கோவையில் லஞ்ச பணத்துடன் குளத்தில் குதித்த விஏஓ! விடாமல் பிடித்த லஞ்ச ஒழிப்புத் துறை!
கோவை:கோவையில் லஞ்ச பணத்துடன் குளத்தில் குதித்த கிராம நிர்வாக அலுவலரை (விஏஓ) துரத்தி வந்த போலீஸார் அவரை பிடித்தனர். தற்போது குளத்தில் வீசப்பட்ட பணத்தை லஞ்ச ஒழிப்பு துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டு அவற்றை எடுத்துவிட்டனர்.
கோவை தொம்பிலிபாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவர் வாரிசு சான்றிதழ் வாங்குவதற்காக விண்ணப்பித்திருந்தார். அந்த சான்றை வழங்குவதற்கு மத்வரராயபுரம் விஏஓ அலுவலகத்திற்கு சென்றார்.

அங்கு விஏஓவாக இருக்கும் வெற்றிவேலை, கிருஷ்ணசாமி அணுகினார். அப்போது வெற்றி வேல், வாரிசு சான்ற தர ரூ 3500 லஞ்சமாக கேட்டதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணசாமி ரூ 3500 லஞ்சத்தை கொடுக்க மறுத்தார்.
"வாரிசு சான்றிதழுக்காக எல்லா ஆவணங்களும் சரியாக இணைக்கப்பட்டிருக்கிறது. அப்படி இருக்கும் போது எதற்காக ரூ 3500 தர வேண்டும்" என கிருஷ்ணசாமி, வெற்றிவேலிடம் கேட்டதாக தெரிகிறது.
இதனால் "பணம் கொடுக்காமல் நீ எப்படி சர்டிபிகேட் வாங்குறேனு பார்க்கிறேன்" என்றபடியே வெற்றிவேல், வாரிசு சான்றிதழ் தராமல் காலம் தாழ்த்தி வந்ததாக தெரிகிறது. சான்றிதழ் கேட்டு நடையாய் நடந்த கிருஷ்ணசாமி, இந்த விவகாரத்தை லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் தெரிவித்தார்.
இதையடுத்து ரசாயனம் கலந்த ரூபாய் நோட்டுகளை கிருஷ்ணசாமியிடம் கொடுத்த லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார், இதை வெற்றிவேலிடம் கொடுக்குமாறு கூறினர். இதையடுத்து நேற்று இரவு, வெற்றிவேலுக்கு போன் செய்த கிருஷ்ணசாமி, "சார் நீங்கள் கேட்ட பணம் தயாராக இருக்கிறது. எனக்கு வாரிசு சான்றிதழ் கொடுத்துடுங்க, பேரூர் கிட்ட இருக்கேன், வந்து பணத்தை வாங்கிக்கோங்க" என கூறினாராம்.
இதையடுத்து வெற்றிவேலும், "அப்படிவா வழிக்கு" என நினைத்துக் கொண்டு பேரூருக்கு சென்றார். அங்கு கிருஷ்ணசாமியிடம் ரூ 3500 பணத்தை பெற்ற போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் அவரை பிடிக்க முயன்றனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த வெற்றிவேல், தனது பைக்கில் தப்பிச் சென்றார். சிறிது தூரத்தில் பேரூர் பெரியகுளத்திற்குள் பணத்துடன் விஏஓ வெற்றிவேல் குதித்தார். அவரை துரத்தி வந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரும் குளத்தில் குதித்து வெற்றிவேலை பிடித்தனர்.
எனினும் ரசாயனம் தடவி கொடுத்த பணம் குளத்தில் விழுந்துவிட்டது. இதையடுத்து வெற்றிவேலை பேரூர் தாலுகா அலுவலகத்திற்கு அழைத்து வந்த போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தினர். இதே வேளையில் குளத்தில் விழுந்த ரசாயனம் தடவிய பணத்தை தேடி எடுத்தனர். இதையடுத்து வெற்றிவேலை லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications