"அந்த மனசுதான் சார் ".. ஊழியர்களுக்கு 80 லட்சத்தில் தனி வீடு.. முன்னாள் துணைவேந்தரின் தரமான செயல்
கோவை: வேலை செய்யும் ஊழியர்களிடம் இருந்து உழைப்பை மட்டுமே உறிஞ்ச நினைக்கும் முதலாளிகளுக்கு மத்தியில், தனது வீட்டில் பணிபுரியும் ஊழியர்கள் 4 பேருக்கு ரூ. 80 லட்சம் மதிப்பிலான வீடுகளை கட்டிக் கொடுத்து அசத்தியுள்ளார் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி. இவருடைய இந்த செயலைப் பொதுமக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். நம்மைச் சுற்றி இருப்பவர்களை நாம் மகிழ்ச்சியாக வைத்திருந்தால் தான் நாமும் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்கிறார் அவர்.
மிடில் கிளாஸ் மக்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கும் கனவு, எப்படியாவது நமக்குனு ஒரு வீட்டை கட்டி வேண்டும் என்பதாகத்தான் இருக்கும். படித்து நல்ல வேலையில் நல்ல வருமானம் பெறும் நடுத்தர வர்க்கத்தினருக்கே கனவு வீடு என்பது பெரிய சவாலாக இருக்கும் நிலையில், தலா ரூ. 80 லட்சத்தில் தன் வீட்டில் பணிபுரியும் ஊழியர்களுக்காக கட்டிக் கொடுத்திருக்கிறார் அண்ணா பல்கலை முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி.

அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் பாலகுருசாமி (79). இவர் தற்போது கோவை வடவள்ளி பகுதியில் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் பணிபுரியும் கார் ஓட்டுநர் புவனேஷ்வரன், சமையல், வீட்டு வேலை, தோட்ட வேலை பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் பாக்யா, கிருஷ்ணவேணி, பிரபாவதி ஆகிய 4 பேருக்கும் மருதமலை சாலையில் உள்ள ஐ.ஓ.பி. காலனி பகுதியில் தனித்தனியாக வீடுகள் கட்டிக் கொடுத்துள்ளார்.
தலா 3 சென்ட் பரப்பளவில் ஆயிரம் சதுர அடியில் 2 படுக்கை அறைகள் கொண்ட வீடுகளை, தனது சொந்த செலவில் அவர் கட்டித் தந்துள்ளார். பாக்யா என்பவருக்கு நேற்று முன்தினமும், மற்ற மூன்று பேருக்கு நேற்றும் வீட்டுச்சாவிகளை பாலகுருசாமி ஒப்படைத்தார். துணை வேந்தரின் இந்த செயல் ஊழியர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பாலகுருசாமி கூறியதாவது: இப்போது இருக்கும் பொருளாதார சூழலில் வேலை செய்து சம்பளம் வாங்கி, காசு சேர்த்து வீடு கட்டுவது என்பது எல்லோராலும் முடியாது. குடும்பத்தை நடத்த மட்டுமே போதுமானதாக இருக்கும். நம்மைச் சுற்றி இருப்பவர்களை மகிழ்ச்சியாக வைத்திருந்தால் தான் நாமும் மகிழ்ச்சியாக இருக்க முடியும். அதன் அடிப்படையில் தான் 4 பேருக்கு வீடுகள் கட்டித் தந்துள்ளேன்.
நாம் மட்டும் வசதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தால் போதுமா. நம்மை நன்றாக பார்த்துக் கொள்கிறவர்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அவர்களும் நமது குடும்பத்தில் ஒரு அங்கம்தான். வீடு கட்ட பெரும் தொகை செலவாகும் நிலையில், அவர்களால் வீடு கட்டுவது சாத்தியம் இல்லை.
என்னிடம் பணம் இருப்பதால், நான் வீடுகளை கட்டித் தந்துள்ளேன். இதுமட்டுமின்றி நான் டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் வசித்தபோது, என்னிடம் பணியாற்றிய 15 பேருக்கு வீடுகள் கட்டவும், வீடுகளை புனரமைக்கவும் உதவி செய்துள்ளேன். இதேபோல மருத்துவ உதவிகள், குழந்தைகளின் பள்ளி, கல்லூரிகளுக்கான கல்விச் செலவு, திருமணச் செலவு உள்ளிட்டவைகளுக்கும் உதவி செய்துள்ளேன் என்றார்.












Click it and Unblock the Notifications