குட்டி பெங்களூராக மாறி வரும் கோயம்புத்தூர்.. ஒரே நேரத்தில் 41 ஐடி பார்க்.. இதெல்லாம் வேறலெவல் சம்பவம்!
தமிழ்நாட்டின் தொழில்துறை தலைநகரமாகவும், சிறந்த கல்வி நிறுவனங்களின் உறைவிடமாகவும் விளங்கி வரும் கோயம்புத்தூர் மாநகரம், தற்போது இந்தியாவின் மிக முக்கியமான தகவல் தொழில்நுட்பம் (IT) மற்றும் ஐடி சார்ந்த சேவைகள் (ITES) வழங்கும் நகரமாக அதிவேகமாக உருமாறி வருகிறது.
இதுவரை டெக்ஸ்டைல் தொழில் மற்றும் பொறியியல் உதிரிபாகங்கள் தயாரிப்பில் கொடிகட்டிப் பறந்த கொங்கு மண்டலம், இப்போது உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களை ஈர்க்கும் காந்தமாக மாறியுள்ளது என்றால் மிகையில்லை. கோவையின் இந்த அசுர உள்கட்டமைப்பு வளர்ச்சி மற்றும் பொருளாதார மாற்றம், தேசிய அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

18 மில்லியன் சதுர அடியில்
கோவையின் ஐடி துறை வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், தற்போதைய நிலவரப்படி சுமார் 5 மில்லியன் சதுர அடி பரப்பளவில் மட்டுமே ஐடி அலுவலக இடங்கள் பயன்பாட்டில் உள்ளன.
ஆனால், இனி வரவிருக்கும் காலங்களில் கோவையின் ஒட்டுமொத்தப் கார்ப்ரேட் உலகை மாற்றியமைக்கும் விதமாக, சுமார் 18 மில்லியன் சதுர அடி பரப்பளவிலான பிரம்மாண்ட புதிய தகவல் தொழில்நுட்ப அலுவலக இடங்களுக்கான (Office Spaces) கட்டுமானப் பணிகளுக்கான திட்டமிடலில் உள்ளன.
இது தற்போதைய 5 மில்லியன் சதுரடி நிலையை விடப் பல மடங்கு அதிகம் என்பதால் இந்த உள்கட்டமைப்பு வசதி, கோயம்புத்தூரின் தொழில்துறை வரலாற்றில் ஒரு மிகப்பெரிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
41 புதிய ஐடி பூங்காக்கள்
கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் தகவல் தொழில்நுட்பப் நிறுவனங்களையும் வர்த்தகத்தையும் விரிவுபடுத்தும் நோக்கில், சுமார் 41 புதிய ஐடி பூங்காக்கள் (IT Parks) மற்றும் நவீன Coworking Spaces மிகத் தீவிரமாக உருவாக்கப்பட்டு வருகின்றன.
ஏற்கனவே இருக்கும் நிறுவனங்களின் விரிவாக்கப் பணிகள் மற்றும் புதிய பூங்காக்களின் கட்டுமானங்கள் கோவையின் ரியல் எஸ்டேட் மற்றும் வணிகச் சந்தையை அசுர வேகத்தில் உயர்த்தி வருகின்றன.
உலகெங்கிலும் உள்ள முன்னணி நிறுவனங்கள் தங்களது கிளைகளைக் கோயம்புத்தூரில் துவங்க ஆர்வம் காட்டி வரும் வேளையில், இதை எளிதாகும் முயற்சியாக இந்த உள்கட்டமைப்புப் திட்டங்கள் வேகப்படுத்தப்பட்டு புதிய அலுவலககங்கள் தொடங்குவதற்கு வழிவகை செய்யும்.
கோயம்புத்தூர் ஏன் பெஸ்ட் சாய்ஸ்
இந்தியாவின் பிற முன்னணி பெருநகரங்களுடன் ஒப்பிடும்போது, கோயம்புத்தூர் சர்வதேச நிறுவனங்களுக்குப் பல்வேறு சாதகமான அம்சங்களை வாரி வழங்குகிறது. மாநகரின் சிறந்த போக்குவரத்து இணைப்பு வசதிகள், தரமான கல்வி நிறுவனங்கள் மூலம் ஆண்டுதோறும் வெளியாகும் பல்லாயிரக்கணக்கான திறமைமிக்க இளம் பட்டதாரிகள், மற்ற பெருநகரங்களை விடக் குறைவான செயல்பாட்டுச் செலவுகள் (Lower Operational Costs) மற்றும் நிம்மதியான உயர்தர வாழ்க்கைச் சூழல் ஆகியவையே உலகளாவிய நிறுவனங்களை நோக்கி ஈர்க்கின்றன.
இந்தத் காரணிகளால், இந்தியாவின் மிகக் கவர்ச்சிகரமான வளர்ந்து வரும் ஐடி நகரங்களின் பட்டியலில் கோவை முதலிடத்தைப் பிடித்துள்ளது.
அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்கள்
கோவை மாநகரம் வெறும் மென்பொருள் உருவாக்கத்துடன் மட்டும் நின்றுவிடாமல், அடுத்த தலைமுறைக்கான பன்முகத்தன்மை கொண்ட ஒரு நவீன பொருளாதார மையமாகத் தன்னைத் தகவமைத்துக் கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாகச் செமிகண்டக்டர் (Semiconductor) எனப்படும் குறைக்கடத்தி உற்பத்தி ஆலைகள், பிரம்மாண்ட தரவு மையங்கள் (Data Centers), உலகளாவிய திறன் மையங்கள் (GCCs), மேம்பட்ட பொறியியல் நிறுவனங்கள் மற்றும் மின்னணுவியல் (Electronics) சார்ந்த தொழில்கள் கோயம்புத்தூருக்கு வர துவங்கியுள்ளது.
இது மட்டுமன்றி, செயற்கை நுண்ணறிவு (AI), டீப் டெக் (Deep Tech) மற்றும் இன்னோவேஷன் அடிப்படையாகக் கொண்ட அதிநவீன கண்டுபிடிப்புத் தொழில்துறைகளும் கோவையில் தடம் பதிக்கத் தொடங்கியுள்ளன.
கோவையின் வெற்றிப் பயணம்
தொழில்துறை வல்லுநர்களின் கணிப்புப்படி, கோவையின் இந்த எழுச்சி என்பது ஒரு தற்காலிகமான மாற்றம் அல்ல; இது எதிர்கால இந்தியப் பொருளாதாரத்தை வழிநடத்தப்போகும் ஒரு நீண்ட காலப் பயணத்தின் தொடக்கப் புள்ளி மட்டுமே.
கல்வி, பாரம்பரியத் தொழில், நவீன தொழில்நுட்பம் என அனைத்தையும் ஒருசேரக் கொண்டு கம்பீரமாக நடைபோடும் கோயம்புத்தூர், நாட்டின் முன்னணி தொழில்நுட்ப நகரங்களுக்குப் போட்டியாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது.
கோவையின் இந்த அசுர வளர்ச்சியை இனி எவராலும் தடுக்க முடியாது என்ற நம்பிக்கையான சூழல் ஒட்டுமொத்த வர்த்தக உலகிலும் பிரகாசமாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications