கோவை மாநகராட்சியை தட்டி தூக்கிய திமுக.. சொல்லியடித்த ஸ்டாலின்! அடுத்து போட்டிருக்கும் மெகா பிளான்
கோவை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், கோவை மாநகராட்சியில் திமுக மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த ஜன. 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. மொத்தம் 12ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க இந்த உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.
மாநிலத்தில் பெரும்பாலான இடங்களில் வாக்குப்பதிவு அமைதியான முறையிலேயே நடைபெற்ற நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

திமுக சூப்பர் வெற்றி
காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பெரும்பாலான இடங்களில் திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளுமே கைப்பற்றி வருகிறது. 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலைப் போலவே அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதிலும் தோல்வியே அடைந்தன. தனித்துக் களமிறங்கிய மற்ற கட்சிகளுக்கும் பெரியளவில் வெற்றி கிடைக்கவில்லை. எதிர்க்கட்சிகள் வலுவாக உள்ள இடங்களாகக் கருதப்பட்ட பகுதிகளிலும் கூட திமுக மாபெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

மாநகராட்சிகள்
தமிழகத்தில் மொத்தம் உள்ள 138 நகராட்சிகளில் 120க்கும் அதிகமான நகராட்சிகளில் திமுக கைப்பற்றியுள்ள நிலையில், பேரூராட்சிகளில் 490இல் 360க்கும் அதிகமான பேரூராட்சிகளில் திமுக வசம் சென்றுள்ளது. அதேபோல 21 மாநகராட்சிகளை திமுக அப்படியே கொத்தாக அள்ளியுள்ளது. இதில் கொங்கு மண்டலத்தில் இதயமாகக் கருதப்படும் கோவை மாநகராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது பெரும் சாதனையாகவே பார்க்கப்படுகிறது.

கோவை
ஏனென்றால், கோவை மாவட்டம் என்பது அதிமுகவின் எஃகு கோட்டையாகக் கருதப்படுகிறது. கடந்த சட்டசபைத் தேர்தலில் கூட கோவையில் உள்ள 10 தொகுதிகளையும் அதிமுக கூட்டணியே கைப்பற்றியது. திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி கூட, கோவையில் சில தொகுதிகளிலாவது வெல்வோம் என எதிர்பார்த்ததாகவும் ஆனால் கோவை மக்கள் தங்களை ஏமாற்றிவிட்டதாகக் கூறி வருத்தப்பட்டு இருந்தார். அப்படி திமுகவால் உள்ளே நுழையவே முடியாத நிலையில் இருந்த கோவை அதிமுகவின் கோட்டையை திமுக இந்த முறை தகர்த்துள்ளது.

கோவையில் திமுக கொடி
1981ம் ஆண்டு மாநகராட்சியாகத் தரம் கோவை, தலைநகர் சென்னைக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் மிகப் பெரிய மாநகராட்சியாக உள்ளது. மொத்தம் 100 வார்டுகளை கொண்ட கோவையில் இதுவரை 66 வார்டுகளில் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள உள்ள நிலையில், அதில் 62 இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக அதில் திமுக மட்டும் 51 வார்டுகளில் வென்றுள்ளது. திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் 5 வார்டுகளிலும், சிபிஎம் 3 வார்டுகளிலும் மதிமுக 2 வார்டுகளிலும், சிபிஐ ஒரு வார்டிலும் வென்றுள்ளது.

செந்தில் பாலாஜி
அதிமுகவின் கோட்டையாகக் கருதப்பட்ட கோவையில் அதிமுகவால் இதுவரை முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள 66 இடங்களில் வெறும் 3 வார்டுகளில் மட்டுமே வெல்ல முடிந்துள்ளது. 66 இடங்களில் வென்றதன் மூலம் கோவை மாநகராட்சி திமுக வசம் வந்துள்ளது. இதற்குக் கரூர் எம்எல்ஏ செந்தில்பாலாஜி தான் முக்கிய காரணம். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் முன்பே கோவைக்கான பொறுப்பு செந்தில் பாலாஜிக்கு அளிக்கப்பட்டது.

என்ன காரணம்
அதன் பின்னர், அவர் தொடர்ச்சியாக ஆய்வுக் கூட்டங்கள், குறை தீர்ப்பு கூட்டங்கள் மூலம் மக்களைத் தொடர்ந்து சந்தித்து வந்தார். இது திமுக ஆட்சியில் புறக்கணிக்கப்படுகிறோம் என்ற எண்ணம் கோவை மக்களுக்கு வராமல் இருக்க உதவியது. மேலும் முதல்வர் ஸ்டாலின் வேறு எந்த மாவட்டங்களிலும் இல்லாத அளவுக்குக் கோவைக்கு அதிக முறை நேரடியாகவே சென்று, பல்வேறு திட்டங்களை அறிவித்திருந்தார்.

அடுத்து பிளான்
இப்படி முன் கூட்டியே திட்டமிட்டு திமுக எடுத்த நடவடிக்கைகள் தான் கோவையில் அக்கட்சி விஸ்வரூப வெற்றி பெற உதவியது. குறிப்பாக திமுக மட்டும் குறைந்தது 51 வார்டுகளில் வென்றுள்ளதன் மூலம் திமுகவைச் சேர்ந்த ஒருவர் முதல்முறையாகக் கோவை மாநகராட்சி மேயர் ஆகும் வாய்ப்பு அமைந்துள்ளது. இது கோவை திமுக தொண்டர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. மேலும், வரும் காலத்தில் திமுகவின் வீக் லிங்காக இருக்கும் கோவையை வலுப்படுத்த இது பெரியளவில் உதவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த காலங்கள்
கடந்த காலங்களில் கோவையின் முதல் மேயராக அப்போது திமுக கூட்டணியில் இருந்து போட்டியிட்ட வி.ஜி. என்று அழைக்கப்பட்ட கோபாலகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர், 2001 உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று, அக்கட்சியின் மலரவன் கோவையின் 2ஆவது மேயர் ஆனார். அதைத் தொடர்ந்து 2006இல் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸின் காலனி வெங்கடாசலம் மேயர் ஆனார். 2011இல் செ.ம.வேலுச்சாமி அதிமுக சார்பில் மேயர் ஆன நிலையில், அவரது செயல்பாடுகளில் திருப்தி இல்லாததால் 2014இல் அவர் நீக்கப்பட்டு கணபதி ராஜ்குமார் என்பவரை மேயராக்கினார் ஜெயலலிதா!

என்ன முடிவு
அதாவது கடந்த காலத்தில் இரண்டு முறை திமுகவுக்கு மேயர் ஆகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இருப்பினும், இரண்டு முறையும் கோவை மாநகராட்சியைக் கூட்டணிக் கட்சிகளுக்குக் கொடுத்துவிட்டது திமுக! பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களில் இந்த முறை திமுக வென்றுள்ள நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த ஒருவர் மேயராக நியமிக்கப்படுவாரா அல்லது வழக்கம் போலக் கோவை கூட்டணிக்கு ஒதுக்கப்படுமா என்பது சில நாட்களில் தெரிந்துவிடும்.












Click it and Unblock the Notifications