கோவை அவிநாசி சாலையில் வரப்போகும் வேற லெவல் மாற்றம்.. அமைச்சர் எ வ வேலு அப்டேட்
கோவை: கோவை மாவட்டம் கல்வி, தொழில், மருத்துவம் ஆகியவற்றில் பெரிய வளர்ச்சியை எட்டி வருகிறது. இதனால் கோவையின் உள்கட்டமைப்பு வசதி மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. போக்குவரத்து நெரிசல் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. மேம்பாலங்கள் அமைக்கப்பட்டும் அதற்கு தீர்வு இல்லை. அவிநாசி சாலையில் தமிழ்நாட்டில் மிக நீளமான மேம்பாலம் திறந்தும் போக்குவரத்து நெரிசல் அதிகமாகத்தான் இருக்கிறது. இதை சரி செய்வதற்கு தமிழ்நாடு அரசு கொண்டு வரப்போகும் திட்டம் குறித்து அமைச்சர் எ.வ. வேலு அப்டேட் கொடுத்துள்ளார்.
கோவை காந்திபுரம் மத்திய சிறைச்சாலை அருகே தமிழ்நாடு அரசு சார்பில் தந்தை பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையம் கட்டப்பட்டு வருகிறது. இதன் கட்டுமானப் பணிகளை பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்ளைச் சந்தித்த அவர், "திராவிட மாடல் ஆட்சியில் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

கோவை பெரியார் நூலகம்
அறிவுள்ள சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில், மதுரையைத் தொடர்ந்து கல்வி மாவட்டமான கோவையில் இந்த நூலகம் அமைக்கப்படுகிறது.சுமார் 245 கோடி ரூபாய் கட்டிட மதிப்பீடு மற்றும் 50 கோடி ரூபாய் புத்தக மதிப்பீடு என மொத்தம் 300 கோடி ரூபாய் மதிப்பில் இந்த மையம் அமையவுள்ளது. தந்தை பெரியார் பெயர் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று 'பெரியார் அறிவுலகம்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்த மையத்தில், 400 பேர் அமரக்கூடிய கருத்தரங்கம், டிஜிட்டல் நூலகம், தமிழ் மற்றும் ஆங்கில நூல் பிரிவுகள் அமையவுள்ளன. மேலும், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்குத் தனி நூலகம், சொந்தப் புத்தகங்களைக் கொண்டு வந்து படிக்கத் தனி இடம் மற்றும் பெரிய அளவிலான வாகன நிறுத்துமிடம் ஆகிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் ஒரு லட்சம் புத்தகங்களை அடுக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
அவிநாசி சாலை போக்குவரத்து
வருகிற பிப்ரவரி 10 ஆம் தேதிக்குள் அனைத்துப் பணிகளும் நிறைவடையும். 13 மாதங்களிலேயே கட்டுமானப் பணிகள் முடிந்துள்ளன. தரமான பொருட்களைக் கொண்டு கட்டுமானப் பணிகள் முழுமையாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. பணிகள் நிறைவடைந்த பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த மையத்தை திறந்து வைப்பார். கோவை மேற்கு புறவழிச்சாலை முதல்கட்டப் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளன.
அவிநாசி சாலை ஜி.டி.நாயுடு மேம்பாலத்தை நீலாம்பூர் வரை நீட்டிக்கத் திட்டமிட்டுள்ளோம். போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதிகளில் ஆய்வு செய்து சுரங்கப்பாதை அமைக்கப்படும். கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ள நிலையில், மீண்டும் அதற்காகக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மதுக்கரை மேம்பாலத் திட்டத்திற்கு இன்னும் நிதி வரவில்லை.
பரிந்துரை
கடந்த ஆட்சியின் ஏராளமான கடன் சுமை வைக்கப்பட்டுள்ளது. அதற்கு நடுவே கோவைக்கு பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. கோவைக்கு தேவையான ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் குறித்து முதலமைச்சரிடம் பரிந்துரை செய்யப்படும். திமுக கூட்டணி பலமாக உள்ளது. மீண்டும் ஆட்சி அமைக்கும் வகையில் உறுதியுடன் செயல்படுகிறோம்" என்றார்.












Click it and Unblock the Notifications