"திடீர்னு கேஸ் சிலிண்டரை நிறுத்திட்டாங்க!" ரூ.1 இட்லி விற்கும் 85 வயது கமலாத்தாள் பாட்டி வேதனை
கோவை: கோவை வடிவேலம்பாளையத்தை சேர்ந்த 85 வயதான கமலாத்தாள் பாட்டி, கடந்த பல ஆண்டுகளாக ஏழை, எளிய மக்களுக்கும் மற்றும் மாணவர்களுக்கு வெறும் ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்து வருகிறார். இதன் மூலம் அவருக்கு சொற்ப தொகையே வருமானமாக கிடைத்தாலும் கூட இதை அவர் ஒரு சமூக சேவையாகவே செய்து வருகிறார். இதற்கிடையே அவருக்கு வழங்கப்பட்டு வந்த இலவச சமையல் கேஸ் சிலிண்டர் உதவி திடீரென நிறுத்தப்பட்டிருப்பது சர்ச்சையாக வெடித்துள்ளது.
கோவை வடிவேலம்பாளையத்தை சேர்ந்தவர் கமலாத்தாள் பாட்டி. 85 வயதான இவர் பல ஆண்டுகளாக ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்து வருவதன் மூலம் கோயம்புத்தூரின் அடையாளமாகவே மாறியுள்ளார். ஏழை தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு குறைந்த விலையில் உணவு கிடைக்க வேண்டும் என்பதற்காக, தனது வயதையும் பொருட்படுத்தாமல் இந்த சேவையை தொடர்ந்து செய்து வருகிறார்.

கேஸ் சிலிண்டர்
அவரது சேவையை பாராட்டி பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அரசு அதிகாரிகள் அவருக்கு உதவிகளை வழங்கி வந்தனர். அதன் ஒரு பகுதியாக அவரது செலவுகளை குறைக்கும் வகையில் அவருக்கு இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வந்தன. இந்த நிலையில், தனக்கு வழங்கப்பட்டு வந்த இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் கடந்த சில மாதங்களாக திடீரென நிறுத்தப்பட்டதாக கமலாத்தாள் பாட்டி தெரிவித்துள்ளார்.
மாதம் இரண்டு இலவச சிலிண்டர்கள் வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டதாகவும், ஆனால் ஆரம்பத்தில் மாதம் தோறும் தனக்கு சரியாக சிலிண்டர்கள் வழங்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். அதன் பிறகு இலவச சிலிண்டர் வழங்குவது நிறுத்தப்பட்டுவிட்டதாக தெரிவித்துள்ளார். ஒரு ரூபாய்க்கு தொடர்ந்து இட்லி விற்பனை செய்து வரும் நிலையில், கேஸ் சிலிண்டர் செலவை தன்னால் சமாளிக்க முடியவில்லை என்றும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
ஆட்சியரிடம் மனு
இதையடுத்து இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் சென்ற கமலாத்தாள் பாட்டி, நிறுத்தப்பட்ட இலவச கேஸ் சிலிண்டர்களை மீண்டும் தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
ஆட்சியரிடம் மனு அளித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஒரு ரூபாய்க்கு இட்லி விற்கிறேன் என்பதற்காக கேஸ் நிறுவனம் சார்பில் எனக்கு சிலிண்டர் இலவசமாகக் கொடுத்துட்டு இருந்தாங்க. ஆனா, இப்போ ரெண்டு மாசமா திடீர்னு எதையும் சொல்லாமல் கேஸ் கொடுப்பதை நிறுத்திவிட்டார்கள். இதனால் என்ன பண்றதுன்னு தெரியாமல் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்திருக்கிறேன்" என கண்ணீருடன் தெரிவித்தார்.
பரிசீலனை
அவரது மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், இந்த விவகாரம் குறித்து உரிய முறையில் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். பல ஆண்டுகளாக ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த விலையில் உணவு வழங்கி வரும் கமலாத்தாள் பாட்டியின் இலவச கேஸ் சிலிண்டர் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும் என்பதே நெட்டிசன்களின் கோரிக்கையாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications
