ஒரு காலத்தில் எப்படி இருந்த ஊர் தெரியுமா? இன்று தத்தி தடுமாறும் கோயம்புத்தூர்! கொங்கு ஈஸ்வரன் கவலை!
கோவை: தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று புகழ்பெற்ற கோயம்புத்தூர், இன்று தத்தி தடுமாறுவதைப் பார்க்கும் போது வேதனையாக இருக்கிறது என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கோவையின் அடிப்படையே ஆட்டம் கண்டிருப்பதாக அவர் வேதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து கொங்கு ஈஸ்வரன் கவலையுடன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு;

''தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று புகழ்பெற்று ஜவுளித்துறையில் கொடிகட்டி பறந்த கோவை தத்தி தடுமாறுவதைப் பார்க்கும் போது வேதனையாக இருக்கிறது. அடிப்படையே ஆட்டம் கண்டிருக்கிறது. பருத்தி உற்பத்தியில் நாட்டிலேயே கடைசி இடத்தில் தமிழ்நாடு இருக்கிறது.
சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு 40 சதவீதம் பயிரிடுகின்ற நிலப்பரப்பு குறைந்திருக்கிறது. குஜராத், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் தங்களின் பருத்தி உற்பத்தியை பல மடங்கு அதிகப்படுத்தியிருக்கும் போது தமிழ்நாடு பின் தங்கி விட்டது. மற்ற மாநிலங்களிலிருந்து பஞ்சு வாங்கித்தான் நமது நூற்பாலைகள் இயங்குகின்றன.
ஆயத்த ஆடை ஏற்றுமதியில் பங்களாதேஷ் ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில் 12.46 சதவீதம் அதிகமாக அதிகப்படுத்தி வளர்ந்திருக்கிறது. இந்தியாவின் வீழ்ச்சி தான் பங்களாதேஷின் வளர்ச்சி. பங்களாதேஷ் அரசின் கண்காணிப்பும், கவனமும் தான் அவர்களின் வளர்ச்சிக்கு காரணம். பனியன் தொழிலின் வளர்ச்சி பங்களாதேஷில் அபரிமிதமாக உள்ளது.
இதற்கான காரணங்கள்:
1.அரசின் சலுகைகள், குறைவான உற்பத்தி செலவு.
2.பல இந்திய நிறுவனங்களும் இந்தியாவில் தங்கள் நிறுவனங்களை மூடிவிட்டு பங்களாதேஷில் துவங்கியதும் காரணம்.
இந்திய நாட்டிற்கு பாதிப்பு என்றாலும் அதிகமான பாதிப்பு தமிழ்நாட்டுக்கு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த நிலை தொடர்ந்தால் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், சேலம் மாவட்டங்கள் மீள முடியாத வீழ்ச்சியை சந்திக்கும். லட்சக்கணக்கான மக்கள் வேலையிழப்பார்கள்.
மத்திய, மாநில அரசுகள் கவனத்தில் கொண்டு நடவடிக்கைகளில் இறங்காவிட்டால் நாட்டின் மாநிலத்தின் பொருளாதாரம் வீழ்வதிலிருந்து காப்பாற்ற முடியாது. கொங்கு மண்டலத்தில் ஏற்றுமதியாளர்கள் வேறு வழியில்லாமல் பங்களாதேஷ் நோக்கிய பயணத்தை தொடங்கி விட்டார்கள்.
உடனடியாக அரசு தொழில் சார்ந்த சங்கங்களை அழைத்துப் பேசி மேல் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். தமிழ்நாட்டுக்கு தேவை புதிய ஜவுளி பூங்காக்கள் அல்ல, நடந்து கொண்டிருக்கின்ற தொழிற்சாலையை பாதுகாக்கும் நடவடிக்கைகள்.''












Click it and Unblock the Notifications