வால்பாறை பாலியல் விவகாரம்.. நெகட்டிவாக பார்க்க கூடாது.. கோவை கலெக்டர் கூறியது என்ன?
கோவை: கோவை மாவட்டம், வால்பாறை அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக 2 தற்காலிக பேராசிரியர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், இதுபோன்ற புகார்கள் வருவதை நெகட்டிவாக பார்க்க கூடாது, புகார் அளிக்கப்பட்டால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம், வால்பாறையில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூரில் இருந்தும் இங்கு வந்து அரசு விடுதியில் தங்கிப் படித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 30 ஆம் தேதி தேசிய மகளிர் ஆணையத்தின் ஒருங்கிணைந்த சேவை மையத்தின் சார்பில் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

அந்த நிகழ்ச்சியில், மாணவ, மாணவிகளுக்கு சமுதாயத்தில் எதாவது தொந்தரவு ஏற்பட்டதா என்பது குறித்து கேட்கப்பட்ட நிலையில், அப்போது 7 மாணவிகள் கல்லூரியில் பாலியல் தொந்தரவு உள்ளதாகக் கூறினர். இதையடுத்து, ஆணையத்தின் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணவேணி பொள்ளாச்சி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக, கல்லூரிப் பேராசிரியர்கள், தற்காலிகப் பேராசிரியர்கள் 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கூறியதாவது: ஊட்டச்சத்து மாதம் குறித்து இந்த மாதம் முழுவதும் கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்வுகள் ஏற்படுத்தப்படும். கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் அடிப்படை வசதிகள் குறித்த ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அடிப்படை வசதிகள் இல்லாத பட்சத்தில் அதற்கான தீர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வால்பாறை பாலியல் விவகாரம் குறித்து துறை ரீதியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் குற்றம் சாட்டப்பட்ட நபர் மட்டுமல்லாமல் நான்கு பேர் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து அரசு சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் அளிக்கப்படவுள்ளது. வேறெங்கேனும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
முதலில் இந்த விவகாரத்தில் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து துறை ரீதியான நடவடிக்கையும் அவர்கள் மீது எடுக்கப்படும். இதுபோன்ற புகார்கள் வருவதை நெகட்டிவாக பார்க்க வேண்டாம். இதுபோன்ற புகார்கள் வந்தால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சிசிடிவி கேமராக்கள் மற்றும் மின் விளக்குகளை அதிகரித்தாலே ஓரளவு பாதுகாப்பு மேம்படுத்தப்படும்.
தொடர்ந்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வந்தால் மக்களுக்கும் இது குறித்தான புரிதல் கிடைக்கும். இதுபோன்ற குற்றங்கள் நிகழாமல் இருப்பதற்கும், அவ்வாறு ஏதேனும் நிகழ்ந்தால் அது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கப்படும். பங்களாதேஷ் பகுதியில் இருந்து சிலர் சட்டவிரோதமாக கோவைக்கு வருவதாக புகார்கள் எழுப்பப்படுவது குறித்தான கேள்விக்கு, அரசிடம் இருந்து வழிகாட்டு நெறிமுறைகள் வந்தால் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications