திமுகவில் இணைந்தார் கோவை வைஷ்ணவி.. “தவெகவும் பாஜகவும் ஒண்ணு”.. சொன்னதை கவனிச்சீங்களா?
கோவை: தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து அண்மையில் விலகிய வைஷ்ணவி, திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்துள்ளார். இன்று முதல் என் மக்கள் பணி திராவிட முன்னேற்றக் கழகத்தின் வழியில் தொடரும் என வைஷ்ணவி தெரிவித்துள்ளார்.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இருந்த வைஷ்ணவி இந்த மாத தொடக்கத்தில் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். கோவையைச் சேர்ந்த இவர் தொடர்ந்து கட்சி சார்ந்த பணிகள் மற்றும் கூட்டங்களில் நிராகரிக்கப்படுவதாக வேதனை தெரிவித்து கட்சியில் இருந்து வெளியேறினார்.

இது தொடர்பாக வைஷ்ணவி வெளியிட்ட அறிக்கையில், தொடர்ந்து நிராகரிப்பை மட்டுமே சந்தித்து வந்ததாகவும் மூன்று மாதங்களாக மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் தெரிவித்தார். மேலும் தன் வளர்ச்சியைத் தடுப்பதாக நினைத்து கட்சியின் வளர்ச்சியை தடுக்கச் சிலர் செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.
மேலும், சிறுக சிறுக சேர்த்த ரூ 5 லட்சத்தை வைத்து கட்சியில் இருந்து நலத்திட்ட உதவிகளை செய்ததாகவும் உயர்மட்ட கட்சி நிர்வாகிகளின் நிராகரிப்பால் அதை தொடர முடியவில்லை என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்து தவெகவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார்.
ஒரு பெண் சமூக பிரச்சனையை கையில் எடுத்து போராட வீதிக்கு வந்தால் "நீயெல்லாம் ஒரு பொண்ணா? உனக்கெல்லாம் எதுக்கு அரசியல், ஒழுங்கா வீட்டுகுள்ளேயே இரு. உனக்கு என்ன தெரியும் அரசியலை பற்றி என வசம்பு வார்த்தைகளால் நசுக்கப்படுவது அனைவரும் அறிந்ததே. என்னையும் அந்த வார்த்தைகள் விட்டுவைக்கவில்லை. என்னுடைய மக்கள் பணிக்கு ஒரு சிலர் முற்று புள்ளி வைக்க நினைக்கிறார்கள். அது ஒரு போதும் நடக்காது மக்களுக்கான சேவையை எந்த தளத்தில் இருந்தாலும் நான் தொடர்ந்து செய்து கொண்டே இருப்பேன்." எனக் கூறி இருந்தார்.
இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து பிரிந்த வைஷ்ணவி திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் தற்போது திமுகவில் இணைந்துள்ளார். அவருடன் மேலும் சில இளைஞர்களும் திமுகவில் இணைந்தனர்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த வைஷ்ணவி, "பாஜகவின் மற்றொரு திரையாக தவெக விளங்குகிறது என்பதுதான் உண்மை. தவெகவில் ஒரு வருடமாக பயணம் செய்தேன். அரசியலில் இளைஞர்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் முன்னுரிமை கொடுப்பார்கள் என நினைத்தோம். அதனால்தான் இளைஞர்கள் , இளம்பெண்கள் தவெகவில் இணைந்தார்கள். ஆனால் அதிருப்தி தான் மிச்சம். அவர்கள் இளைஞர்களுக்கு முன்னுரிமை கொடுக்கவில்லை. இன்றைய தினம் திமுகவில் இணைந்துள்ளேன்" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications