ஈமு மோசடி: சுசி ஈமு கோழி உரிமையாளருக்கு 10 ஆண்டு சிறை, ரூ.7.80 கோடி அபராதம் விதித்த நீதிமன்றம்
கோவை: ஈமு கோழி மோசடியில் ஈரோடு சுசி ஈமு கோழி உரிமையாளர் குருசாமிக்கு பத்து ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.7.89 கோடி அபராதமும் விதித்து கோவை முதலீட்டாளர் நல பாதுகாப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொங்கு மண்டலத்தில் பல்வேறு நூதன மோசடிகள் அரங்கேறி இருந்தாலும், ஈமு கோழி மோசடியால் பாதிக்கப்பட்டவர்களே அதிகம். தமிழகம் மட்டுமல்லாமல் கேரள மாநிலத்தைச் சேர்ந்த முதலீட்டாளர்களும் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர். அதிக லாபம் என்று மக்களின் ஆசையைத் தூண்டிவிட்டு பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டன. கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக ஈமு கோழி மோசடி வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆஸ்திரேலியா நாட்டு பறவையான ஈமு கோழியை வளர்த்தால் அதில் நல்ல லாபம் கிடைக்கும் எனக் கூறி ஈரோடு மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த 2011 ஆம் ஆண்டு மோசடி நடைபெற்றது. இதை நம்பி தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலத்தை சேர்ந்த ஏராளமானோர் ஈமு கோழி வளர்ப்பு தொடர்பான தொழில்களில் முதலீடு செய்தனர்.
இந்த நிறுவனத்தில் ரூ.1.50 லட்சம் முதலீடு செய்தால் 6 ஈமு கோழிகள், தீவனம், கொட்டகை அமைத்து தரப்படும். பராமரிப்பு தொகையாக மாதம் ரூ.6,000 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும் என்றும், 20 ஆயிரம் ரூபாய் போனஸ் தொகையாக வழங்கப்படும் என்றும் அறிவித்தார். 2 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டிய பணம் திரும்பித் தரப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
இதனை நம்பி ஏராளமானோர் முதலீடு செய்யத் தொடங்கினர். ஆயிரக்கணக்கான பொதுமக்களிடம் இருந்து முதலீடுகளை பெற்றுக் கொண்ட சுசி ஈமு கோழி உரிமையாளர் குருசாமி, பணத்தை கொடுக்காமல் மோசடி செய்தார். இது தொடர்பாக தமிழகம் முழுவதும் 10க்கும் மேற்பட்ட வழக்குகள் பொருளாதார குற்றப் பிரிவில் பதியப்பட்டன.
இதில், சேலத்தில் பதியப்பட்ட வழக்கில் 385 பேரிடம் பணம் பெற்றுக் கொண்டு மோசடி செய்த வழக்கு கோவை முதலீட்டாளர் நல பாதுகாப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இன்றைய தினம் நீதிபதிகள் தீர்ப்பை வழங்கினர். மோசடி செய்த ஈமு கோழி உரிமையாளர் குருசாமிக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும், அபராதமாக ரூ.7 கோடியே 89 லட்சம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராதத் தொகையினை மேல்முறையீட்டு காலம் முடிந்த பின்னர் 385 முதலீட்டாளர்களுக்கும் பிரித்து வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications