நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியுள்ள நிலையில், தமிழக அரசியல் வட்டாரங்களில் ஒரு கேள்வி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதாவது, தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் ராஜ்யசபா எம்.பி. யார் என்பதுதான் அந்த கேள்வி. முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சிக்கு வந்த பிறகு, தேசிய அரசியலில் கட்சி முதல் முறையாக கால்பதிக்கவுள்ள நிலையில், டெல்லிக்கு செல்லப்போகும் அந்த முகம் யார் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவைச் சேர்ந்த சி.வி. சண்முகம் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து, மயிலம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அந்த இடம் காலியாகியது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி ஒருவர் ஒரே நேரத்தில் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ. பதவிகளை வகிக்க முடியாது.

Vijay TVK Rajya Sabha

இதனால் தான் சிவி சண்முகம் தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை கடந்த மாதம் ராஜினாமா செய்திருந்தார். அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, காலியிடத்தை நிரப்புவதற்கான தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

மாநிலங்களவை தேர்தல்

அதன்படி இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. வருகிற 8-ஆம் தேதி வரை மனு தாக்கல் செய்யலாம். 9-ஆம் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். 11-ஆம் தேதி வரை மனுக்களை திரும்பப் பெற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தேவை ஏற்பட்டால் 18-ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு, அதே நாளில் வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும். ஆனால் தற்போதைய அரசியல் சூழலைப் பார்க்கும்போது, இந்த தேர்தலில் போட்டி ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

ராஜ்யசபா எம்பி

காரணம், சட்டப்பேரவையில் தவெக அதிக எம்.எல்.ஏ.க்களை கொண்டிருப்பதால், அந்தக் கட்சி நிறுத்தும் வேட்பாளர் வெற்றி பெறுவது கிட்டத்தட்ட உறுதியாக கருதப்படுகிறது. இதனால் வாக்குப்பதிவு நடைபெறாமலேயே, போட்டியின்றி தவெக வேட்பாளர் தேர்வு செய்யப்படலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. அப்படி நடந்தால், அது தவெக வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும். ஏனெனில், கட்சி தொடங்கப்பட்ட சில ஆண்டுகளிலேயே தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்ததுடன், தற்போது நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையிலும் தனது பிரதிநிதியை அனுப்பும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

ஜெகதீஷ்

இதற்கிடையே, தவெக சார்பில் யாரை மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யலாம் என்பது குறித்து முதல்வர் விஜய் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. கட்சியின் மூத்த நிர்வாகிகள், முக்கிய ஆலோசகர்கள் மற்றும் தேர்தல் வியூகக் குழுவினருடன் அவர் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்சி வட்டாரங்களில் பல்வேறு பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது. அதில் முக்கியமாக விஜய்யின் நெருங்கிய நம்பிக்கைக்குரியவரும், நீண்ட காலமாக அவருடன் செயல்பட்டு வருபவருமான ஜெகதீஷின் பெயர் முன்னணியில் இருப்பதாக பேசப்படுகிறது.

ஜான் ஆரோக்கியசாமி

கட்சியின் அமைப்பு வளர்ச்சியிலும், தேர்தல் கால ஒருங்கிணைப்பிலும் அவர் முக்கிய பங்காற்றியதாக கூறப்படுகிறது. அதேபோல், தவெகவின் தேர்தல் வியூக வடிவமைப்பாளராக கருதப்படும் ஜான் ஆரோக்கியசாமியின் பெயரும் தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தல் திட்டமிடல், தரவு பகுப்பாய்வு மற்றும் பிரசார வியூகங்களில் அவர் வகித்த பங்கு காரணமாக, அவருக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஐபிஎஸ் அதிகாரி ரவி

இதுதவிர ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ரவி, விஷ்ணுரெட்டி, முன்னாள் அமைச்சர் கு.ப. கிருஷ்ணன் உள்ளிட்டோரின் பெயர்களும் கட்சி வட்டாரங்களில் பேசப்படுகின்றன. இருப்பினும் இறுதி முடிவை முதல்வர் விஜய்தான் எடுப்பார் என்றும், கட்சியின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு வேட்பாளர் தேர்வு செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது. மாநிலங்களவை உறுப்பினர் பதவி என்பது வெறும் கௌரவப் பதவி மட்டுமல்ல. தேசிய அரசியல் விவாதங்களில் கட்சியின் குரலை பதிவு செய்யும் முக்கிய பொறுப்பு என்பதால் சில சீனியர்களின் பெயர்களும் அடிபடுகிறது.

டெல்லி அரசியல்

ஆனால், விஜய் தரப்பிலிருந்து இன்னும் உறுதியான தகவல்கள் இல்லை. டெல்லியில் தவெக சார்பாக குரல் கொடுக்கப்போகும் அந்த நபர் யார் என்பதை அறிய கட்சித் தொண்டர்கள் மட்டுமின்றி, தமிழக அரசியல் வட்டாரங்களும் ஆவலுடன் காத்திருக்கின்றன. இந்நிலையில், இன்னும் சில நாட்களில் முதல்வர் விஜய் தனது முடிவை அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அறிவிப்பே தவெகவின் தேசிய அரசியல் பயணத்தின் அடுத்த அத்தியாயத்தை தொடங்கி வைக்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+