ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சையில் ஈரோடு கணேசமூர்த்தி எம்பி.. என்ன காரணம் என தெரியலையே.. துரை வைகோ
கோவை: மதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான ஈரோடு கணேசமூர்த்தி எம்.பி. உடல்நலன் பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கணேசமூர்த்தி எம்பியின் உடல்நலன் பாதிப்புக்கு என்ன காரணம் என்பது தமக்கு தெரியாது என மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
திமுகவில் இருந்து வைகோ வெளியேற்றப்பட்ட போது அவருடன் வெளியேறிய மூத்த தலைவர்களில் கணேசமூர்த்தியும் ஒருவர். ஈரோடு லோக்சபா தொகுதி சிட்டிங் எம்பியாக இருந்து வருகிறார். தந்தை கணேசமூர்த்தியைப் பார்க்க மகன் கபிலன் நேற்று காலை வீட்டுக்கு சென்றார். அப்போது மயக்க நிலையில் தந்தை சுயநினைவற்று கிடந்ததை பார்த்து பதறி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார் கபிலன்.

ஈரோடு பெருந்துறை சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அதிநவீன மருத்துவ உபகரணங்களுடனான ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக கோவை மருத்துவமனைக்கு கணேசமூர்த்தி கொண்டு செல்லப்பட்டார். கணேசமூர்த்தியின் உடல்நிலை குறித்து அமைச்சர் முத்துசாமி நேரில் சென்று விசாரித்தார்.
கணேசமூர்த்தி உடல்நலன் பாதிப்பு குறித்து போலீசார் கூறுகையில், தென்னை மரத்துக்கு வைக்கப்படும் சல்பாஸ் எனப்படும் பூச்சிக்கொல்லி மாத்திரைகளை தண்ணீரில் கலந்து கணேசமூர்த்தி குடித்து தற்கொலைக்கு முயன்றார் என்கின்றனர். ஆனால் இத்தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.
இதனிடையே கோவையில் கணேசமூர்த்தி எம்பி அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு மதிமுக முதன்மை செயலாளர் துரைவைகோ கட்சி நிர்வாகிகளுடன் நேற்று இரவு சென்றார். அங்கு மருத்துவர்களிடம் கணேசமூர்த்தியின் உடல்நலன் குறித்து விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ, கணேசமூர்த்தி எம்பியின் உடல்நலன் பாதிப்புக்கான காரணம் தெரியவில்லை. அவருக்கு கூடுதலான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றனர் மருத்துவர்கள். தற்போதும் ஆபத்தான நிலையில்தான் கணேசமூர்த்தி இருந்து வருகிறார். அடுத்த 24 அல்லது 48 மணிநேரம் கழித்துதான் எதுவும் திட்டவட்டமாக சொல்ல முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் என்றார். கணேசமூர்த்தி தொடர்பான இத்தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் ஈரோடு தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. அத்தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்றார் கணேசமூர்த்தி. தற்போதைய தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு திருச்சி மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. அத்தொகுதியில் துரை வைகோ போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications