கோவை தெற்கு எம்எல்ஏ அலுவலகம் 'தன லாபம்' என சுவரில் எழுதி திறப்பு! பூரிப்புடன் சீட்டில் அமர்ந்த வானதி
கோவை :'தன லாபம்' என சுவரில் மஞ்சளில் எழுதி, பூஜை நடத்தி கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசனின் அலுவலகம் நேற்று திறக்கப்பட்டது. அலுவலகத்திறப்பில் பலரும் கலந்து கொண்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
Recommended Video
கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு சரி, சட்டமன்ற தேர்தலுக்கு பின்பும் சரி, அரசியல் கட்சியினரால் அதிகம் கவனிக்கப்படும் நபராக உள்ளார்.
சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை தோற்கடித்து, திமுக காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் மயூராவை மூன்றாவது இடத்திற்கு தள்ளி, கோவை தெற்கு தொகுதியில் எம்எல்ஏவாக வெற்றி பெற்றார் வானதி சீனிவாசன்.

ஸ்டாலின் அரசு
சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் திமுக அரசை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார். கோவையில் அதிகரித்த கொரோனா பாதிப்பு மற்றும் டாஸ்மாக் கடை திறப்பு என கடந்த ஒரு மாதத்தில் பல்வேறு விவகாரங்களில் ஸ்டாலின் தலைமையிலான அரசை விமர்சித்து வருகிறார்.

எம்எல்ஏ அலுவலகம்
இந்நிலையில் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி அலுவலகம், மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகம் அருகே இருக்கிறது. இந்த அலுவலகம் திறப்பு விழா , நேற்று(திங்கள்கிழமை) நடந்தது. வானதி சீனிவாசன் எம்எல்ஏ மற்றும் அவரது கணவர் சீனிவாசன் மற்றும் பாஜக முக்கிய நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர்.

பூஜை நடத்தப்பட்டது
அறையின் சுவரில் 'தன லாபம்' என மஞ்சளில் எழுதி வைத்து பூஜை நடத்தப்பட்டு எம்எல்ஏ அலுவலகம் திறக்கப்பட்டது.. கடைகள், வணிக வளாகங்கள், நிறுவனங்கள் திறப்பு விழாவின்போது 'தன லாபம்' என எழுதி திறப்பு விழா நடத்துவார்கள். ஆனால் எம்எல்ஏ அலுவலகமும் இதேபோன்று திறக்கப்பட்டிருந்தது. இந்த காட்சி, வழக்கத்துக்கு மாறாக வித்தியாசமாக இருந்ததால், வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

கடும் போராட்டத்திற்கு பின் எம்எல்ஏ
பாஜக தேசிய பெண்கள் ஆணைய தலைவராக இருந்த வானதி சீனிவாசன், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவாக மாறுவது என்பதில் எளிதாக நடக்கவில்லை. மொத்த மீடியாக்களின் கவனமும் கமல் மீது குவிந்து இருந்த போதும் விடாமல் தீவிர பிரச்சாரத்தில் கவனம் செலுத்தியது முதல், அதிமுக நிர்வாகிகளை சமரசம் செய்து வேலை செய்தது வரை எல்லாமே எளிதாக இருந்திருக்காது. ஏனெனில் எம்எல்ஏ அலுவலகத்தின் சீட்டில் பூரிப்புடன் வானதி சீனிவாசன் உட்கார்ந்திருந்த புகைப்படங்களை பார்த்தாலே புரியும்.












Click it and Unblock the Notifications