மார்க்கெட்டில் பைக்கை திறந்த பெண்ணுக்கு ஷாக்.. கோவை காந்திபுரத்தை அலறவிட்ட நாகப்பாம்பு
கோவை: கோவை காந்திபுரம் பகுதிக்கு ஷாப்பிங் வந்த பெண்ணின் இருசக்கர வாகனத்தை திறந்து பார்த்தபோது, அதில் ஒரு நாகப்பாம்பு ஒன்று இருந்துள்ளது. அந்த பெண் பதறியடிக்கவே பாம்பு பிடி வீரருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் சம்பவ இடத்துக்கு விரைந்து நீண்ட போராட்டத்திற்கு பிறகு பாம்பை பத்திரமாக மீட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
கோவை மாவட்டத்தின் சிறப்பம்சமே அதன் கிளைமேட் தான். பரபர நகரம், அழகான கிராமம் இரண்டையும் ஒரு சேர கொண்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இருப்பதால் கோவையின் தட்ப வெப்பம் இதமாகவே இருக்கும். இதனால் யானை, காட்டெருமை, சிறுத்தை, கரடி, மான் உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படும்.

வாகனத்தில் பாம்பு
மேலும் பாம்புகளின் எண்ணிக்கையும் அதிகம் உள்ளது. அவை அவ்வபோது குடியிருப்பு பகுதிக்கு வருவது வழக்கம். சில நேரத்தில் பரபரப்பான நகரப் பகுதியிலும் பாம்புகள் வருவது வழக்கம். கோவை மாவட்டத்தை பொறுத்தவரை காந்திபுரம் மிக முக்கியமான பகுதியாகும். அங்கு முக்கிய வர்த்தக நிறுவனங்கள் நகர, வெளியூர் பேருந்து நிலையங்கள் உள்ளன.
இதனால் கோவை மட்டுமல்லாமல் வெளியூர்களில் இருந்தும் அந்தப் பகுதிக்கு பல ஆயிரக்கணக்கான மக்கள் வருகை புரிவார்கள். இதன் காரணமாக காந்திபுரம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். அதுவும் வார இறுதி நாட்களில் மக்கள் கூட்டம் அதிகளவு இருக்கும். இந்நிலையில் துடியலூர் பகுதியைச் சேர்ந்த மைதிலி என்பவர் தன் இரு சக்கர வாகனத்தில் காந்திபுரம் சென்றுள்ளார்.
மீட்பு பணி
வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக வந்த அவர், சண்டே மார்க்கெட் பகுதியில் தன் வாகனத்தை நிறுத்தி சென்றுள்ளார். பொருட்களை வாங்கிவிட்டு மீண்டும் அவர் இரு சக்கர வாகனத்தை எடுத்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. அவரின் வாகனத்தின் உள்ளே ஒரு நாகப்பாம்பு இருப்பதை பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார்.
பதற்றத்தில் அவருக்கு என்ன செய்வதென்று அறியாமல் அருகில் இருந்தோரின் உதவியை நாடியுள்ளார். அவர்கள் உடனடியாக அமீன் என்கிற பாம்பு பிடி வீரருக்கு தகவல் தெரிவித்தனர். அமீன் சில நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து மைதிலியின் வாகனத்தை ஆய்வு செய்துள்ளார். அப்போது வாகனத்தில் நாகப்பாம்பு இருப்பதை உறுதி செய்தார்.
காந்திபுரத்தில் பரபரப்பு
மக்கள் நடமாட்டம் அதிகம் இருப்பதால் மிகுந்த கவனத்துடன் பாம்பை மீட்கும் முயற்சியில் இறங்கினார். சுமார் அரை மணி நேரம் போராட்டத்துக்கு பிறகு அவர், மைதிலியின் இருசக்கர வாகனத்தின் பாகங்களை கழற்றி, உள்ளே பதுங்கி இருந்த சுமார் 3 அடி நீளமுள்ள நாகப்பாம்பை பத்திரமாக மீட்டார்.
இதுகுறித்து பாம்பு பிடி வீரர் அமீன் கூறுகையில், மக்கள் பாம்புகளை பார்த்தால் உடனடியாக பாம்பு பிடிக்கும் வீரர்கள், வனத்துறையினர் அல்லது தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். என்று கூறினார். அந்த பாம்பு மைதிலியின் வீடு அருகே வாகனத்தில் ஏறியதா அல்லது காந்திபுரத்தில் இருந்து வந்ததா என்று தெரியவில்லை.
பரபரப்பான பகுதியில் பாம்பு மீட்கும் பணி நடைபெற்றது மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications