கோவை பன்றிக்கு வைக்கும் நாட்டு வெடியில் கொல்லப்பட்ட தெருநாய்.. சிக்கிய சைக்கோ மனிதன்
கோவை: கோவை மாவட்டம் பேரூர் அருகே முகம் சிதைந்த நிலையில் ஒரு தெரு நாய் உயிரிழந்துள்ளது. இதுதொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விசாரணையில் காட்டுப்பன்றிகளை வேட்டையாட பயன்படுத்தும் அவுட்டுக்காய் என்ற நாட்டு வெடியை பயன்படுத்தி அந்த நாயை கொன்றது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக காவல்துறையினர் வெடிபொருள் தடுப்புச் சட்டத்தில் 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
நாட்டிலேயே தெரு நாய் கடிகளால் ரேபிஸ் பாதித்து அதிகம் உயிரிழப்போர் பட்டியலில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் தெரு நாய்கள் கடித்து காயமடைவது, உயிரிழப்பது, விபத்துகள் ஏற்படுவது என்று ஏராளமான பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கின்றன. கோவை மாவட்டத்திலும் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து கொண்டிருக்கின்றன.

அதிர்ச்சி புகார்
சமீபத்தில் கூட மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஒரு மாணவர் ரேபிஸ் பாதித்து உயிரிழந்தார். தினசரி ஏதாவது ஒரு பகுதியில் தெரு நாய்களால் பாதிப்பு இருந்து கொண்டு தான் இருக்கிறது. மறுபக்கம் தெரு நாய்களால் பாதிக்கப்பட்டவர், குடி போதையில் வலம் வருவோர், சைக்கோ மனிதர்கள் தெரு நாய்களை கொடுமைப்படுத்தும் செயல்களிலும் ஈடுபடுகிறார்கள். அப்படி ஒரு சம்பவம் பேரூர் அருகே நடந்துள்ளது.
தேசிய விலங்குகள் நல வாரியத்தைச் சேர்ந்த பிரதீப் பிரபாகரன் என்பவர் கூறுகையில், "பேரூர் ஆறுமுகக்கவுண்டனூர் அருகே எம் ஆர் கார்டன் என்ற பகுதி உள்ளது. கடந்த 29.10.25 தேதி மதியம் சுமார் 12:30 மணிக்கு அங்குள்ள காலி இடத்தில் தெரு நாய் ஒன்று முகம் சிதைந்த நிலையில் இறந்துள்ளதாக தகவல் கிடைத்தது.
2 பேர் கைது
பன்றிகளுக்காக வைக்கப்படும் அவுட்டு காய் (Pig bombs) என்கிற நாட்டு வெடிகுண்டு மூலம் நாய் கொல்லப்பட்டுள்ளது. அதன் வாய் வெடித்துள்ளது போல் உள்ளது என்றும் அந்தப் பகுதி மக்களிடம் இருந்து தகவல் கிடைத்தது. இது குறித்து கோவை மாவட்டம் பேரூர் காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளர் நசீரை சந்தித்து, தேசிய விலங்குகள் நல வாரியம் சார்பில் புகார் கொடுக்கப்பட்டது.
அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அதே பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் உள்ளிட்ட இரண்டு பேரை கைது செய்துள்ளனர். விரைந்து நடவடிக்கை எடுத்த பேரூர் காவல்துறையினருக்கு நன்றி. இந்த அவுட்டுக்காய் விலங்குகளுக்கு மட்டும் ஆபத்து இல்லை. குழந்தைகளோ, பெரியவர்களோ தெரியாமல் அதைத் தொட்டாலோ, விதைத்தாலோ வெடித்து மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.
இதுபோன்ற சட்டவிரோத வெடிபொருட்களை உங்கள் பகுதியிலோ, வேறு எங்காவதோ வைத்திருந்தால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும். நம் உயிரை பாதுகாப்பதுடன் விலங்குகள் உயிர்களையும் பாதுகாத்து விழிப்புடன் செயல்பட வேண்டும்." என்று கூறினார்.












Click it and Unblock the Notifications