கோவைக்கு ஆரஞ்ச் அலர்ட்.. நிவாரண பணி தீவிரம்.. மாநகராட்சி மண்டல உதவி எண் அறிவிப்பு
கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கோவையில் இன்றும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இரவு பகலாக மழை கொட்டி கொண்டிருக்கிறது. மழை நிவாரண பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் கட்டுப்பாட்டு மையம் மூலம் நிவாரண பணிகள் கண்காணிப்படுகிறது. மக்கள் புகார் தெரிவிக்க மண்டல வாரியாக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் தென் மேற்கு பருவமழை பொய்த்துள்ளது. ஆனால் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த 10 நாட்களாக கனமழை பெய்கிறது. கடந்த 18 ஆம் தேதி இரண்டு மணி நேரத்தில் சுமார் 20 செ.மீ மழை பெய்தது. கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மாநகர் புறநகர் பகுதிகளில் சாலையில் வெள்ளம் போல மழைநீர் ஓடியது. குண்டும், குழியுமாக இருந்த சாலைகள் மேலும் பாதிப்படைந்துள்ளது. பல இடங்களில் மரங்கள் விழுந்தன. குளங்கள், அணைகள் உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது.

மாநகராட்சி கட்டுப்பாட்டு மையம்
இரவு பகலாக மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. கோவை மாவட்டத்திற்கு இன்றும் ஆரஞ்ச் அலர்ட் விடப்பட்டுள்ளது. ஆர்எஸ்புரம் பகுதியில் மாநகராட்சியின் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் (ICCC) உள்ளது. அதன் மூலம் மாநகராட்சி பகுதிகள் தொடர்ந்து பெய்து வரும் கனமழையினால் ஏற்படும் மழைநீர் தேக்கம் உள்ளிட்டவைகள் குறித்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மேலும், மழைக்காலங்களில் பொதுமக்கள் புகார் தெரிவிக்க 8190000200 என்ற வாட்ஸ்அப் எண் அறிவிக்கப்பட்டது.
கடந்த 18.10.2026 முதல் 22.10.2026 (நேற்று) வரை கட்டுப்பாட்டு மையத்திற்கு 149 புகார்கள் வந்தன. சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு புகார்களுக்கு தீர்வு காணப்பட்டதாக மாநகராட்சி கூறியுள்ளது. கோவை மாநகராட்சியில் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு, மத்திய என 5 மண்டலங்கள் உள்ளன. வடகிழக்கு பருவமழையையொட்டி, கோயம்புத்தூர் மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களுக்கும் புகார் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
மண்டல வாரியாக உதவி எண்
இதுகுறித்து கோவை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ஒவ்வொரு மண்டலத்திலும் கட்டுப்பாட்டு மையம் செயல்படும். அதற்கான உதவி எண் வெளியிடப்படுகிறது. கிழக்கு மண்டலத்தில் 0422 - 2577217 என்ற எண்ணிலும், வடக்கு மண்டலத்தில் 0422 - 2243133 என்ற எண்ணிலும், மேற்கு மண்டலத்தில் 0422 - 2553100 என்ற எண்ணிலும், தெற்கு மண்டலத்தில் 0422 - 2252705 என்ற எண்ணிலும், மத்திய மண்டலத்தில் 0422 - 4709525 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்" என்று கூறியுள்ளது.


Click it and Unblock the Notifications
