ற, இறக்கங்கள் இருப்பது இயல்புதான். அந்த வகையில் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அவரது ஆதரவாளர்கள் தீர்ப்பை எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், வழக்கு விசாரணை மீண்டும் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுஒருபுறம் அப்செட்டை ஏற்படுத்தியிருந்தாலும் மீண்டும் அவர் களத்தில் இறங்குவார் என்று ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். அதேசமயம் மீண்டும் செந்தில் பாலாஜியா என்று ஒரு தரப்பினர் குமுறிக் கொண்டும் இருக்கின்றனர்.
மதிமுக, அதிமுக, அமமுக கட்சிகளில் ரவுண்டு அடித்துவிட்டு கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திமுகவில் இணைந்தார் செந்தில் பாலாஜி. கட்சியில் இணைந்த உடனே அரவக்குறிச்சியில் இடைத்தேர்தலில் வெற்றி, மாவட்டச் செயலாளர் பதவி என்று செந்தில் பாலாஜி டாப் கியரில் பறக்க தொடங்கினார். 2021ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தவுடன், செந்தில் பாலாஜிக்கு ஜாக்பாட்டாக மின்சாரம், டாஸ்மாக் துறையின் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. கூடவே கோவை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது. சீனியர் அமைச்சர்களே, 'யார் சாமி நீ' என்று அப்செட்டாகும் அளவுக்கு செந்தில் பாலாஜி வளர்ச்சி ராக்கெட் வேகத்தில் சென்றது.

இதனிடையே, அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை கைது செய்து சிறையில் அடைத்தது. செந்தில் பாலாஜி சிறைக்குச் சென்று ஒரு வருடத்துக்கு மேலாகிவிட்டது. ஒருபக்கம் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு, உடல்நலக்குறைவு, மனு தள்ளுபடி, தலைமறைவான தம்பி அசோக், அடுத்தடுத்த ரெய்டு ஆகியவை அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தின. மறுமுனையில் சிறையில் இருந்தாலும் அரசியல் ரீதியாக அவர் தெளிவாக காய்நகர்த்தி கொண்டிருக்கிறார். கடந்த ஒரு வருடமாக கரூர் திமுக மாவட்ட செயலாளராக செந்தில் பாலாஜியே தொடரும் நிலையில், கோவை திமுகவிலும் அவரின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. கோவை எம்.பி முதல் மேயர் தேர்வு வரை எல்லாமே அவரின் தேர்வு தான்.
இந்நிலையில் செந்தில் பாலாஜி வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கப்படுவதாக இருந்தது. டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு கடந்த வாரம் ஜாமீன் கிடைத்த நிலையில், அதே மாதிரி செந்தில் பாலாஜிக்கும் ஜாமீன் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றனர். எதிர்பார்புகளுக்கு மத்தியில், 'மறுபடியும் முதல்ல இருந்தா' என கோவை திமுகவில் செந்தில் பாலாஜி வழக்கு குறித்த கவலைகளும் இருக்கத்தான் செய்கின்றன. செந்தில் பாலாஜி இருந்தவரை கோவை திமுகவில் அவர் தான் 'ஒன் மேன் ஆர்மி'. அவரை மீறி அங்கு எதுவும் நடக்காது. கோவையில் திமுக தொடர் தோல்விகளை சந்தித்து வந்த நிலையில், 2022 உள்ளாட்சித் தேர்தலில் செந்தில் பாலாஜி கோவையில் திமுகவை பிரம்மாண்டமாக வெற்றி பெற வைத்தார். அதன் காரணமாக திமுக மேலிடமும் அவரை முழுவதுமாக நம்பி அனைத்து அதிகாரங்களையும் வழங்கியது.
செந்தில் பாலாஜி கைதால் அதுவரை ஆதிக்கம் செய்ய முடியாத பல நிர்வாகிகள் ஜாலி மோடுக்கு சென்று வசூலில் வாரிக் குவித்தனர். அவரால் பதவி பெற்றவர்கள் கூட, பேனர் மற்றும் போஸ்டர்களில் செந்தில் பாலாஜியின் படத்தை தவிர்த்து வந்தனர். தற்போது செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்துவிட வாய்ப்பிருப்பதால் அவசர அவசரமாக சமூகவலைதளங்களில் செந்தில் பாலாஜியின் படத்தை டிபியாக வைத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும், அவரின் வருகைக்காக காத்திருப்பது போல ராயன் படத்தின், 'உசுரே நீ தானே', விக்ரம் படத்தின், 'போர் கண்ட சிங்கம்' பாடல்களை ஸ்டேட்டஸ்களில் வைத்து உருகிக் கொண்டிருகின்றனர்.
இந்நிலையில், செந்தில் பாலாஜி பிணைகோரிய வழக்கின் மீதான விசாரணையை ஆகஸ்ட் 20ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இருப்பினும், செந்தில்பாலாஜி விரைவில் சிறையில் இருந்து வெளிவந்து மீண்டும் களத்தில் இறங்குவார் என அவரது விஸ்வாசிகள் கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications