கல்லா? சப்பாத்தியா?.. பாத்திரத்தில் அடித்தும் உடையாத உணவு.. கோவை அரசு விடுதியில் பரபரப்பு
கோவை: கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி விடுதியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சப்பாத்தி உடைத்தால் கூட உடைய முடியாத அளவிற்கு கடினமாயிருந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அருகே அரசு கலைக் கல்லூரி இயங்கி வருகிறது. இந்தக் கல்லூரியின் மாணவர் விடுதியில் ஏராளமான மாணவர்கள் தங்கிப் படித்து வருகின்றனர். இந்நிலையில், விடுதியில் நேற்று இரவு உணவாக மாணவர்களுக்குச் சப்பாத்தி வழங்கப்பட்டு உள்ளது. ஆனால், அந்தச் சப்பாத்தி சூடாகவும் இல்லாமல், மிகக் கடினமான கல் போன்று இருந்துள்ளது.

சப்பாத்தியா, பாறாங்கல்லா
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் சிலர் அந்தச் சப்பாத்தியைக் கையில் எடுத்து அலுமினியப் பாத்திரத்தின் மீது ஓங்கித் தட்டியுள்ளனர். பாத்திரத்தில் பலமாகத் தட்டியும் கூட அந்தச் சப்பாத்தி சிறிதும் உடையாமலும், நொறுங்காமலும் கல்லைப் போல இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்தச் சம்பவத்தை மாணவர்கள் தங்களது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற உணவு குறித்த இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விடுதியில் தொடர்ந்து தரமற்ற, சுகாதாரமற்ற உணவுகளே வழங்கப்பட்டு வருவதாகவும், இதனால் பல மாணவர்களுக்குச் செரிமானக் கோளாறுகள் மற்றும் உடல்நலக் குறைவு ஏற்படுவதாகவும் மாணவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
அதிகாரிகள் ஆய்வு
கல்லூரி விடுதிகளில் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தரமான உணவு வழங்கப்பட வேண்டும் என்றும், தொண்டாமுத்தூர் அரசு கல்லூரி விடுதியில் உடனடியாக உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, தரமற்ற உணவு தயாரித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாணவர்கள், பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், அந்த விடுதியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆய்வு செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications
