GDN: பழைய கோவையை அப்படியே கண்முன் கொண்டு வந்த படக்குழு.. இதுதான் பிரம்மாண்டம்
கோவை: ஆகஸ்ட் 4ம் தேதி பத்திரிகையாளர்கள், இன்ஃப்ளூயன்சர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பார்வையாளர்களுக்காக நடைபெற்ற சிறப்பு ஸ்கிரீனிங் நிகழ்வுக்கு பிறகு அனைவரின் கருத்தும் ஒன்றாக இருந்தது.. "இவ்வளவு முழுமையான ஒரு சினிமாவை யாரும் எதிர்பார்க்கவில்லை" என்பதே அது!
தியேட்டர்களில் ரிலீஸ் ஆகும் முன்பே, ஆகஸ்ட் 4ம் தேதி பத்திரிகையாளர்கள், இன்ஃப்ளூயன்சர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பார்வையாளர்களுக்காக GDN திரைப்படம் திரையிடப்பட்டது. படம் முடிந்த பிறகு நடைபெற்ற விவாதத்தில், நடிகர்களின் நடிப்பு குறித்தோ, கதையின் முக்கிய காட்சிகள் குறித்தோ அதிகம் பேசப்படவில்லை. மாறாக, பட தயாரிப்பின் பிரம்மாண்டம்தான் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

20ம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் மத்திய காலகட்டம் வரையிலான கோவை வாழ்வியலை அப்படியே திரையில் நம்பும்படி உருவாக்க முடியுமா என்ற சந்தேகத்துடன்தான் சிலர் படத்தைப் பார்க்க வந்ததாக தெரிவித்தனர். ஆனால் படம் முடிந்து இறுதி காட்சிகள் நிறைவடைந்தபோது, அந்த சந்தேகம் ஆச்சரியமாக மாறியிருந்தது.
முதல் நாளிலேயே சுவாரஸ்யம்
இயக்குநர் கிருஷ்ணகுமார் ராமகுமார், படப்பிடிப்பின் பிரம்மாண்டத்தை விளக்கும் ஒரு சம்பவத்தை பகிர்ந்துகொண்டார். இளம் ஜி.டி. நாயுடுவாக நடித்துள்ள நடிகர் டீஜே அருணாசலம், படப்பிடிப்பின் முதல் நாளில் செட்டுக்கு வந்தபோது, தான் எங்கு இருக்கிறோம் என்பதையே உண்மையாக புரிந்துகொள்ள முடியாமல் இருந்ததாக இயக்குநர் தெரிவித்தார்.
அவர் மேலும், "ஒரு முழு கிராமத்தையே காலி செய்துவிட்டு.. அங்கு தான் படப்பிடிப்பு நடத்துகிறார்கள் என்று அவர் நினைத்துவிட்டார். அந்த அளவுக்கு ஒவ்வொரு விஷயத்திலும் நாங்கள் கவனம் செலுத்தியிருந்தோம். படப்பிடிப்பு தளத்தில் அவ்வளவு உண்மையான செட் அமைத்திருந்தோம்" என்று கிருஷ்ணகுமார் கூறினார். அது பழைய காலத்து கிராமம் போல தோற்றமளிக்க அமைக்கப்பட்ட செட் அல்ல. டீஜே அருணாசலத்துக்கு ஏற்பட்ட குழப்பத்தைப் போலவே, உண்மையிலேயே பழமையான கிராமம் போலவே இருந்தது.
துல்லியம்
இந்த அளவுக்கு துல்லியமான செட்களை உருவாக்கிய பெருமை கலை இயக்குநர் சிரில் மற்றும் அவரது டீமையே சேரும் என்று கிருஷ்ணகுமார் குறிப்பிட்டார். தெருக்கள் மற்றும் கடைகளின் தோற்றத்தை மட்டும் அவர்கள் உருவாக்கவில்லை. ஜி.டி. நாயுடுவின் கண்டுபிடிப்புகள் மற்றும் அவருடன் தொடர்புடைய வாகனங்களும் அதே அளவிலான துல்லியத்துடன் மீண்டும் உருவாக்கியுள்ளார்.
பார்வையாளர்கள் கவனிக்காமல் விட்டுவிடும் சிறிய விஷயங்களிலும் கூட படக்குழு அதிக கவனம் செலுத்தியுள்ளது. இயக்குநர் கிருஷ்ணகுமார் மேலும், "அவர் உருவாக்கிய ஒவ்வொரு கண்டுபிடிப்பும், அவர் பயன்படுத்திய ஒவ்வொரு வாகனமும் சிரிலின் குழுவால் மிக துல்லியமாக மீண்டும் உருவாக்கப்பட்டது" என்று தெரிவித்தார்.
இந்த உண்மைத்தன்மையை திரையில் காட்டுவதில் ஒளிப்பதிவாளர் அரவிந்த் மற்றொரு முக்கியமான சவாலை எதிர்கொண்டார். ஒரு பீரியட் சினிமா உண்மை போன்ற உணர்வை ஏற்படுத்துவதில் லைடிங் முக்கிய பங்கு வகிப்பதாக அவர் கூறினார். சரியான முறையில் லைடிங் செய்யப்படவில்லை என்றால் துல்லியமாக உருவாக்கப்பட்ட ஒரு இடம்கூட செயற்கையான செட் போலவே பார்வையாளர்களுக்கு தோன்றிவிடும்.
VFX தொழில்நுட்பம்
இதற்காகவே VFX தொழில்நுட்பத்துடன் AI உதவியுடன் செயல்படும் கருவிகளையும் இணைத்து பயன்படுத்தியதாக அரவிந்த் தெரிவித்தார். இதன் மூலம் படத்தின் தரத்தில் எந்த சமரசமும் இல்லாமல், தாங்கள் விரும்பிய காலகட்டத்தின் தோற்றத்தையும் உணர்வையும் உருவாக்க முடிந்ததாக அவர் கூறினார்.
மேலும், GDN திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் கோயம்புத்தூரிலேயே நடைபெற்றுள்ளது. ஜி.டி. நாயுடு தனது தொழில்களை நடத்தி வந்த உண்மையான இடங்களிலேயே படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. வேறு இடங்களை கோயம்புத்தூராக மாற்றி காட்டுவதற்கு பதிலாக, முடிந்தவரை உண்மையான இடங்களையே பயன்படுத்தியுள்ளனர். அதேபோல், ஜி.டி. நாயுடு தனது வாழ்நாளில் பயன்படுத்திய பொருட்களையும் படத்தில் பயன்படுத்த படக்குழு முயற்சி செய்துள்ளது.
அவருடன் தொடர்புடைய சில கார்கள் அவரது குடும்பத்தினரால் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு, இயங்கும் நிலையில் உள்ளன. படப்பிடிப்புக்காக அந்த வாகனங்களை குடும்பத்தினர் படக்குழுவிடம் வழங்கியுள்ளனர். அந்த கார்கள் மட்டுமின்றி, பாதுகாக்கப்பட்ட ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் அதே காலகட்டத்தை சேர்ந்த பேருந்துகளும் படத்தில் இடம்பெற்றுள்ளன. அவை அந்த காலத்தில் இருந்த அதே தோற்றத்தில் திரையில் காட்டப்பட்டுள்ளன.
ஹிட்லர் காலத்து ஜெர்மனி
படத்தின் VFX மற்றும் CGகளிலும் இதே அளவிலான துல்லியம் பின்பற்றப்பட்டுள்ளது. VFX என்பது பார்வையாளர்களுக்கு தெரியக்கூடாது என்பதில் படக்குழு தெளிவாக இருந்துள்ளது. அப்படி தான் ஜி.டி. நாயுடு வெளிநாடுகளுக்கு சென்றபோது நடந்த சம்பவங்களின் ஒரு பகுதியாக, ஹிட்லர் காலத்து ஜெர்மனியில் நடைபெற்ற அணிவகுப்பு ஒன்றை மையமாக கொண்ட காட்சியும் படத்தில் இடம்பெற்றுள்ளது. அந்த காட்சி மிகத் துல்லியமாக உருவாக்கப்பட்டுள்ளதாக பலரும் பாராட்டினர்.
VFX டீம் போட்ட கடின உழைப்புக்கு இந்த காட்சி ஒரு சிறந்த உதாரணம் என்று இயக்குநர் கிருஷ்ணகுமாரும் ஒளிப்பதிவாளர் அரவிந்தும் குறிப்பிட்டனர். லைடிங் போலவே இங்கும் AI கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் அவற்றை மிகவும் கவனமாக பயன்படுத்தியதால், அவை செயற்கையாக தெரியவில்லை.
பிரம்மாண்டம்
உண்மையான படப்பிடிப்பு தளங்கள், உண்மையான இயந்திரங்கள், பக்காவான கலை இயக்கம் மற்றும் கதைக்குள் கரைந்துவிடும் வகையில் உருவாக்கப்பட்ட VFX தொழில்நுட்பம் என அனைத்தும் இணைந்து GDN திரைப்படத்தின் பிரம்மாண்டத்தை உருவாக்கியுள்ளன. இவை எல்லாம் சேர்ந்து கொடுத்த பிரம்மாண்டமே GDN திரைப்படத்தின் கதையின் மிக முக்கியமான சாதனைகளில் ஒன்றாக மாறியுள்ளது. GDN திரைப்படம் தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளிலும், உலகம் முழுவதும் இன்று வெளியானது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
