கவலைக்கிடம்.. தற்கொலைக்கு முயன்ற ஈரோடு எம்பி உடல்நிலை எப்படி இருக்கு? அடுத்த 48 மணிநேரம் முக்கியம்
கோவை: தற்கொலைக்கு முயன்று மருத்துவ சிகிச்சையில் உள்ள ஈரோடு மதிமுக எம்பி கணேசமூர்த்தியின் உடல்நிலை சீரியஸாக இருப்பதாகவும், அடுத்த 48 மணிநேரத்துக்கு பிறகு தான் உடல்நிலை பற்றி எதுவும் கூற முடியும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
வைகோவின் மதிமுக கட்சியை சேர்ந்தவர் கணேச மூர்த்தி. இவர் 3வது முறையாக எம்பியாக உள்ளார். குறிப்பாக மதிமுக சார்பில் ஈரோடு எம்பியாக 2 முறை தேர்வு செய்யப்பட்டார். ஈரோடு தொகுதி எம்பியாக கடந்த 2009 ம் ஆண்டில் வெற்றி பெற்றார். அதன்பிறகு 2014 தேர்தலில் ஈரோடு தொகுதியில் தோல்வியடைந்தார்.
இருப்பினும் கடந்த 2019 லோக்சபா தேர்தலில் ஈரோடு தொகுதியில் மதிமுக போட்டியிட்டார். மீண்டும் மதிமுக வேட்பாளராக களமிறங்கிய கணேசமூர்த்தி வெற்றி பெற்றார். தற்போது அவர் சிட்டிங் எம்பியாக உள்ளார். இவருக்கு வயது 77.

இந்நிலையில் தான் வரும் லோக்சபா தேர்தலில் மீண்டும் போட்டியிட அவர் தயாராகி வந்தார். திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்படும் என நினைத்தார். ஆனால் திமுக கூட்டணியில் ஈரோடுக்கு பதில் திருச்சி தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. திருச்சியில் வைகோ மகன் துரை வைகோ போட்டியிட்டுள்ளார்.
இதற்கிடையே தான் ஈரோடு தொகுதி கிடைக்காததால் கணேச மூர்த்தி எம்பி மனம் உடைந்து காணப்பட்டார். இந்நிலையில் தான் கடந்த 24ம் தேதி திடீரென்று கணேசமூர்த்தி எம்பி தனது வீட்டில் தற்கொலைக்கு முயன்றார். வீட்டில் சல்பாஸை தண்ணீருடன் சேர்த்து அவர் உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.
இதையடுத்து அவர் கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கணேசமூர்த்தியின் உடல்நலம் குறித்து மதிமுக நிர்வாகிகள், திமுக நிர்வாகிகள் கேட்டு வருகின்றனர். மேலும் கணேச மூர்த்தியின் இந்த செயல் என்பது மதிமுகவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ஏனென்றால் மதிமுகவில் வைகோவின் தீவிர ஆதரவாளாக இருந்தவர் தான் கணேசமூர்த்தி. இத்தகைய சூழலில் தான் அவரது தற்கொலை முயற்சி மதிமுக நிர்வாகிகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. தற்கொலைக்கு முயன்று 2 நாட்கள் ஆகும் நிலையில் மருத்துவமனையில் கணேச மூர்த்திக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் மருத்துவமனை சிகிச்சையில் உள்ள ஈரோடு எம்பி கணேச மூர்த்தியின் உடல்நலம் தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அவருக்கு விஷ முறிவு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதோடு தொடர்ந்து அவரது உடல்நிலையை டாக்டர்கள் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் தான் கணசேமூர்த்தியின் உடல்நிலை குறித்து அடுத்த 48 மணிநேரத்துக்கு பிறகு தான் கூற முடியும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications