கல்பனா ராஜினாமா! கோவை மாநகராட்சி மேயர் தேர்தல்: வேட்பாளரை அறிவித்தது திமுக!
கோவை: கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளராக திமுக சார்பில் ரங்கநாயகி என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இங்கு ஏற்கெனவே மேயராக இருந்த கல்பனா ராஜினாமா செய்ததை அடுத்து புதிய வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த மேயர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் நாளை நடைபெறுகிறது.
கோவை மாநகராட்சி மேயராக கல்பனா ஆனந்தகுமார் பதவி வகித்து வந்தார். இவர் உடல்நலம் மற்றும் சொந்த காரணங்களுக்கு மேயர் பதவியை ராஜினாமா செய்தார்.

இவர் பொறுப்பேற்றது முதலே பல புகார்கள் வந்தன. மேயருக்கும் கவுன்சிலர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவியது. திமுக கவுன்சிலர்களும் அவ்வப்போது கல்பனாவுக்கு எதிர்ப்பை காட்டினர். மேலும் நிர்வாகத்தில் கணவரின் தலையீடு இருந்ததாகவும் புகார்கள் எழுந்தன.
இந்த நிலையில் கல்பனாவின் ராஜினாமாவை அடுத்து கோவை மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்த தமிழக மாநில தேர்தல் ஆணையம் கடந்த ஜூலை 25ஆம் தேதி உத்தரவிட்டது. அதன்படி கோவை மேயர் பதவிக்கு வரும் ஆகஸ்ட் 6ஆம் தேதி, அதாவது நாளைக்கு மறைமுக தேர்தல் நடைபெறுகிறது.
கோவை மேயர் பதவிக்கு பெண் கவுன்சிலர்கள் இடையே போட்டா போட்டி நிலவியதாக சொல்லப்பட்டது. 27வது வார்டு கவுன்சிலர் அம்பிகா, 29ஆவது வார்டு கவுன்சிலர் ரங்கநாயகி, 34 ஆவது வார்டு கவுன்சிலர் மாலதி, 36ஆவது வார்டு கவுன்சிலர் தெய்வானை, 46ஆவது வார்டு கவுன்சிலர் மீனா லோகு, 63ஆவது வார்டு கவுன்சிலர் சாந்தி ஆகியோரிடையே போட்டி இருந்தது.
இந்த நிலையில் கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் உள்ள விக்டோரியா ஹாலில் நாளை காலை 10.30 மணிக்கு மேயர் பதவிக்கு வார்டு உறுப்பினர்களில் இருந்து ஒருவரை தேர்வு செய்யும் மறைமுக தேர்தல் கூட்டம் நடைபெறுகிறது. தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் நெல்லை மேயராக இருந்த சரவணனும் கோவை மேயர் கல்பனா ராஜினாமா செய்த போது அவரும் ராஜினாமா செய்ததால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதற்காக அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு திமுக வேட்பாளராக கிட்டு என்கிற ராமகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இவர் நேற்று வார்டுகளில் சைக்கிளில் வலம் வந்து பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். இந்த நிலையில் கோவை மாநகராட்சியின் மேயராக யாரை அறிவிப்பது என்பது குறித்து இன்று அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் ரங்கநாயகி என்பவரை வேட்பாளராக அறிவித்தார் கே.என்.நேரு.
ரங்கநாயகி கோவை மாநகராட்சியின் 29ஆவது வார்டு கவுன்சிலராக உள்ளார். இவர் கோவை மேயர் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். நாளை மறைமுக தேர்தல் நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications