தமிழ்நாட்டின் ரயில் பயண அனுபவத்தையே மாற்றும் வந்தே பாரத் ரயில்! இத்தனை சேவைகளா! இவ்வளவு வசதிகளா!
கோயம்புத்தூர்: இந்திய ரயில்வேயில் புதிய சகாப்தமாக உருவெடுத்துள்ளது வந்தே பாரத். உலக நாடுகள் பல அதிநவீன வசதிகளோடு ரயில்வேயை நடத்தும் போது இந்தியாவில் மட்டும் அப்படிப்பட்ட ரயில்கள் இல்லையே என்ற குறையை போக்கியது வந்தே பாரத் ரயில்கள்தான்.
தமிழ்நாட்டில் சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களுக்கு வந்தே பாரத் ரயில் சேவை உள்ளது. சென்னை ரயில்வே தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் இந்த வந்தே பாரத் ரயிலுக்கு "ரயில் 18" என்ற பெயரும் உண்டு.2018ல் தான் இந்த ரயில் முதலில் உற்பத்தி செய்யப்பட்டது என்பதால் வந்த பெயர் அது! அதோடு இல்லாமல் வெறும் 18 மாதங்களில் முதல் வந்தே பாரத் ரயிலின் கட்டுமானம் முடிந்து பயன்பாட்டிற்கும் வந்தது என்றால் நம்ப முடிகிறதா? ஆம்.. கிட்டத்தட்ட ஆங்கிலேயர் காலத்தில் இருந்து மாறாமல் இருந்த ரயில் வடிவமைப்பை மாற்ற தேவைப்பட்டது எல்லாம் வெறும் 18 மாதங்கள்தான்!

கடந்த ஆண்டு (2023) ஏப்ரல் 8 ம் தேதி கோவை - சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் தமிழ்நாட்டில் முதல்முறையாக செயல்பாட்டிற்கு வந்தது. அப்போதில் இருந்து இப்போது வரை மக்கள் கூட்டம் இந்த ரயிலில் அலைமோதிக்கொண்டு இருக்கிறது. சுத்தமான இருக்கை, நல்ல உணவு, சவுகரியமான பயணம், ஐந்தரை மணி நேரத்தில் கோவையில் இருந்து சென்னை பயணம் என்று இந்த ரயிலின் அம்சங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். அதிலும் இந்த ரூட்டில் செல்லும் ரயிலுக்கு வேறு ஒரு சிறப்பும் உண்டு.. சென்னையில் இரண்டரை மணி நேரம் வந்தே பாரத் ரயில் ( ஹால்ட்) காத்திருப்பதால், பயணிகள் தங்கள் வேலையை முடித்துவிட்டு அதே நாளில் மீண்டும் வீட்டுக்கு திரும்ப வாய்ப்பும் உள்ளது. அந்த அளவிற்கு முறையாக இதன் பயண அட்டவணை திட்டமிடப்பட்டு உள்ளது.
கோவையில் முதலில் தொடங்கப்பட்டு அதன்பின் வரிசையாக பல மாவட்டங்களுக்கு இந்த ரயில் தமிழ்நாட்டில் விரிவுபடுத்தப்பட்டது. கோவை - சென்னை - கோவை வந்தே பாரத் வழித்தடம் தவிர தமிழ்நாட்டில் மேலும் ஐந்து வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது.
சென்னை - மைசூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படுகிறது. பெங்களூர் வழியாக செல்லும் இந்த ரயிலுக்கு மக்களிடையே அமோக வரவேற்பு உள்ளது. பெங்களூருக்கு சென்னையில் இருந்து வேகமாக செல்ல இதைவிட சிறந்த வழி இல்லை. 4.15 மணி நேரத்தில் சென்னையில் இருந்து இந்த ரயிலில் பெங்களூர் சென்றடைய முடியும். பிரபலமான திருநெல்வேலி - மதுரை- சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் தமிழ்நாட்டின் முக்கிய ஆன்மீக நகரங்களுக்கிடையே இணைப்பை வழங்கும் வகையில் தொடங்கப்பட்டு உள்ளது.
வந்தே பாரத் ரயில் மட்டுமின்றி மொத்தமாக ரயில்வே ரீதியாகவும் தமிழ்நாடு இந்த முறை நல்ல பலன்களை பெற்றுள்ளது. உதாரணமாக 2024-25 நிதியாண்டில் பல்வேறு ரயில்வே மேம்பாட்டுத் திட்டங்களுக்காக, தமிழ்நாட்டிற்கு மட்டும் 6 ஆயிரத்து 331 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இது தெற்கு ரயில்வேவிற்கான மொத்த ஒதுக்கீட்டில் கிட்டத்தட்ட 50 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. ரயில்வேயின் கவனம் மொத்தமாக தமிழ்நாட்டை நோக்கி திரும்பி உள்ளதையே இது காட்டுகிறது.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க.. இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் என்று பார்த்தால் அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டம்தான். இந்த திட்டத்தின் கீழ் மாநிலத்தில் உள்ள 72 ரயில் நிலையங்களை சீரமைக்கவும், அடிப்படை தேவைகளை தாண்டிய கூடுதல் நவீன வசதிகளை வழங்கவும் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் நம்முடைய பழைய நிலையங்கள் பல புதுப்பொலிவு பெற போகின்றன.
அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தை (2023 ) கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் காணொளி காட்சி வாயிலாக பிரதமர் தொடங்கி வைத்த போது சொன்ன விஷயத்தை இப்போது நினைவு கூற வேண்டும்.. இந்த திட்டம் ரயில் பயணத்தை எளிதாக்குவதோடு மக்களுக்கான அடிப்படை வசதிகள், கூடுதல் வசதிகளையும் அளிக்கும் என்று கூறினார். அதன்படியே நாடு முழுக்க உள்ள ரயில் நிலையங்கள் பல இந்த திட்டம் மூலம் புனரமைக்கப்பட்டு வருகின்றன.
இந்த திட்டத்தின் மூலம், நாடு முழுதும் 508 ரயில் நிலையங்கள் 24 ஆயிரத்து 470 கோடி ரூபாய் செலவில், பயணிகளுக்கு நவீன வசதிகளை வழங்கும் வகையில் புதுப்பிக்கப்படும். ஆதிகாலத்தில் கட்டப்பட்டது போல இருக்கும் பழைய நிலையங்கள் அப்படியே புதிய தோற்றம் பெறும். பயணிகள் எளிதாக உள்ளே வெளியே செல்ல, விமான நிலையம் போன்ற தோற்றம், நவீன வசதிகள், டிஜிட்டல் முறையில் பலகைகள் உள்ளிட்ட வசதிகள் என்று இந்த ரயில் நிலையங்கள் மாறப் போகின்றன.
கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் கட்டிடக்கலையை பிரதிபலிக்கும் விதமாக ரயில் நிலைய கட்டிடங்கள் மாற்றப்படும் என்று பிரதமர் மோடி உறுதி அளித்ததன் படி இதன் கட்டுமான வடிவமைப்புகள் உருவாக்கப்பட்டு மக்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளன.
மலை.. யானை.. ரயில் என்பார்கள்.. ஆம் ரயில் பயணத்தை விரும்பாதவர்கள் இருக்க முடியுமா. அதிலும் இந்தியா போன்ற பெரிய நாட்டில் ரயில் பயணம் என்பது மக்களுக்கு மிகவும் விருப்பமானது மட்டுமல்ல செலவு குறைவான போக்குவரத்து வழிமுறையாகவும் இருக்கிறது. இப்படிப்பட்ட மக்களுக்கு சிறப்பான, முறையான ரயில் சேவையை வழங்கவே மத்திய அரசின் வந்தே பாரத் ரயில்கள் மற்றும் அம்ரித் பாரத் ரயில் நிலையங்கள் போன்ற முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு உள்ளன.
சாதாரண மனிதனும் உலகத் தரத்திலான வசதிகளை பெற வழி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ள வந்தே பாரத் ரயில்கள் மற்றும் அம்ரித் பாரத் ரயில் நிலையங்கள் மக்களிடையே அசத்தலான வரவேற்பை பெற்றுள்ளன. இந்த ரயிலில் பயணிக்கும் மக்களின் முகத்தில் தோன்றும் சிரிப்பும், ஆசுவாசமுமே இந்த திட்டத்திற்கு கிடைத்த இணையில்லா சான்றிதழ் ஆகும்!












Click it and Unblock the Notifications