வீட்டுக்கடன் தவணை ரத்து.. கோவை நுகர்வோர் நீதிமன்றம் சூப்பர் உத்தரவு.. காப்பீடு எடுத்தவர்களே கவனம்
கோவை: தனிநபர் கடன், வீட்டுக்கடன் வாங்குவோருக்கு கடன் கொடுக்கும் போது, கடனுக்கு செக்யூரிட்டியாக இன்சூரன்ஸ் எடுப்பதை வங்கிகள் வழக்கமாக வைத்துள்ளன. இப்படிப்பட்ட சூழலில் கோவை குனியமுத்தூரில் இன்சூரன்ஸ் பணம் செலுத்திய நிலையில் விபத்தில் மரணம் அடைந்தவரின் வீட்டுக்கடன் தவணையை ரத்து செய்து பத்திரம் வழங்க வேண்டும் என்று நிதி நிறுவனத்துக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விவரமாக பார்ப்போம்.
தனிநபர் கடன், வீட்டுக்கடன் வாங்குவோருக்கு கடன் கொடுக்கும் போது கொடுத்த கடன் வராமல் போகும் என்ற அச்சம் காரணமாக வங்கிகள் காப்பீடு செய்வதை வழக்கமாக வைத்துள்ளன. கடன் தொகையுடன் அந்த காப்பீடு தொகையையும் கடன் வாங்கியவர் தான் கட்ட வேண்டும். ஒருவேளை கடனை சரியாக செலுத்தி வரும் போது, திடீரென ஏற்படும் விபத்து, வேலையிழப்பு, மரணம் போன்ற எதிர்பாராத நிகழ்வுகளின் போது, வங்கிக்கு காப்பீடு நிறுவனம் தொகையை செலுத்த வேண்டும்.

குறிப்பாக விபத்தில் மரணம் அல்லது நிரந்த உடல் பாதிப்பு ஏற்படும் போது முழு தொகையை வங்கிகளுக்கு காப்பீடு நிறுவனங்கள் செலுத்திவிடும். இதுதான் கடனுக்கான காப்பீட்டில் உள்ள நடைமுறையாகும். ஆனால் இதனை சில காப்பீடு நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், வங்கிகள் பின்பற்றாமல் வாடிக்கையாளர்களை அலைகழிக்கும் சம்பவங்களும் நடக்கின்றன. அப்படித்தான் கோவையில் நடந்துள்ளது.
கோவை குனியமுத்தூர் வேளாளர் வீதியை சேர்ந்த கிருஷ்ணவேணி என்பவர் கோவை நுகர்வோர் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் அவர் கூறுகையில், "கோவை அவினாசி ரோடு லட்சுமி மில் சந்திப்பு பகுதியில் உள்ள தனியார் வீட்டு கடன் நிதி நிறுவனத்தில் ரூ.15 லட்சத்து 74 ஆயிரம் கடன் பெற்று இருந்தோம். அப்போது இன்சூரன்ஸ் தொகை ரூ.74 ஆயிரத்து 359-ம் செலுத்தப்பட்டது. மேலும் மாதந்தோறும் தவணை தொகை ரூ.22 ஆயிரத்து 530-ஐ சரியான முறையில் செலுத்தி வந்தோம்.
இந்தநிலையில் எனது கணவர் சோமசுந்தரம், இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்தில் சிக்கி கடந்த 2023-ம் ஆண்டு இறந்தார். இதையடுத்து இறப்பு சான்றிதழ், விபத்து தொடர்பாக போலீசாரின் முதல் தகவல் அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களை சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்தில் தாக்கல் செய்து, கடன் தவணை தொகையை முடித்து, எம்.ஓ.டி. ஒப்பந்தத்தை ரத்து செய்து பத்திரத்தை திரும்ப தருமாறு கேட்டுக்கொண்டோம்.
ஆனால் அதனை சம்பந்தப்பட்ட நிதி நிறுவனம் கண்டு கொள்ளவில்லை. அதோடு மீதம் உள்ள தவணைகளை செலுத்துமாறு எங்களை அறிவுறுத்தியது. இது முற்றிலும் சட்ட விதிமீறல் ஆகும். எனவே நுகர்வோர் கோர்ட்டு உரிய உத்தரவிடுவதுடன், இழப்பீடு வழங்க வேண்டும்"
இவ்வாறு கிருஷ்ணவேணி அதில் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த கோவை நுகர்வோர் கோர்ட்டு நீதிபதி தங்கவேலு, உறுப்பினர்கள் மாரிமுத்து, சுகுணா ஆகியோர் விசாரித்து, சம்பந்தப்பட்ட நிதி நிறுவனம் கடன் தவணையை ரத்து செய்து, பத்திரத்தை வழங்க வேண்டும். மேலும் மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.25 ஆயிரமும், கோர்ட்டு செலவாக ரூ.5 ஆயிரமும் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications