கோவை தீவிரவாத நகரமா.. அண்ணாமலை பேச்சை கண்டிக்கிறேன்.. ஜோதிமணி ஆவேசம்
கோவை: கோவை காரில் காஸ் சிலிண்டர் வெடித்த விவகாரத்தில் மதவெறி பாஜக பொறுப்பற்ற முறையில் கோவையை தீவிரவாத நகரமாக சித்தரிப்பது கடும் கண்டனத்துக்குரியது எனக்கூறிய காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலினை ஒப்பிட்டு பேசி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பதற்றமான சூழல் உள்ளது. பாஜக அலுவலகம், பாஜக பிரமுகர்களின் வீடுகள் முன்பு பெட்ரோல் குண்டுகள் சில நாட்களுக்கு முன்பு வீசப்பட்டன. இதில் போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதன் தொடர்ச்சியா கோவையில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் வீதியில் நேற்று முன்தினம் அதிகாலை கார் ஒன்று வெடித்து சிதறியது. இதில் கோவிலின் முன்பகுதி சேதமடைந்தது.

வெளியான வீடியோ
தமிழக போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தார். தடயங்கள் சேகரிக்கப்பட்டன. 6 தனிப்படைகள் விசாரணையை துவங்கியது. முதற்கட்ட விசாரணையில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் காரில் துண்டாகி அதில் இருந்த ஜமேஷா முபின் இறந்ததாக தெரிவிக்கப்பட்டது. அதோடு சம்பவம் நடப்பதற்கு முந்தைய நாளான சனிக்கிழமை இரவு ஜமேஷா முபின் உள்ளிட்ட 5 பேர் மூட்டைகளுடன் வீட்டை விட்டு வெளியேறியது தெரியவந்துள்ளது.

5 பேர் கைது
இதனால் இந்த சம்பவத்தின் பின்னணியில் சதிச்செயல் இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். விசாரணையை தீவிரப்படுத்திய ஜமேசா முபீனுடன் இருந்த உக்கடம் முகமது தல்கா, முகமது அசாருதீன், ஜிஎம் நகர் முகமது ரியாஸ், பிரோஸ் இஸ்மாயில் மற்றும் முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகியோரை கைது செய்தனர். மேலும் பலரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இவர்கள் மீது உபா சட்டத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

அண்ணாமலை விமர்சனம்
இதற்கிடையே தான் இன்று பத்திரிகையாளர்களை பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்தார். அப்போது சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் பயங்கரவாத அமைப்பு இருக்கலாம். இந்த விஷயத்தில் தமிழக போலீசார் உண்மையை மறைக்கின்றனர். இதனால் வழக்கு விசாரணை என்ஐஏ எனும் தேசிய புலனாய்வு முகமை அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும் என கூறினார்.

ஜோதிமணி எம்பி விமர்சனம்
இந்நிலையில் தான் பாஜகவின் இந்த குற்றச்சாட்டுக்கு திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் கரூர் எம்பி ஜோதிமணி முற்றிலும் மறுத்துள்ளார். மேலும் அண்ணாமலையின் பெயரை பயன்படுத்தாமல் அவரையும், பாஜகவையும் கடுமையாக தாக்கி பேசியுள்ளார். இதுதொடர்பாக ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில் பல பதிவுகளை செய்துள்ளார்.

கடும் கண்டனத்துக்குரியது
அதில், ‛‛ கோவை ஒரு பெருமைக்குரிய தொழில் நகரம். மோடியின் மோசமான ஆட்சியில் தொழில்கள் சிதைந்து விட்டன. லட்சக்காணவர்கள் வேலை இழந்துள்ளனர். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல, மதவெறி பிடித்த கலவர பாஜக பொறுப்பற்ற முறையில் கோவையை தீவிரவாத நகரமாக சித்தரிப்பது கடுமையான கண்டனத்துக்குரியது.

மோடி - ஸ்டாலின் ஒப்பீடு
முதல் அமைச்சர் ஸ்டாலினின் பொறுப்புமிகுந்த அரசு குற்றவாளிகளை பிடிக்க விரைந்து செயல்பட்டுள்ளது. முறையான, விரைவான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்து சூழலில் பாஜக மலிவான அரசியல் செய்வது அவமானகரமானது. மோடி, பாஜக ஆட்சியை போல சீனாவை கண்டு அஞ்சு நடுங்குகிற, தீவிரவாத குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டவர்களை நாடாளுமன்ற உறுப்பினராக்கி அழகு பார்க்கிற ஆட்சி தமிழகத்தில் நடக்கவில்லை. பாஜகவின் கலவர அரசியலை மீறி தமிழகம் தொடர்ந்து அமைதிப்பூங்காவாகவே இருக்கும்'' என சாடியுள்ளார்.












Click it and Unblock the Notifications