இதுதாங்க பெருமை.. முக ஸ்டாலினின் முக்கிய எதிரியே நான் தான்.. ரெய்டு பற்றி எஸ்பி வேலுமணி பரபர பேச்சு
கோவை: ‛‛தமிழக முதல்வர் முக ஸ்டாலின் என்னையை முக்கிய எதிரியாக பார்க்கிறார். இது பெருமையாக இருக்கிறது'' என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி பேசினார்.
தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்களின் வீடு, அலுவலகங்களில் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அவ்வப்போது சோதனை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த 13ம் தேதி அதிமுக ஆட்சியில் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த எஸ்பி வேலுமணி, சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்றது.

எஸ்பி வேலுமணி வீட்டில் சோதனை
இதில் உள்ளாட்சித்துறை அமைச்சரான எஸ்பி வேலுமணியின் வீடு அலுவலகம் உள்பட 26 இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தப்பட்டது. தெருவிளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றும் திட்டத்தில்அரசுக்கு ரூ.500 கோடி இழப்பு ஏற்படுத்திய வழக்கில் எஸ்பி வேலுமணியின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. எஸ்பி வேலுமணியின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்துவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் டெண்டர் முறைகேடு உள்ளிட்ட புகார்களால் 2 முறை லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி இருந்தனர். தற்போது நடந்த சோதனை 3வது முறையாக நடந்துள்ளது.

ஆவணங்கள் பறிமுதல்
இந்த சோதனையின்போது லஞ்ச ஒழிப்பு துறை சோதனையில் ரூ.32.98 லட்சம் ரொக்கமும், 1228 கிராம் தங்க நகைகளும், 948 கிராம் வெள்ளிப் பொருட்களும் மற்றும் 10 நான்கு சக்கர வாகனங்களும் கண்டறியப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய 316 ஆவணங்கள் மற்றும் 2 வங்கி பெட்டக சாவிகள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது.

எஸ்பி வேலுமணி பேச்சு
இந்நிலையில் பிகே புதூர் பகுதியில் அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி பங்கேற்றார். அப்போது அவர் தனது வீட்டில் நடந்த லஞ்ச ஒழிப்புத்துறையின் ரெய்டு பற்றியும், தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பற்றியும் பேசினார். இதுதொடர்பாக எஸ்பி வேலுமணி பேசியதாவது:

லஞ்ச ஒழிப்பு போலீசாரின் தொந்தரவு
கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றது. இதில் ஸ்டாலினுக்கு என்மீது கடும் கோபம் ஏற்பட்டது. மேலும் என் வீட்டில் 3 முறை ரெய்டு நடந்துள்ளது. வீட்டுக்கு எதற்காக ரெய்டு வருகிறார்கள்?. ஒவ்வொரு ரெய்டின்போது போலீசார் வீட்டில் உள்ள ேஷாபா, சேர் ஆகியற்றை தான் பார்த்து செல்கிறார்கள். அதன்பிறகு ஒன்றும் இல்லை என எழுதி கொடுத்துவிட்டு செல்கிறார்கள். வீட்டுக்கு வந்து தொந்தரவு கொடுத்து செல்கிறார்கள். அம்மா உடல்நலம் சரியில்லாமல் உள்ளார். ஆனாலும் அவரது அறைக்கு சென்று தொந்தரவு செய்கிறார்கள்.

முக்கிய எதிரியாக நினைக்கும் ஸ்டாலின்
முக ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தபிறகு கோவை மாவட்டத்தில் ஏதேனும் திட்டம் வந்துள்ளதா?. எதற்கு முக ஸ்டாலினுக்கு என்மீது இவ்வளவு கோபம்?. இன்னொரு விதத்தில் எனக்கு பெருமையாக தான் இருக்கு. நான் உங்களோடு இருந்தவன். இங்கேயே விளையாடி இங்கேயே படித்தவன். ஆனால் இன்று முக ஸ்டாலின் என்னை முக்கிய எதிரியாக பார்க்கிறார். பெரியார், அண்ணா ஆகியோரோடு இருந்த கருணாநிதியின் மகன் முக ஸ்டாலின் என்னையே தான் எதிரியாக நினைக்கிறார். இது பெருமையாக தான் இருக்கிறது'' என பேசினார்.












Click it and Unblock the Notifications