கோவையில் போலி ஆவணம் மூலம் ரூ.14 கோடி நிலம் அபகரிப்பு .. ஐகோர்ட் அதிரடி உத்தரவு
கோவை: கோவையில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.14 கோடி மதிப்புள்ள நிலங்கள் அபகரிக்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் 6 பேர் மீது போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த ஆடிட்டரான ராஜாராம் (73) என்பவர் கடந்த 1998 ஆம் ஆண்டு காளீஸ்வரன், குமாரசாமி ஆகியோரிடமிருந்து கணபதி ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் 43 சென்ட் இடத்தை வாங்கியுள்ளார். அந்த இடத்தை ராஜாராம் சுற்றிலும் கம்பி வேலி அமைத்து பெயர் பலகை வைத்திருந்துள்ளார்.

இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு வேலை விஷயமாக வெளிநாடு சென்றுள்ளார். பின்னர் 2011 ஆம் ஆண்டு ராஜாராம் இந்தியா திரும்பினார். வாங்கி வைத்திருந்த இடத்தில் வீடு கட்டலாம் என ராஜாராம் நேரில் சென்று பார்த்தபோது அங்கு அவருக்கு சொந்தமான 43 சென்ட் இடத்தில் 18 சென்ட் இடத்தில் வேறு சிலர் வீடுகள் கட்டிக் கொண்டிருந்தார்களாம். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜாராம் என்ன நடந்தது என்று விசாரித்துள்ளார்.
அப்போது சி.எம் நகர் என்ற பெயரில் ராஜாராமுக்கு சொந்தமான இடத்தை அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளாக பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டிருப்பது ராஜாராமுக்கு தெரியவந்திருக்கிறது. இதை தொடர்ந்து அவர் மீதமுள்ள காலி இடத்திற்கு கம்பி வேலி அமைத்ததுடன், கோவை சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் கோவை கணபதியைச் சேர்ந்த ராஜு என்கிற ஆறுமுகம் 2006 ஆம் ஆண்டு சுமார் 19 ஏக்கர் நிலத்திற்கு போலியான ஆவணங்களை தயாரித்து தனக்கு சொந்தமான இடத்தை அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளாக பிரித்து விற்றதாக குற்றம்சாட்டினார்.
இதையடுத்து ராஜு என்கிற ஆறுமுகத்திற்கு நிலத்தில் எவ்வித உரிமையும் சம்பந்தமும் இல்லை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனிடையே கடந்த 2011 ஆம் ஆண்டு கோவை மாநகர நில அபகரிப்பு போலீசில் ராஜராம் புகார் அளித்தார். விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே ராஜாராமிற்கு பக்கவாதம் ஏற்பட்டு உடல் நலம் சரியில்லாமல் போயிருக்கிறது. இதை தொடர்ந்து ராஜாராமின் மகன் வெங்கட் மாநகர நில அபகரிப்பு பிரிவு போலீசில் மீண்டும் புகார் அளித்து விரைவாக விசாரணை நடத்துமாறு கோரிக்கை வைத்துள்ளார்.
இதை தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு ராஜாராமின் இடத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்து விற்பனை செய்ததாக தனியார் கல்யாண மண்டப உரிமையாளர் ராஜு என்கிற ஆறுமுகம் என்பவரின் மகன் நாச்சிமுத்து, அவரது சகோதரர் சின்னையா, சின்னையா கவுண்டரின் மனைவி முருகாத்தாள், கல்யாண மண்டப உரிமையாளர் ராஜுவின் மனைவி சகுந்தலா, தனியார் இன்ஜினியரிங் கல்லூரி சீலன் மனைவியும் ராஜுவின் மகளுமான ஸ்ரீமதி உட்பட ஆறு பேர் மீது ஐந்து பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேலும் 2022 ஆம் ஆண்டு ராஜு போலி ஆவணங்கள் மற்றும் அதன் மூலம் கிரயம் செய்த அனைத்து ஆவணங்களை ரத்து செய்ய கோவை மாவட்ட பதிவாளரிடம் ராஜாராம் தரப்பில் அவரது மகன் வெங்கட் புகார் அளித்துள்ளார். புகாரை விசாரித்த மாவட்ட பதிவாளர் அனைத்து போலி ஆவணங்களையும் ரத்து செய்து ஆணையிட்டது.
இதனிடையே தனியார் கல்யாண மண்டப உரிமையாளர் ராஜு உட்பட ஆறு பேர் நில அபகரிப்பு போலீசார் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தனர். கடந்த மாதம் வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கோவை கணபதியில் உள்ள தனியார் கல்யாண மண்டபம் உரிமையாளர் ராஜு என்கிற ஆறுமுகம், அவரது மகன் நாச்சிமுத்து, அவரது சகோதரர் சின்னையா, சின்னையா கவுண்டரின் மனைவி முருகாத்தாள் உள்பட ஆறு பேர் மீது திட்டமிட்டு போலி ஆவணங்கள் மூலம் ராஜாராமின் இடத்தை அபகரித்து விற்றது தொடர்பாக விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய கோவை நில அபகரிப்பு பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது. இதன்படி போலீசாரும் தற்போது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications