Delhi Bomb Blast: கோவை வரும் மோடி.. விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள கார்களை அகற்றும் பணி தீவிரம்
கோவை: தென்னிந்திய இயற்கை வேளாண்மை விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நாளை கோவை வருகின்றார். பிரதமர் கோவை வருகையினை முன்னிட்டு, கோவை விமான நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் கார்களை போலீசார் மீட்பு வாகனங்கள் மூலம் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே டெல்லியில் கார் குண்டுவெடிப்பு நடைபெற்றுள்ள நிலையில் அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் போலீஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
விவசாயிகள் மாநாடு
தென்னிந்திய விவசாயிகள் மாநாடு கோவை கொடிசியா மைதானத்தில் நாளை (புதன்கிழமை) நடைபெறுகிறது. விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி கோவை வரவுள்ளார். அவரின் வருகை அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கோவையின் முக்கியப் புள்ளிகள் மற்றும் பாஜக நிர்வாகிகளையும் மோடி சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த மாநாட்டில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கிவைத்துப் பேசுகிறார். நாளை மதியம் 1.30 மணிக்கு விமானம் மூலம் கோவை வருகிறார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. விமான நிலையத்தில் இருந்து கார் மூலமாக மாநாடு நடைபெறும் கொடிசியா வளாகத்துக்கு பிரதமர் செல்லவுள்ளார்.
உச்சகட்ட பாதுகாப்பு
பின்னர், பிரதமர் மோடி மாலை 3.15 மணியளவில் கொடிசியாவில் இருந்து கார் மூலம் புறப்பட்டு கோவை விமான நிலையத்துக்குச் சென்று, அங்கிருந்து தனி விமானம் மூலமாக டெல்லி செல்கிறார். கோவை மாவட்டத்துக்கு பிரதமர் வருகையை முன்னிட்டு உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளன. விமான நிலையத்தில் ஐந்தடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்பே செவ்வாய், புதன் கிழமைகளில் விமான நிலைய பார்க்கிங் பகுதியில் வாகனங்கள் நிறுத்த கூடாது என காவல் துறை மற்றும் கோவை விமான நிலைய இயக்குநர் சார்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது. கோவை விமான நிலையத்தில் இன்றும், நாளையும் கார்களை நிறுத்தி செல்ல அனுமதி இல்லை என அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே விமான நிலையத்தில் பயணிகள் நிறுத்திவிட்டுச் சென்ற கார்களை அகற்றும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
கார்கள் அகற்றம்
மீட்பு வாகனங்கள் மூலம் கார்களை அகற்றிய காவல் துறையினர் அவற்றை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றனர். இரு தினங்களுக்கு பயணிகளை இறக்கி விடவும், பிக்கப் செய்யவும் மட்டும் வாகனங்கள் அனுமதிக்கப்படும் எனத் தெரிவிக்கபட்டுள்ளது. டெல்லியில் கார் குண்டுவெடிப்பு நடைபெற்றுள்ள சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.
இந்நிலையில், கோவையில் பிரதமர் வரும் நேரத்தில் எந்தவிதமான அசம்பாவிதங்களும் ஏற்படக்கூடாது என்பதால் முன்னெசரிக்கை நடவடிக்கையாக, காவல் துறையினர் இன்று முதல் விமான நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கார்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நகரின் முக்கியப் பகுதிகள் அனைத்தும் காவல் துறையினர் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு உச்சகட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications